Monday, January 10, 2011

215. அல்லற்காலை நில்லான்!

பாடியவர்: கோப்பெருஞ் சோழன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 213-இல் காண்க.
பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது, அவனைச் சூழ்ந்திருந்தவர்கள், பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டிற்கு வந்து வடக்கிருக்கும் கோப்பெருஞ்சோழனைக் காணவருவாரோ வரமாட்டாரோ என்று சந்தேகப்பட்டார்கள். அவர்கள் பேச்சைக் கேள்விப்பட்ட கோப்பெருஞ்சோழன், “பிசிராந்தையார் என் உயிரைப் பாதுகாப்பவர்; நான் ஆட்சியிலிருந்த இருந்த காலத்தில் அவர் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும், நான் துன்பத்திலிருக்கும் பொழுது அவர் கண்டிப்பாய் என்னைப் பார்க்க வருவார்” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதெரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
5 அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப என் உயிர்ஓம் புநனே;
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.

அருஞ்சொற்பொருள்:
1. கவை = பிளப்பு; அவைப்பு = குற்றல்; ஆக்கல் = சமைத்தல். 2. தாதெரு = தாது+எரு = தாது எருவாக; மறுகு = தெரு; போது = பொழுது; பொதுளிய = தழைத்த. 4. மிதவை = கூழ். 5. ஆர = நிரம்ப; மாந்தல் = உண்ணுதல். 6. பொருப்பு = மலை. 7. பிசிர் – ஊர்ப்பெயர்; ஓம்புதல் = பாதுகாத்தல். 8. செல்வன் = அரசன். 9. அல்லல் = துன்பம்; மன் – அசைச்சொல்.

உரை: பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோற்றையும், பூக்களின் தாதுகள் எருவாக உதிர்ந்த புழுதியையுடைய தெருவில் அரும்புகளோடு தழைத்த வேளைச்செடியின் வெண்ணிறப் பூக்களை வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு, இடைச்சியர் சமைத்த அழகிய புளிக்கூழையும், அவரையைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும் தென்திசையில் உள்ள பொதிகை மலையையுடைய பாண்டிய நன்னாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊரில் உள்ளவர் ஆந்தையார். அவர் என் உயிரைப் பாதுகாப்பவர்; நான் ஆட்சியிலிருந்த இருந்த காலத்தில் அவர் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும் நான் துன்பத்தில் இருக்கும் பொழுது என்னைப் பார்க்க வராமல் இருக்கமாட்டார்.

No comments: