Monday, January 10, 2011

212. யாம் உம் கோமான்?

பாடியவர்: பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓரூர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி. இப்புலவர், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர். மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ் சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. சந்திக்காமலேயே அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது, “புணர்ச்சிப் பழகுதல் வேண்டா; உணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும் (குறள் - 785).” என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக்காட்டாக இவர்களுடைய நட்பு இருந்தது. தன் புதல்வர்களுடன் ஏற்பட்ட பகையின் காரணத்தால் மனம் வருந்திக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். அதைக் கேட்ட பிசிராந்தையார் சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ் சோழன் இறந்தவிடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும், அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும், நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றியவர். இவர் செய்யுட்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.

பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்(67, 212, 213, 219, 221, 222, 223). கரிகாலனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் கிள்ளிவளவன் என்பவனும் ஒருவன் என்று வரலாறு கூறுகிறது. கிள்ளி வளவன் கரிகாலனின் பேரன் என்று சிலர் கூறுவர். ஆனால், வேறு சிலர் கிள்ளி வளவனுக்கும் கரிகாலனுக்கும் இருந்த உறவுமுறை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பர். கிள்ளி வளவனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் கோப்பெருஞ் சோழன். கோப்பெருஞ்சோழன் சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாக இருந்தான் என்பது, புறநானூற்றில் இவன் இயற்றிய மூன்று பாடல்களிலிருந்தும் (214, 215, 216), குறுந்தொகையில் இவன் இயற்றிய நான்கு பாடல்களிலிருந்தும் (20, 53, 129, 147) தெரியவருகிறது. இவனுக்கும் இவனுடைய இருமகன்களுக்கும் இடையே பகை மூண்டது. பகையின் காரணத்தால், தன் மகன்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான். புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர் பெருமக்கள் கூறிய அறிவுரைக்கேற்ப கோப்பெருஞ்சோழன் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டான். தன் மக்களுடன் தோன்றிய பகையால் வருத்தமடைந்த கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.
பாடலின் பின்னணி: பாண்டிய நாட்டில் இருந்த பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனிடம் மிகுந்த நட்புகொண்டவராக இருந்தார். அந்நட்பின் காரணமாகக் கோபெருஞ்சோழனைத் தன் வேந்தனாகவே கருதினார். “என் வேந்தன் கோப்பெருஞ்சோழன் உழவர்களை விருந்தோம்பல் செய்து ஆதரிப்பவன். அவன் உறையூரில் பொத்தியார் என்னும் பெரும் புலவருடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


நுங்கோ யார்என வினவின் எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெம்கள்
யாமைப் புழுக்கில் காமம் வீடஆரா
ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ
5 வைகுதொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நன்நாட் டுள்ளும் பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்;
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
10 வாயார் பெருநகை வைகலும் நக்கே.

அருஞ்சொற்பொருள்:
2. களமர் = உழவர்; அரித்த = வடித்த; வெம்மை = விருப்பம். 3. புழுக்கு = அவித்தது; ஆர்தல் = உண்டல்; காமம் = ஆசை; வீடல் = விடுதல். 4. ஆரல் = ஒருவகை மீன்; சூடு = சுடப்பட்டது; கவுள் = கன்னம். 5. வைகுதல் = இருத்தல்; மடிதல் = முயற்சி அற்றுப்போதல். 6. யாணர் = புது வருவாய். 7. பைதல் = துன்பம், வருத்தம். 8. கோழியூர் = உறையூர். 9. பொத்து = குற்றம், குறை; கெழீஇ = பொருந்தி. 10. வாயார் = வாய்மை அமைந்த; நக்கு = மகிழ்ந்து.

கொண்டு கூட்டு: நும்கோ யார் என வினவின், எம் கோ கோப்பெருஞ்சோழன்: அவன் பசிபகையாகிப் பொத்தியொடு வைகலும் நக்குக் கோழியிடத்திருந்தான் எனக் கூட்டுக.

உரை: “உம் அரசன் யார்?” என்று என்னைக் கேட்பீராயின், எம் அரசன் கோப்பெருஞ்சோழன். உழவர்களுக்காக வடிக்கப்பட்ட, விரும்பத்தகுந்த கள்ளை ஆமையின் அவித்த இறைச்சியுடன் ஆசைதீர அவ்வுழவர்கள் உண்டு, வதக்கிய கொழுத்த ஆரல் மீனைத் தம் கன்னத்தில் அடக்கித் தம்முடைய தொழிலை மறந்து விழாக்கோலம் கொண்டதுபோல் சுற்றித் திரியும் வளமை மிகுந்தது சோழநாடு. அத்தகைய புதுவருவாய் உடைய வளமான சோழநாட்டில், பாணர்களின் வருத்தமடைந்த சுற்றத்தாரின் பசியாகிய பகையைப் போக்குபவன் உறையூரில் வாழும் கோப்பெருஞ்சோழன். அவன் குறையற்ற நண்பர் பொத்தியாரோடு கூடி நாள்தோறும் உண்மையான பெருமகிழ்ச்சியோடு உள்ளான்.

No comments: