Monday, March 21, 2011

235. அருநிறத்து இயங்கிய வேல்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமானின் வள்ளல் தன்மையை நன்கு அறிந்தவர் அவ்வையார். ”அதியமானின் நெஞ்சில் பாய்ந்த வேல் அவனைக் கொன்றது மட்டுமல்லாமல், இரவலர்களின் பாத்திரங்களைத் துளைத்து, அவர்களின் கைகளைத் துளைத்து, பாடும் பாணர்களின் நாவையும் துளைத்தது. இனி, நாட்டில் பாடுவோரும் இல்லை; பாடுவோர்க்கு ஈவோரும் இல்லை” என்று கூறி, அதியமான் இறந்ததால் தான் அடைந்த அளவற்ற துயரத்தை இப்பாடலில் அவ்வையார் வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே;
5 பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே;
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே;
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே;
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே;
10 அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல்நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்றுஅவன்
15 அருநிறத்து இயங்கிய வேலே;
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்குஒன்று
20 ஈயாது வீயும் உயிர்தவப் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1. மன் - இரங்கல் பொருளில் - அது போய்விட்டதே என்ற பொருளில் - பலமுறை கூறப்பட்டுள்ளது. 4. நனி = மிக. 6. தடி = தசை. 8. நரந்தம் = நறுமணம். 9. புலவு = புலால்; தைவரல் = தடவல். 10. இரும் = பெரிய; மண்டை = இரப்போர் பாத்திரம்; உரீஇ = உருவி. 12.பாவை = கருவிழி; புன்கண் = துன்பம். 13. நுண் தேர்ச்சி = நுண்ணிய ஆராய்ச்சி. 15. நிறம் = மார்பு; இயங்கிய = துளைத்த. 16. ஆசாகு = ஆசு ஆகு = பற்றுக்கோடு. 18. பகன்றை = ஒரு செடி; பகன்றை மலர் = சூடுவதற்கு பயன்படுத்தாத ஒருமலர்; நறை = தேன். 20. தவ = மிக.

உரை: சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பலரோடும் பகிர்ந்து உண்பான். பெருமளவு சோறு இருந்தால், அதையும் மிகப் பலரோடு கலந்து உண்பான். எலும்போடு கூடிய தசை கிடைத்தால் அதை எமக்கு அளிப்பான். அம்புடன் வேல் தைக்கும் போர்க்களமானால் தானே சென்று நிற்பான். நறுமணமுள்ள தன் கையால் புலால் மணக்கும் என் தலையை அன்போடு தடவுவான். இவையெல்லாம் கழிந்தன.

அவன் மார்பைத் துளைத்த வேல் பெரிய பாணர் கூட்டத்தினரின் அகன்ற பாத்திரங்களை ஊடுருவிச் சென்று, இரப்போர் கைகளையும் துளைத்து, அவனால் பாதுகாக்கப்படும் சுற்றத்தாரின் துன்பம் மிகுந்த கண்களில் ஒளி மழுங்க, அழகிய சொல்லும் ஆராய்ந்த ஆறிவும் உடைய புலவர்களின் நாவிலும் சென்று வீழ்ந்தது. எமக்குப் பற்றுக்கோடாக இருந்தவன் இப்பொழுது எங்குள்ளானோ? இனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோருக்கு ஒன்று ஈவோரும் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள தேனொழுகும் பெரிய பகன்றை மலரைச் சூடுவோர் இல்லாததுபோல் பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் வாழ்ந்து இறப்பவர் மிகப் பலர்.

No comments: