Monday, March 7, 2011

226. திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 37-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் கிள்ளிவளவன் குளமுற்றம் என்னும் இடத்தில் இறந்தான். அவன் இறந்ததைக் கேள்வியுற்ற மாறோக்கத்து நப்பசலையாரால் அவன் இறந்தான் என்பதை நம்ப முடியவில்லை. “கிள்ளிவளவன் ஆண்மையும் வலிமையும் மிகுந்தவனாதலால், கூற்றுவன் கிள்ளிவளவனிடம் பகைமை காரணத்தாலோ, கோபத்தாலோ அல்லது நேரில் வந்தோ அவன் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியாது. பாடுவோர் போல் வந்து தொழுது பாராட்டி வஞ்சகமாகத்தான் கிள்ளிவளவனின் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியும்.” என்று இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும்; பொலந்தார்
5 மண்டமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!

அருஞ்சொற்பொருள்:
1. செற்றம் = நெடுங்காலமாக உள்ள பகை; மனக்கறுவம்; செயிர்த்தல் = சினங்கொள்ளுதல். 2. உற்றன்று = உற்றது; உறுதல் = மெய்தீண்டல்; உய்வின்று = தப்பும் வழியில்லை; மாதோ – அசைச் சொல்; 4. பொலம் = பொன்; தார் = மாலை. 5. மண்டுதல் = உக்கிரமாதல்; உக்கிரம் = கொடுமை, கோபம். 6. கூற்று = இயமன்.

கொண்டு கூட்டு: பாடுநர் போலக் கூற்றம் கைதொழுது ஏத்தி, இரந்தன்று ஆகல் வேண்டும்; இன்றேல் உய்வின்று எனக் கூட்டுக.

உரை: பொன்மாலையையும், உக்கிரமாகப் போரில் பகைவரை அழிக்கும் படையையும், திண்மையான தேரையும் உடைய கிள்ளிவளவனின் உயிரைக் கொண்ட கூற்றுவனே! பகைமை உணர்வோடோ, சினங்கொண்டோ அல்லது நேரில் வந்து கிள்ளிவளவனிடம் போரிட்டோ அவன் உயிரைக் கொண்டு செல்ல முயன்றிருந்தால் நீ தப்பியிருக்க வழியில்லை. பாடுவோர் போல் வந்து தொழுது வணங்கி அவனை இரந்து கேட்டுத்தான் அவன் உயிரை நீ கொண்டு சென்றிருக்க வேண்டும்.

சிறப்புக் குறிப்பு: செற்றும் செயிர்த்தும் உற்றும் கிள்ளிவளவனின் உயிரைக் கூற்றுவன் கொண்டு சென்றிருக்க முடியாது என்பது அவன் ஆண்மை மிகுதியைக் குறிக்கிறது. பாடுநர் போல வந்து கைதொழுது ஏத்தி இரந்துதான் கிள்ளிவளவனின் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியும் என்பது அவன் வள்ளல் தன்மையைக் குறிக்கிறது.

No comments: