Monday, January 10, 2011

213. நினையும் காலை!

பாடியவர்: புல்லாற்றூர் எயிற்றியனார். புல்லாற்றூர் என்பது காவிரியாற்றின் வடகரையில் உள்ள ஊர்களில் ஒன்று. எயிற்றியனார் என்பது இவர் இயற்பெயராக இருந்திருக்கலாம். இவர் புல்லாற்றுரைச் சார்ந்தவராக இருந்ததால் புல்லாற்றூர் எயிற்றியனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 212-இல் காண்க.
பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய மகன்களுக்குமிடையே இருந்த பகையின் காரணமாகப் போர் மூண்டது. அச்சமயம், புல்லாற்றுர் எயிற்றியனார், ”உன்னோடு போருக்கு வந்திருப்போர் சேரனோ பாண்டியனோ அல்லர். நீ இறந்த பிறகு உன் நாட்டை ஆளும் உரிமை பெறப்போகிறவர்கள் இப்போது உன்னோடு போரிட வந்திருக்கும் உன் புதல்வர்கள்தானே? போரில் உன் புதல்வர்கள் தோற்றால் உன் பெருஞ்செல்வத்தை யாருக்குத் தரப்போகிறாய்? நீ போரில் தோற்றால் பெரும்பழிதானே நிலைத்து நிற்கும்? அதனால், போரைக் கைவிடுவதே சிறந்ததாகும்.” என்று அறிவுரை கூறிப் போரைத் தடுத்து நிறுத்த முயன்றதாக இப்பாடலில் காண்கிறோம்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து
நின்தலை வந்த இருவரை நினைப்பின்
5 தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்
அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர்
நினையுங் காலை நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடுமான் தோன்றல்!
பரந்துபடு நல்லிசை எய்தி மற்று நீ
10 உயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும்
ஒழித்த தாயம் அவர்க்குஉரித்து அன்றே;
அதனால் அன்னது ஆதலும் அறிவோய், நன்றும்
இன்னும் கேண்மதி இசைவெய் யோயே!
நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
15 எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்
நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே?
அமர்வெஞ் செல்வ! நீஅவர்க்கு உலையின்
இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே;
அதனால், ஒழிகதில் அத்தைநின் மறனே! வல்விரைந்து
20 எழுமதி; வாழ்கநின் உள்ளம்! அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றே வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே.

அருஞ்சொற்பொருள்:
1. மண்டு = மிகுதி, செறிவு; அமர் = போர்; அட்ட = வென்ற; மதன் = மிகுதி; நோன் = வலிமை; தாள் = முயற்சி. 2. விறல் = வெற்றி; கெழு = பொருந்திய. 3. உடுத்த = சூழ்ந்த; மலர்தல் = விரிதல். 5. துப்பு = வலிமை. 6. அமர் = போர்; வெம்மை = விருப்பம். 8. அடுதல் = வெல்லுதல், கொல்லல்; மான் = விலங்கு (யானை); தோன்றல் = அரசன். 9. மற்று – அசைச் சொல். 11. தாயம் = அரசுரிமை. 13. வெய்யோய் = விரும்புபவன். 15. காட்சி = அறிவு. 17. செல்வன் = அரசன்; உலைவு = தோல்வி. 18. இகழுநர் = பகைவர். 19. அத்தை – அசை; மறன் = மறம் = வீரம், வெற்றி, போர்; தில் – விழைவுக் குறிக்கும் அசைச்சொல். 20 மதி – முன்னிலை அசைச்சொல். 21. ஏமம் = பாதுகாப்பு. 23. ஆன்றவர் =அமரர். 23. விதும்பல் = ஆசைப்படுதல்.

கொண்டு கூட்டு: வேந்தே, நின் மதன் ஒழிக; ஆன்றவர் விருந்தெதிர் கொளற்கு நன்று செய்தல் வேண்டும்; ஆதலால், அதற்கு விரைந்து எழுவாயாக; நின் உள்ளம் வாழ்வதாக எனக் கூட்டுக.

உரை: மிகுந்த வலிமையோடும் முயற்சியோடும் பகைவர்களைப் போரில் கொன்று, வெண்கொற்றக்குடையுடன் விளங்கும் வெற்றி பொருந்திய வேந்தே! கடல் சூழ்ந்த, பரந்த இவ்வுலகில், உன்னை எதிர்த்து வந்த இருவரையும் எண்ணிப்பார்த்தால், அவர்கள் நெடுங்காலமாக உன்னுடன் பகைகொண்ட வலிமையுடைய சேரரோ பாண்டியரோ அல்லர். போரில் வெற்றிபெறும் நோக்கத்தோடு உன்னை எதிர்த்து வந்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால், நீ அவர்களுக்குப் பகைவன் அல்லன் என்பது அவர்களுக்குத் தெரியும். பகைவர்களைக் கொல்லும் யானைகளையுடைய தலைவ! பெரும்புகழை அடைந்து, நீ தேவருலகம் சென்ற பிறகு, உன் நாட்டை ஆளும் அரசுரிமை அவர்களுக்கு உரியதுதானே? அவ்வாறு ஆதல் நீ அறிவாய். நான் சொல்வதை இன்னும் நன்றாகக் கேள். புகழை விரும்புபவனே! உன்னோடு போர்செய்யப் புறப்பட்டு வந்திருக்கும் ஆராயும் திறனும் அறிவும் இல்லாத உன் மக்கள் தோற்றால், உனக்குப் பிறகு, உன் பெருஞ்செல்வத்தை யாருக்குக் கொடுக்கப் போகிறாய்? போரை விரும்பும் அரசே! நீ அவரிடம் தோற்றால் உன் பகைவர்கள் அதைக்கண்டு மகிழ்வார்கள். மற்றும், பழிதான் மிஞ்சும். அதனால், போரை விடுத்து விரைவில் புறப்படுவாயாக. அஞ்சுபவர்களுக்குப் பாதுகாப்பாக உனது நிழல் இருக்கட்டும். பெறுதற்கரிய விண்ணவர் உலகம் உன்னை விரும்பி வரவேற்று, விருந்தினனாக ஏற்றுக்கொள்வதை நீ விரும்பினால், நல்ல செயல்களை மனம் மயங்காமல் செய்ய வேண்டும். உன் உள்ளம் வாழ்வதாக.

No comments: