Monday, January 24, 2011

218. சான்றோர் சாலார் இயல்புகள்!

பாடியவர்: கண்ணகனார் (218). இவர் கோப்பெருஞ்சோழனின் காலத்தவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே. இவர் நற்றிணையில் 79 – ஆம் செய்யுளையும் இயற்றியுள்ளார். மற்றும், இவர் பரிபாடலில் 21-ஆம் பாடலுக்கு இசை வகுத்தாகவும் கருதப்படுகிறது.

பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்த பிறகு பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலிருந்து சோழநாட்டிற்கு வந்து, கோப்பெருஞ்சோழன் உயிர் நீத்த இடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார். அதைக் கண்டு வியந்த புலவர் கண்ணகனார் தன்னுடைய உணர்வுகளை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
5 சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

அருஞ்சொற்பொருள்:
1. துகிர் = பவளம்; மன்னிய = நிலைபெற்ற. 2. பயந்த = தந்த; காமர் = விருப்பம். 3. தொடை = தொடுத்தல். 5. பால் = பக்கம்.

உரை: பொன், பவளம், முத்து, நிலைபெற்றப் பெரிய மலையிலிருந்து பெற்ற விரும்பத்தக்க மாணிக்கம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொலைவான இடங்களில் தோன்றியவையானாலும் பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களில் தொடுக்கும் பொழுது, அவை ஒரே இடத்தில் சேர்ந்திருக்கின்றன. அதுபோல, எந்நாளும் சான்றோர்கள் சான்றோர்களையே சேர்ந்திருப்பர். அத்தகைய உயர்ந்த குணங்கள் இல்லாதவர், உயர்ந்த குணங்கள் இல்லாதவர்களையே சேர்ந்திருப்பர்.

No comments: