Monday, March 21, 2011

231. புகழ் மாயலவே!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சி அவ்வையாரிடத்து மிகுந்த அன்பு கொண்டவனாக இருந்தான். அவனுடைய அவைக்களத்தில் புலவராக இருந்தது மட்டுமல்லாமல், அவ்வையார் அதியமானின் தூதுவராகவும் பணியாற்றினார். இருவரும் மிகுந்த நட்புடன் இருந்ததாகப் புறநானூற்றிலுள்ள பல பாடல்கள் கூறுகின்றன. அதியமான் இறந்த பிறகு அவன் உடலை தீயிலிட்டு எரித்தார்கள். அதைக் கண்ட அவ்வையார் துயரம் தாங்காமல், அதியமான் உடல் அழிந்தாலும் அவன் புகழ் எப்பொழுதும் அழியாது என்று இப்பாடலில் வருத்தத்துடன் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

எறிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்அழல்,
குறுகினும் குறுகுக; குறுகாது சென்று
விசும்புறு நீளினும் நீள்க; பசுங்கதிர்த்
5 திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே.

அருஞ்சொற்பொருள்:
1. எறிதல் = வெட்டல்; எறி = வெட்டிய; புனம் = கொல்லை; குறவன் = குறிஞ்சி நிலத்தில் வசிப்பவன்; குறையல் = மரத்துண்டு. ஈமம் = பிணத்தை எரிப்பதற்கு அடுக்கிய விறகுகளின் அடுக்கு; அழல் = தீக்கொழுந்து, நெருப்பு. 6. மாய்தல் = அழிதல்.

உரை: தினைப்புனத்தில், குறவன் ஒருவனால் வெட்டப்பட்ட அரைகுறையாக எரிந்த மரத்துண்டுகள் போல் கரிய நிறமுள்ள மரத்துண்டுகள் அதியமானின் உடலை எரிப்பதற்காக அடுக்கப்பட்டுத் தீ மூட்டப்பட்டுள்ளன. ஒளிநிறைந்த அந்த ஈமத்தீ அவன் உடலை நெருங்கினாலும் நெருங்கட்டும்; நெருங்காமல், வானளாவ நீண்டு பரவினாலும் பரவட்டும். குளிர்ந்த திங்களைப் போன்ற வெண்கொற்றக்குடையை உடையவனும், ஓளிபொருந்திய ஞாயிறு போன்றவனுமாகிய அதியமானின் புகழ் அழியாது.

சிறப்புக் குறிப்பு: பாடல் 228 – இல் இறந்தவர்களின் உடலைத் தாழியில் வைத்துப் புதைப்பதை பற்றிக் கூறப்பட்டது. இப்பாடலில், இறந்தவர்களின் உடலை எரிப்பதைப் பற்றிக் கூறபட்டுள்ளது. ஆகவே, சங்க காலத்தில், இறந்தவர்களின் உடலை எரிப்பதும் புதைப்பதும் ஆகிய இரண்டும் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.

No comments: