Monday, March 21, 2011

233. பொய்யாய்ப் போக!

பாடியவர்: வெள்ளெருக்கிலையார் (233, 234). வெள்ளெருக்கின் இலையைச் சிறப்பித்துப் பாடியதால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் வேளிர் குலத்தில் தோன்றிய வேள் எவ்வி என்ற வள்ளலிடம் மிகுந்த அன்புடையவராக இருந்தார். அவ்வள்ளல் இறந்த பின்னர் தம் வருத்தத்தை புறநானூற்றில் இரண்டு பாடல்கள் வழியாகக் கூறுகிறார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி. இவன், வேள் பாரியைப் போல் வேளிர் குலத்தில் தோன்றியவன். இவன் நீடூர் என்னும் ஊரிலிருந்து ஆட்சி செய்தான். நீடூர் என்னும் ஊர் அறந்தாங்கி வட்டத்துத் தென்பகுதியையும் இராமநாதபுர வட்டத்தின் கீழ்ப்பகுதியையும் தன்னுள்ளே கொண்டது என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவன் சிறந்த வாட்படையும் வேற்படையும் கொண்டவனாக இருந்தான். இவன் புலவர்களையும் பாணர்களையும் பெரிதும் ஆதரித்து அவர்களிடம் பேரன்பு கொண்டவனாகவும் இருந்தான்.
பாடலின் பின்னணி: பண்டைக் காலத்தில் அகுதை என்று ஒருமன்னன் கூடல் என்ற கடல் சார்ந்த ஊருக்குத் தலைவனாக இருந்து ஆட்சி புரிந்துவந்தான். அவனிடத்துப் இரும்பினால் செய்யப்பட்ட சக்கரம் போன்ற ஆயுதம் தாங்கிய படை (சக்கரப்படை) ஒன்று இருப்பாதாகவும், அது மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்றும், அது அவனிடம் இருக்கும்வரை அவனை யாராலும் வெல்ல முடியாது என்றும் அனைவரும் நம்பினர். அந்தச் சக்கரப்படையைப் பற்றிய செய்தி நன்கு பரவி இருந்தது. அதனால் பகைவர் அனைவரும் அவனிடம் அஞ்சினர். முடிவில், ஒரு போரில் அகுதை கொல்லப்பட்டன். அவனிடம் ஆற்றல் மிகுந்த சக்கரப்படை இருந்தது என்ற செய்தி பொய்யாகியது.

போரில் வேள் எவ்வி மார்பில் புண்பட்டான் என்று புலவர் வெள்ளெருக்கிலையார் கேள்விப்பட்டார். அவன் மீது அவருக்கு இருந்த பேரன்பின் காரணத்தால் அவன் புண்பட்டான் என்ற செய்தி அகுதையிடம் சக்கரப்படை இருந்தது என்ற செய்தியைப்போல் பொய்யாகட்டும் என்று விரும்பினார். அவர் தம் கருத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ
5 இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண்
போர்அடு தானை எவ்வி மார்பின்
எஃகுஉறு விழுப்புண் பலஎன
வைகுறு விடியல் இயம்பிய குரலே.

அருஞ்சொற்பொருள்:
2. பாவடி = பா + அடி = பரவிய அடி (யானையின் பரந்து அகன்ற பாதம்). 4. பொன் = இரும்பு. 7. எஃகு = வேல். 8. வைகுறு = வைகறை (விடியற் காலம்)

கொண்டு கூட்டு: திகிரியின் பொய்யாகியர், விடியல் இயம்பிய குரல் பொய்யாகியர் எனக் கூட்டுக.

உரை: பெரிய பாதங்களையுடைய யானைகளைப் பரிசிலருக்குக் குறையாது வழங்கிய சிறந்த, வலிய முயற்சியையுடைய அகுதையிடத்துச் சக்கரப்படை இருந்தது என்ற செய்தி பொய்யாகியதுபோல் , பெரிய பாண் சுற்றத்துக்கு முதல்வனும், மிகுந்த அனிகலன்களை அணிந்து, போரில் பகைவரை அழிக்கும் பெரிய படையையுடயவனுமாகிய வேள் எவ்வி, வேலால் மார்பில் பல விழுப்புண்கள் உற்றான் என்று இன்று அதிகாலையில் வந்த செய்தியும் பொய்யாகட்டும்.

No comments: