Monday, January 24, 2011

216. அவனுக்கும் இடம் செய்க!

பாடியவர்: கோப்பெருஞ்சோழன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 212-இல் காண்க.
பாடலின் பின்னணி: பிசிராந்தையார் தன்னைக் காண வருவாரோ அல்லது வரமாட்டாரோ என்று தன் அருகில் இருக்கும் சான்றோர்கள் சந்தேகப்படுவதை உணர்ந்த கோப்பெருஞ்சோழன், ”அவர் நிச்சயமாக வருவார்; அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்” என்று இப்பாடலில் குறிப்பிடுகிறான்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

“கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே தோன்றல்! அதற்பட ஒழுக”லென்று
5 ஐயம் கொள்ளன்மின்; ஆரறி வாளிர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
தன்பெயர் கிளக்கும் காலை ‘என் பெயர்
பேதைச் சோழன்’ என்னும் சிறந்த
10 காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை
இன்னதோர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்கஅவற்கு இடமே!

அருஞ்சொற்பொருள்:
1. மாத்திரை = அளவு; யாவதும் = சிறுபொழுதும். 2. காண்டல் = காணுதல்; யாண்டு = ஆண்டு. 3. வழு = தவறு. 4.தோன்றல் = அரசன்; அதற்பட = அவ்வாறு. 5. ஆர் = நிறைவு. 6. யாத்தல் = பிணித்தல், கட்டல். 7. வரூஉம் = வரும். 8. கிளக்கும் = கூறும். 9. பேதை = களங்கமில்லாத் தன்மை. 10. கிழமை = உரிமை; தலை = மேலே. 12. இன்னே = இப்பொழுதே; ஒழிக்க = ஒதுக்குக.

உரை: ” வேந்தே! பிசிராந்தையாரும் நீயும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருக்கிறீர்களே தவிர நீங்கள் இருவரும் சிறுபொழுதுகூட ஒருவரை ஒருவர் நேரில் கண்டதில்லை. இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன. நன்கு பழகிய உரிமையுடைய நண்பராக இருப்பின், இந்நிலையில் அவர் உன்னுடன் இருப்பதுதான் முறை. ஆயினும் அவர் அம்முறைப்படி நடத்தல் அரிது.” என்று சந்தேகப்படாதீர்கள். அறிவு நிறைந்தவர்களே! என் நண்பன் பிசிராந்தையார் என்னை ஒருபொழுதும் இகழாதவன்; அவன் மிகவும் இனியவன்; நெருங்கிய நட்பு கொண்டவன்; புகழை அழிக்கும் போலித்தனங்களை (பொய்யை) விரும்பாதவன். அவன் பெயர் என்னவென்று கேட்டால் தன் பெயர் ’களங்கமில்லாத சோழன்’ என்று கூறும் சிறந்த அன்பும் உரிமையும் உடையவன். அதற்கும் மேலே, இத்தகைய நிலையில் அவன் வராமல் இருக்க மாட்டான்; அவன் இப்பொழுதே வருவான்; அவனுக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.

No comments: