பாடியவர்: அரிசில் கிழார் (146, 230, 281, 285, 300, 304, 342). இவர் அரிசில் என்னும் ஊரைச் சார்ந்தவர். அரிசில் என்னும் ஊர் கொள்ளிடத்தின் வடக்குப் பக்கம் உள்ள அரியிலூர் என்னும் ஊர் என்று பழைய உரையாசிரியர் குறிப்பிடுகிறார். வேறு சிலர், குடந்தை அருகே ஓடும் அரசலாறு பண்டைக் காலத்தில் அரிசில் ஆறு என்று அழைக்கப்பட்டது என்றும் அரிசில் என்னும் ஊர் அவ்வாற்றின் கரையே இருந்த ஊர் என்றும் கருதுவர். இவர் கிழார் என்று அழைக்கப்படுவதிலிருந்து இவர் வேளாண் மரபினர் என்பது தெரியவருகிறது. இவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக் காலத்து வாழ்ந்தவர். இவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பதிற்றுப்பத்தில் எட்டாம் பதிகத்தில் புகழந்து பாடியுள்ளார். பதிற்றுப்பத்தில் இவர் இயற்றிய செய்யுட்களால் பெருமகிழ்ச்சி அடைந்த சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை இவருக்குத் தன் நாட்டையும் ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தான். ஆனால், இவர் சேர நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளாமல், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராகப் பணி புரிந்ததாகக் கூறப்படுகிறது.
இவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராக இருந்த பொழுது, அதியமான் நெடுமான் அஞ்சியிடம் சென்று சேரனின் படைவலிமையை எடுத்துரைத்து, அதியமானுக்கும் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் நடக்கவிருந்த போரைத் தடுக்க முயன்றார். இவர் முயற்சி வெற்றி பெறவில்லை. சேரமானுக்கும் அதியமானுக்கும் போர் மூண்டது. அப்போரில் அதியமான் தோல்வியுற்றான்.
இவர் பதிற்றுப்பத்தில் எட்டாம் பதிகமும், புறநானூற்றில் ஏழு செய்யுட்களும், குறுந்தொகையில் ஒரு செய்யுளும் (193) இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி. உரைவேந்தர் அவ்வை துரைசாமிப் பிள்ளை அவர்கள் “தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்த அதியமான்களுள் எழினி என்பான் ஒருவன்” என்று தம் நூலில் குறிப்பிடுகிறார். ”அதியமான் எழினி என்பவனும் அதியமான் நெடுமான் அஞ்சி என்பவனும் ஒருவனா அல்லது அதியமான் பரம்பரையைச் சார்ந்த வேறுவேறு மன்னர்களா?” என்பது ஆய்வுக்குரியது.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமான் நெடுமான் அஞ்சியுடன் போர்புரிந்து அவனை வென்றான் என்ற செய்தி பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தின் பதிகத்தில் கூறப்பட்டுள்ளது. மற்றும், வரலாற்று ஆசிரியர்களிடத்தில் ( K.A. நீலகண்ட சாஸ்திரி, N.சுப்பிரமணியன், முனைவர் கோ. தங்கவேலு, டாக்டர் பொன். தங்கமணி போன்றவர்களிடத்தில்) சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரில் போர் புரிந்தபோது தகடூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி என்பதில் கருத்து வேறுபாடு காணப்படவில்லை. அவ்வை சு. துரைசாமிப் பிள்ளையும் புறநானூற்றுப் பாடல் 87க்கு எழுதியுள்ள முன்னுரையில், அதியமான் நெடுமான் அஞ்சி, சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையுடன் போரிட்டுத் தோல்வியுற்று உயிர் துறந்தான் என்று குறிப்பிடுகிறார்.
