Monday, January 24, 2011

220. கலங்கினேன் அல்லனோ!

பாடியவர்: பொத்தியார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 217-இல் காண்க.

பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பொத்தியாரும் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால், கோப்பெருஞ்சோழன், “உன் மனைவி கருவுற்றிருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறியதற்கேற்ப, பொத்தியார் வடக்கிருக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். அவர் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்க வந்தார். ஆனால், அதற்குள் கோப்பெருஞ்சோழன் இறந்துவிட்டான். அவனுக்கு நடுகல்லும் நட்டுவைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட பொத்தியார் மனம் கலங்கி அழுதார். தன்னுடைய செயலற்ற நிலையை, யானையை இழந்த ஒரு யானைப்பாகனோடு ஒப்பிட்டு இப்பாடலில் தன்னுடைய தாங்கமுடியாத வருத்தத்தைத் தெரிவிக்கிறார்.


திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்,
அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்
5 கலங்கினேன் அல்லனோ யானே, பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே?

அருஞ்சொற்பொருள்:
1. பயந்து = தந்து; புரத்த = பாதுகாத்த. 2. பைதல் = வருத்தம், 3. அல்கல் = தங்குதல்; அழுங்குதல் = வாய்விட்டு அழுதல்; ஆலை = யானைக் கூட்டம். 4. வெளில் = தறி, தூண்; கலுழ்தல் = அழுதல், கலங்கல். 6. கிள்ளி = சோழன். 7. மூதூர் = உறையூர்; மறம் = அவை; போகிய = சென்ற.

கொண்டு கூட்டு: மூதூர் மன்றம் கண்டு கலங்கினேன் அல்லனோ எனக் கூட்டுக.

உரை: பெருமளவில் சோற்றை அளித்துத் தன்னைப் பாதுகாத்துவந்த பெரிய யானையை இழந்த வருத்தம் மிகுந்த பாகன், அந்த யானை தங்கியிருந்த இடத்தில், தூண் வெறிதாய் இருப்பதைக் கண்டு அழுததைப்போல், பொன்மாலை அணிந்தவனும் தேர்களை வழங்குபவனும் ஆகிய சோழன் இல்லாத பெரும்புகழ்கொண்ட உறையூரின் அரசவையைக் கண்டு நானும் கலங்கினேன் அல்லனோ?

No comments: