பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார் (227). சங்க காலத்தில் சோழ நாட்டில் ஆவடுதுறை என்று ஒரு ஊர் இருந்தது. அவ்வூரின் பெயர் பிற்காலத்தில் ஆடுதுறை என்று மருவியதாகக் கருதப்படுகிறது. இப்புலவர் அந்த ஆவடுதுறையைச் சார்ந்தவர். சாத்தனார் என்பது இவர் இயற்பெயர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவன் இறந்ததை அறிந்த சாத்தனார் மிகவும் வருத்தம் அடைந்தார். ”கூற்றுவனே! நீ உன் அறிவின்மையின் காரணத்தால் கிள்ளிவளவனைக் கொன்றாய். உன் செயல், வறுமையில் வாடும் உழவன் விதைக்காக வைத்திருந்த நெல்லை உணவாக்கி உண்டது போன்ற செயல். நீ அவனைக் கொல்லாது இருந்திருப்பாயாயின், அவன், நாளும் போர்க்களத்தில் பகைவர்கள் பலரைக் கொன்று உன் பசியைத் தீர்த்திருப்பான். இப்பொழுது யார் உன் பசியைத் தீர்ப்பர்?” என்று இப்பாடலில் ஆடுதுறை மாசாத்தனார் நயம்படக் கூற்றுவனைச் சாடுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.
நனிபே தையே நயனில் கூற்றம்
விரகுஇன் மையின் வித்துஅட்டு உண்டனை;
இன்னுங் காண்குவை நன்வாய் ஆகுதல்
ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும்
5 குருதியும் குரூஉப்புனற் பொருகளத் தொழிய
நாளும் ஆனான் கடந்துஅட்டு என்றுநின்
வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
10 இனையோற் கொண்டனை ஆயின்,
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?
அருஞ்சொற்பொருள்:
1. நனி = மிக; நயன் = நன்மை, நடுவு நிலைமை. 2. விரகு = அறிவு (சாமர்த்தியம்); அடுதல் = சமைத்தல்; வித்து அட்டு = விதையை உணவாகச் சமைத்து. 3. நன்வாய் = சொல்லிய சொற்கள் நல்ல மெய்யாதல். 5. குரூஉ = ஒளி, நிறம். 6. ஆனான் = அளவு இல்லாதவன் (அடங்காதவன்). 6. கடத்தல் = வெல்லுதல். 8. நின்னோர் அன்ன = உனக்கு ஒப்பான. 9. மூசல் = மொய்த்தல்; கண்ணி = மாலை. 10. இனையோன் = இத்தன்மையானவன்.
கொண்டு கூட்டு: கூற்றமே, இத்தன்மையோனைக் கொண்டாயாயின், நின் பசியைத் தீர்ப்போர் இனி யார்? விரகின்மையின் வித்துண்டனை; நன்வாயாகுதல் இன்னும் காண்குவை எனக் கூட்டுக.
உரை: மிகவும் அறிவற்ற, நடுவு நிலைமையற்ற கூற்றமே! அறிவில்லாததால், நீ விளைச்சளைத் தரும் விதையைச் சமைத்து உண்டாய். இச்சொற்களின் உண்மையை நீ நன்கு அறிவாய். ஓளியுடைய வாளையுடைய வீரர்களும், யானைகளும், குதிரைகளும் போர்க்களத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்தன. அவ்வாறு இறந்தும், அமையாதவனாய், நாள்தோறும் பகைவர்களின் படைகளை வென்று அழித்து, உன்னை வாட்டும் பசியைத் தீர்க்கும் பழியற்ற ஆற்றல் உடையவனாகிய, உன்னைப்போல் பொன்னாலான பெரிய அணிகளை அணிந்த வளவன் என்னும் வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்த கிள்ளிவளவனின் உயிரைப் பறித்தாய். இனி உன் பசியைத் தீர்ப்பவர் யார்?
Monday, March 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பாடலும் உங்கள் விளக்கமும் அருமை..
Post a Comment