Monday, January 10, 2011

214. நல்வினையே செய்வோம்!

பாடியவர்: கோப்பெருஞ் சோழன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 213-இல் காண்க.
பாடலின் பின்னணி: பகையின் காரணத்தால் கோப்பெருஞ் சோழன் தன் மகன்களுடன் போர் செய்யத் தொடங்கினான். ஆனால், புல்லாற்றூர் எயிற்றியனார் போன்ற புலவர் பெருமக்களின் அறிவுரைக்கு இணங்கிப் போரை நிறுத்தினான். போரை நிறுத்தினாலும் அவன் மனவருத்தத்துடன் இருந்தான். அவ்வருத்ததால் அவன் வடக்கிருந்து உயிர் நீக்கத் துணிந்தான். அவ்வாறு செய்வதை ஒரு உயர்ந்த நற்செயல் என்று கருதினான். அவன் வடக்கிருந்த பொழுது, அவனுடன் இருந்த சான்றோர் சிலர் அவனுடைய செயலால் என்ன நன்மை அடையப் போகிறான் என்று பேசத் தொடங்கினர். அவர்கள் சொல்வதைக் கேள்வியுற்ற கோப்பெருஞ்சோழன், “ நல்வினைகள் செய்வதால் விண்ணுலகம் செல்லலாம்; விண்ணுலகத்தில் இன்பம் நுகர்வது மட்டுமல்லாமல், வீடு பேறும் பெறலாம்; அத்தகைய வீடு பேறு பெற்றால் மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையை அடையலாம். பிறவாமை என்னும் நிலை ஒன்று இல்லாவிட்டாலும், நல்வினைகளைச் செய்பவர்கள் குறையற்ற உடலோடு வாழ்ந்து தம் புகழை நிறுவி இறக்கும் பெருமையை அடைவார்கள்” என்ற கருத்துகளை இப்பாடலில் கூறுகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
5 குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனில்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனில்,
10 மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும் இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே

அருஞ்சொற்பொருள்:
1. கொல் – ஐயப்பொருளில் வரும் இடைச்சொல். 2. கசடு = ஐயம்; மாசு, குற்றம். ஈண்டுதல் = நிறைதல், செறிதல்; காட்சி = அறிவு. 5. பூழ் = சிறு பறவை, காடை (ஒருவகைப் பறவை). 7. மருங்கு = கூறு. 8. தொய்தல் = வினை செய்தல்; தொய்யா உலகம் = விண்ணுலகம். 12. கோடு = மலையின் உச்சி; இசை = புகழ். 13. யாக்கை = உடல்; மாய்தல் = இறத்தல்; தவ = மிக; தலை = பெருமை.

கொண்டு கூட்டு: உயர்ந்திசினோர்க்கு, நுகர்ச்சியும் கூடும்; பிறப்பின் இன்மையும் கூடும்; இசை நட்டு மாய்தல் தவத்தலையே எனக் கூட்டுக.

உரை: மனத்தில் மாசுடன், தெளிந்த அறிவு இல்லாதவர்கள்தான் நல்ல செயல்களைச் செய்யலாமா வேண்டாமா என்ற ஐயம் நீங்காதவர்களாக இருப்பார்கள். யானையை வேட்டையாடச் சென்றவன் யானையைப் பெறலாம்; சிறுபறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு திரும்பி வரலாம். அதனால், உயுர்ந்தவற்றுள் விருப்பமுடையவர்களுக்கு அவர் செய்த நல்வினைக்குத் தகுந்த பயன் கிடைக்குமானால், விண்ணுலக இன்பம் கிடைக்கலாம். விண்ணுலக மட்டுமல்லாமல், மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையையும் (வீடு பேறு) பெறலாம். பிறவாமை என்ற நிலை இல்லை என்றாலும், இவ்வுலகிலே இமயத்தின் சிகரம்போல் உயர்ந்த புகழை நிலைநாட்டிக், குறையற்ற உடலோடு இறப்பது மிகப் பெருமை வாய்ந்தது.

சிறப்புக் குறிப்பு: ”தொய்தல்” என்றால் வினை செய்தல் என்று பொருள். இவ்வுலகில் வாழும்பொழுது, மனிதன் செய்யும் செயல்களில் சில நற்செயல்களாகவும் சில தீய செயல்களாகவும் அமைகின்றன. வாழ்நாளில் செய்த நற்செயல்களுக்கேற்ப, இறந்த பிறகு விண்ணுலகத்தில் மனிதன் இன்பத்தை நுகர்வான் என்பது மதவாதிகளின் நம்பிக்கை. மற்றும், விண்ணுலகத்தில் உள்ளவர்கள் இன்பம் நுகர்வதைத் தவிர வேறு எந்தத் தொழிலையும் செய்யாததால், விண்ணுலகத்தைத் “தொய்யா உலகம்” என்று இப்பாடலில் கோப்பெருஞ்சோழன் குறிப்பிடுகிறான்.

விண்ணுலகில் இன்பம் நுகர்ந்த பிறகு, மண்ணுலகில் மீண்டும் பிறக்கும் நிலை உண்டு என்பது சில மதங்களின் அடிப்படை நம்பிக்கை. அவரவர்களின் நல்வினை தீவினைகளுக்கேற்ப மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். நல்வினையும் திவினையும் அற்ற நிலையில் பிறவாமை என்ற நிலையை அடையலாம். பிறவாமை என்ற நிலையை அடைந்தவர்கள் வீடுபேறு அடைந்ததாகக் கருதப்படுகிறார்கள். வீடுபேறு என்பதை “வானோர்க்கு உயர்ந்த உலகம்” என்று

யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும். (குறள் – 346)

என்ற குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

No comments: