Monday, January 24, 2011

219. உணக்கும் மள்ளனே!

பாடியவர்: கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் (219). நான்கு பெரிய தெருக்கள் கூடும் இடத்திற்குப் பெருஞ்சதுக்கம் என்று பெயர். பெரிய ஊர்களில், பெருஞ்சதுக்கங்களில் பூதங்களுக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்யும் வழக்கம் பண்டைக்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. சிலப்பதிகாரத்திலும் சதுக்கப் பூதத்தைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

சங்க காலத்தில் கருவூர் ஒரு பெரிய ஊராக இருந்ததால் அங்கிருந்த பெருஞ்சதுக்கம் ஒன்றில் கோயில்கொண்ட பூதத்தின் பெயர் கொண்டவர் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 212 -இல் காண்க.
பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த காலத்து இப்புலவர் மற்ற புலவர்களுடன் சேர்ந்து வடக்கிருக்க வர இயலவில்லை போலும். இவர் கோப்பெருஞ்சோழனைக் காணவந்த பொழுது அவன் இறந்து கிடந்தான். அதைக் கண்ட கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், “ நீ வடக்கிருந்த பொழுது நான் வராததால் நீ என்னை வெறுத்தாயோ?” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே!
பலரால் அத்தை நின் குறிஇருந் தோரே.

அருஞ்சொற்பொருள்:
1. உள் ஆறு = ஆற்று உள்ளே (அரங்கம், ஆற்றின் நடுவே உள்ள இடம்.); கவலை = பிரியும் வழி; புள்ளி நீழல் = புள்ளி புள்ளியாகத் தோன்றும் நிழல். 2. வள்ளுரம் = தசை; உணக்கும் = வாட்டும், வருத்தும்; மள்ளன் = வீரன். 3. புலத்தல் = வெறுத்தல்; மாதோ – அசைச் சொல். 4. குறி = இடம்.

உரை: ஆற்றின் நடுவே இருக்கும் இடத்தில் (அரங்கத்தில்) உள்ள மர நிழலில், உடல் முழுதும் உள்ள தசைகள் அனைத்தையும் வாட்டும் வகையில் வடக்கிருந்த வீரனே! நீ வடக்கிருந்த பொழுது அதே இடத்தில் உன்னோடு பலரும் வடக்கிருந்தனர். அப்பொழுது நான் வராததால் என்னை நீ வெறுத்தாய் போலும்.

No comments: