Monday, March 7, 2011

228. ஒல்லுமோ நினக்கே!

பாடியவர்: ஐயூர் முடவனார் ( 51, 228, 314, 399). இவர் ஐயூர் என்னும் ஊரினர். இவர் முடவராக இருந்தார் என்பது, தாமன் தோன்றிக்கோனைச் சென்றடைந்து, வண்டியை இழுத்துச் செல்வதற்கு காளைமாடுகள் வேண்டும் என்று இவர் பாடிய பாடலிலிருந்து (399) தெரியவருகிறது. இவர் ஆதன் எழினியையும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும் பாடியுள்ளார். இவர் அகநானூற்றில் ஒருசெய்யுளும் ( 216) , குறுந்தொகையில் மூன்று செய்யுட்களும் (123, 206, 322), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (206, 344) இயற்றியுள்ளார். இவர் பாடல்கள் அனைத்தும் மிகுந்த இலக்கிய நயமுடையவை.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவன் இறந்ததை அறிந்து வருந்திய சான்றோர்களில் ஐயூர் முடவனாரும் ஒருவர். ”கிள்ளிவளவன் பூத உடலை அடக்கம் செய்வதற்கு உன்னால் தாழி செய்ய முடியும். ஆனால், அவன் புகழுடம்பு மிகப்பெரியது. அதை அடக்கம் செய்வதற்கு ஏற்ற பெரிய தாழியை உன்னால் செய்ய முடியுமா?” என்று குயவன் ஒருவனைப் பார்த்து ஐயூர் முடவனார் கேட்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.
துறை: ஆனந்தப்பையுள். கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல் அல்லது இறந்தாரைக் கண்டு சுற்றத்தார் வருந்துதல் ஆகிய இரண்டும் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும்.

கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்திணிந் தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
5 அளியை நீயே; யாங்கா குவைகொல்?
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை
விரிகதிர் ஞாயிறு விசும்புஇவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
10 கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி,
வனைதல் வேட்டனை ஆயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
15 மண்ணா வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

அருஞ்சொற்பொருள்:
1. கலம் = மண்கலம்; கோ = வேட்கோ = குயவன்; 2. குரூ = நிறம் (கருமை நிறம்); திரள் = உருண்டை; பரூஉ = பருமை. 3. இரு = பெரிய; விசும்பு = ஆகாயம்; சூளை = மண்கலங்கலைச் சுடுமிடம். 4. நனந்தலை = அகன்ற இடம்; மூதூர் = பழமையான ஊர். 5. அளியை = இரங்கத் தக்கவன். 8. இவர்தல் = பரத்தல். 9. செம்பியர் மருகன் = சோழர்களின் வழித்தோன்றல். 10. நுடங்குதல் = அசைதல். 12. கவித்தல் = மூடுதல்; கண்ணகன் தாழி = இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பெரிய மண் பாத்திரம். 13. வேட்டல் = விரும்பல்; எனையதூஉம் = எப்படியும். 14. திகிரி = சக்கரம்; பெருமலை = இமயமலை; ஒல்லுமோ = முடியுமோ. 15. வனைதல் = செய்தல்.

கொண்டு கூட்டு: கலஞ்செய் கோவே, வளவன் தேவருலகம் எய்தினானாதலான், அன்னோற் கவிக்கும் தாழி வனைதல் வேட்டனையாயின் இருநிலம் திகிரியாக, மாமேரு மண்ணாக வனைதல் ஒல்லுமோ? ஒல்லாமையின் யாங்காகுவை; நீ இரங்கத்தக்கவன் எனக் கூட்டுக.

உரை: மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே! மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே! அகன்ற பெரிய ஆகாயத்தில், இருள் திரண்டாற் போல் பெருமளவில் புகை தங்கும் சூளையையுடைய பழைய ஊரில் மண்கலங்கள் செய்யும் குயவனே! கிள்ளிவளவன், நிலமெல்லாம் பரப்பிய மிகப் பெரிய படையையுடையவன்; புலவர்களால் புகழப்பட்ட பொய்மை இல்லாத நல்ல புகழையுடையவன். விரிந்த கதிர்களையுடைய ஞாயிறு, தொலைதூரத்தில், வானில் விளங்குவதைப்போல் சிறந்த புகழையுடைய சோழர் குலத்தின் வழித்தோன்றலாகிய கிள்ளிவளவன் கொடி அசைந்தாடும் யானைகளையுடையவன். அவன் தேவருலகம் அடைந்தான். அவனை அடக்கம் செய்வதற்கேற்ற பெரிய தாழியைச் செய்ய விரும்பினாய் என்றால் எப்படிச் செய்வாய்? பெரிய நில உலகத்தைச் சக்கரமாகவும், இமயமலையை மண்ணாகவும் கொண்டு உன்னால் அந்தத் தாழியைச் செய்ய முடியுமா? அத்தகைய தாழியைச் செய்வதற்கு நீ என்ன பாடு படுவாயோ? நீ இரங்கத் தக்கவன்.

சிறப்புக் குறிப்பு: ஆனந்தம் என்ற சொல்லுக்கு ”சாக்காடு” என்றும் ஒரு பொருள். பையுள் என்ற சொல்லுக்கு “துன்பம்” என்று பொருள். ஆகவே, ஒருவனுடைய இறப்பினால் அவன் சுற்றத்தாரோ அல்லது அவன் மனைவியோ வருந்துவதைப் பற்றிய பாடல்கள் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும் என்பது அறிஞர் கருத்து. இப்பாடலில், கிள்ளிவளவன் இறந்ததால் துன்பமுற்ற புலவர் ஐயூர் முடவனார் தம் வருத்தத்தை கூறுகிறார். அவர், அவனுடைய சுற்றத்தாருள் ஒருவர் என்பதற்கு ஏற்ற ஆதாரம் ஒன்றும் காணப்படாததால், இப்பாடல், கையறு நிலையைச் சார்ந்த மற்ற பாடல்களைப்போல், அரசன் இறந்ததால் புலவர் தம் வருத்தத்தைக் கூறும் ஒருபாடல். ஆகவே, இப்பாடலையும் கையறு நிலையைச் சார்ந்ததாகக் கருதலாம் என்று தோன்றுகிறது.

சங்க காலத்தில், இறந்தவர்களின் உடலைத் தாழியில் வைத்துப் புதைக்கும் வழக்கம் இருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

கிள்ளிவளவனின் பூத உடலை ஒரு தாழியில் வைத்துப் புதைத்தாலும், அவன் பெரும்புகழ் கொண்டவனாகையால், அவனுடைய புகழுடம்பை கொள்ளக்கூடிய அளவுக்குத் தேவையான பெரிய தாழி செய்ய முடியாது என்று கூறி, ஐயூர் முடவனார் கிள்ளிவளவனின் புகழை இப்பாடலில் பாராட்டுகிறார்.

1 comment:

சமுத்ரா said...

விளக்கம் அருமை..