அரிசில் கிழார் பதிற்றுப்பத்தில் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடிப் பரிசு பெற்றார் என்று கூறப்படுகிறது. அவர், புறநானூற்றில் 230-ஆம் பாடலில் அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினியையும் பாடியிருப்பதால் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி மற்றும் அரிசில் கிழார் ஆகிய மூவரும் சமகாலத்தவர் என்பது தெளிவு. சேரமான் பெருஞ்சேரல் தகடூரில் போர் செய்த பொழுது இரண்டு அதியமான்கள் அங்கு ஆட்சி செய்திருக்க முடியாது. ஆகவே, அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி என்பவனும், அதியமான் நெடுமான் அஞ்சியும் ஒருவனாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
அதியமான் நெடுமான் அஞ்சியும் அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி என்பவனும் ஒருவனே என்பதற்கு இன்னும் ஒரு சான்றும் உள்ளது. புறநானூற்றுப் பாடல் 158-இல், புலவர் பெருஞ்சித்திரனார் கடையெழு வள்ளல்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி என்று எழுவரைக் குறிப்பிடுகிறார். சிறுபாணாற்றுப்படையில் கடையெழு வள்ளல்கலைக் குறிப்பிடும் பொழுது, அதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார், முறையே பேகன், பாரி, காரி, ஆய் அண்டிரன், அவ்வைக்கு நெல்லிக் கனி கொடுத்த அதிகன், நள்ளி, ஓரி என்ற எழுவரைக் குறிப்பிடுகிறார். அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகன் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, கடையெழுவள்ளல்களுள் ஒருவனாகிய அதியமான் நெடுமான் அஞ்சி, எழினி என்றும் அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதுகாறும் காட்டிய சான்றுகளால் அதியமான் நெடுமான் அஞ்சி என்பவனும் அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி என்பவனும் ஒருவனே என்பதும் இப்பாடலில் பாடப்பட்டோன் அதியமான் நெடுமான் அஞ்சி என்பதும் தெளிவாகப் புலனாகிறது.
பாடலின் பின்னணி: அரிசில் கிழார் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடியவர். அவர் அதியமானிடத்தும் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடத்தும் மிகுந்த அன்புடையவர். ஆகவே, அதியமான் இறந்ததற்காக, சேரனை இகழாமல், அது கூற்றுவன் செய்த தவறு என்று கூறி இப்பாடலில் தன் வருத்ததைத் தெரிவிக்கிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.
கன்றுஅமர் ஆயம் கானத்து அல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்
களம்மலி குப்பை காப்பில வைகவும்
விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்
5 வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்
பொய்யா எழினி பொருதுகளம் சேர
ஈன்றோள் நீத்த குழவி போலத்
தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
10 நோய்உழந்து வைகிய உலகிலும் மிகநனி
நீஇழந் தனையே அறனில் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்
வீழ்குடி உழவன் வித்துண் டாஅங்கு
ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின்
15 நேரார் பல்லுயிர் பருகி
ஆர்குவை மன்னோஅவன் அமர்அடு களத்தே.
அருஞ்சொற்பொருள்:
1. அமர்தல் = பொருந்துதல்; ஆயம் = கூட்டம்; கானம் = காடு; அல்கல் = தங்குதல். 2. வம்பலர் = புதியவர்; புலம் =இடம். 3. மலிதல் = மிகுதல், பெருகல்; குப்பை = குவியல்; வைகல் = தங்கல். 4. விலங்கு பகை = தடுக்கும் பகை; கடிதல் = தடை செய்தல். 5. வயங்குதல் = விளங்கல். 8. அமர் = விருப்பம். 9. இடும்பை = துன்பம். 13 வீழ்குடி = வளமில்லாத குடி. 15. நேரார் = பகைவர். 16. ஆர்கை = தின்னுதல்.
கொண்டு கூட்டு: எழினி, களஞ்சேர, ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின், அவன் அமரடு களத்துப் பல்லுயிரும் பருகி ஆர்குவை; அது கழிந்ததே எனக் கூட்டுக.
உரை: கன்றுகளுடன் கூடிய பசுக்களின் கூட்டம் காட்டிலே தங்கி இருக்கவும், வெப்பமிக்க வழியில் நடந்து வந்த வழிப்போக்கர்கள் தாம் விரும்பிய இடங்களில் அச்சமின்றித் தங்கவும், களத்தில் பெரிய நெற்குவியல்கள் காவலின்றிக் கிடக்கவும், எதிர்த்து வந்த பகையை அழித்து, நிலைகலங்காத செங்கோல் ஆட்சி புரிந்து, உலகம் புகழும் போரைச் செய்யும் ஒளி பொருந்திய வாளையுடைய, பொய் கூறாத எழினி போர்க்களத்தில் இறந்தான். பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தைபோல் தன்னை விரும்பும் சுற்றத்தார் வேறுவேறு இடங்களில் இருந்து வருந்த, மிக்க பசியால் கலக்கமடைந்த துன்பம் மிகுந்த நெஞ்சத்தோடு, அவனை இழந்து நாடு வருந்தியது. . அறமில்லாத கூற்றமே! நீ அதைவிட மிக அதிகமாக இழந்தாய். தன் வருங்கால வளமான வாழ்வுக்குத் தேவையான விளைச்சலைத் தரும் விதைகளைச் சமைத்து உண்ட வறுமையுற்ற குடியில் உள்ள உழவன்போல் இந்த ஒருவனது பெறுதற்கரிய உயிரை உண்ணாமல் இருந்திருப்பாயாயின், அவன் பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில் பல பகைவர்களுடைய உயிர்களை உண்டு நீ நிறைவடைந்திருப்பாய்.
Monday, March 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment