பாடியவர்: குடவாயில் கீரத்தனார் (242). குடவாயில் என்பது சோழநாட்டில் இருந்த ஓரூர். கீரத்தனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் குடவாயிலைச் சார்ந்தவராக இருந்ததால், இவர் குடவாயில் கீரத்தனார் என்று அழைக்கப்பட்டார். இவர் குடவாயிலைச் சார்ந்தவரானாலும், பல ஊர்களுக்கும் சென்று புரவலர் பலரையும் கண்டு வந்தார். ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவன் இவருக்கு நன்கு தெரிந்தவன். ஆகவே, அவன் இறந்ததால் புலவர் குடவாயில் கீரத்தனார் பெரும் வருத்தமுற்று இப்பாடலை இயற்றியுள்ளார். புறநானூற்றில் அவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் (243). ஒல்லையூர் என்பது புதுக்கோட்டை அரசின் கீழ் இருந்த ஊர்களில் ஒன்று என்றும் இப்பொழுது அவ்வூர் ஒலியமங்கலம் என்று அழைக்கப்படுவதாகவும், அவ்வூரைச் சுற்றியுள்ள பகுதி ஒல்லையூர் நாடென்று அழைக்கப்பட்டதாகவும் அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார். இந்த ஒல்லையூரில் வாழ்ந்த கிழான் என்பவனின் மகன் பெருஞ்சாத்தன். அவன் வீரத்திலும் கொடையிலும் சிறந்து விளங்கினான்.
பாடலின் பின்னணி: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இறந்ததைக் கண்ட புலவர் குடவாயில் கீரத்தனார் மிகவும் வருந்தினார். தம் வருத்தத்தை வெளிப்படுத்தும் வகையில், ஒரு முல்லைக் கொடியைப் பார்த்து, “ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இறந்ததால், அனைவரும் பெருந்துயரத்தில் உள்ளனர். இந்நேரத்தில் நீ பூத்திருக்கிறாயே? யார் உன் பூக்களைச் சூடப் போகிறார்கள்?” என்று இப்பாடலில் புலவர் குடவாயில் கீரத்தனார் கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.
இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
5 வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?
அருஞ்சொற்பொருள்:
2. மருப்பு = யாழின் தண்டு. 4. கடந்த = வென்ற . 5. மாய்ந்த = இறந்த; பின்றை = பிறகு.
கொண்டு கூட்டு: சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ; இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ; பாணன் சூடான் ; பாடினி அணியாள் எனக் கூட்டுக.
உரை: முல்லையே! தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு பகைவர்களின் வீரர்களைக் கொன்ற, வலிய வேலையுடைய சாத்தன் இறந்த பிறகு, ஒல்லையூர் நாட்டில் பூத்தாயோ? இனி, இளைய ஆடவர்கள் உன் பூக்களைச் சூடிக்கொள்ள மாட்டார்கள்; வளையல் அணிந்த மகளிரும் உன் பூக்களைப் பறிக்க மாட்டார்கள்; நல்ல யாழின் தண்டால் மெதுவாக வளைத்துப் பறித்து உன் பூக்களைப் பாணனும் சூடமாட்டன்; பாடினியும் சூடமாட்டாள்.
சிறப்புக் குறிப்பு: ”இயற்கையைப் பார்த்து கவிஞர் கேட்கும் இக்கேள்வி சாத்தன் பால் அவன் ஊர் மக்களும் அவன் புரந்த பாணரும் பாடினியரும் கவிஞரும் கொண்டிருந்த பேரன்பையும் அவன் ஊராரிடம் பெற்றிருந்த புகழையும் ஆறு வரிகளில் எடுத்துக்காட்டும் இச்சிறு பாடல் ஒரு பெருங்காவியம் செய்யும் வேலையைச் செய்துவிடுகிறது” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடைய அறிஞர் ப. மருதநாயகம், “புதுப்பார்வைகளில் புறநானூறு” என்ற தம்முடைய நூலில் கூறுகிறார்.
Monday, April 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சமீபத்தில் (மார்ச் 8, 2015), பரதநாட்டியக் கலைஞர் அலர்மேல்வள்ளி, இப்பாடலுக்கும் மேலும் சில சங்க காலப் பாடல்களுக்கும் அபிநயம் செய்தார் (சென்னை மியுசிக் அகாதமியில்). இப்பாடலுக்கான அபிநயம் கண்டு நெகிழ்ந்து போனேன். பொருள் விளக்கத்திற்கு நன்றி.
சீ பாலகிருஷ்ணன்
krishnanbala2004@yahoo.co.in
சமீபத்தில் (மார்ச் 8, 2015), பரதநாட்டியக் கலைஞர் அலர்மேல்வள்ளி, இப்பாடலுக்கும் மேலும் சில சங்க காலப் பாடல்களுக்கும் அபிநயம் செய்தார் (சென்னை மியுசிக் அகாதமியில்). இப்பாடலுக்கான அபிநயம் கண்டு நெகிழ்ந்து போனேன். பொருள் விளக்கத்திற்கு நன்றி.
சீ பாலகிருஷ்ணன்
krishnanbala2004@yahoo.co.in
Post a Comment