பாடியவர்: பொத்தியார் (217, 220 - 223). இவர் கோப்பெருஞ்சோழனின் நெருங்கிய நண்பர். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது தானும் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால், கோப்பெருஞ்சோழன், “உன் மனைவி கருவுற்றிருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறியதற்கேற்ப, பொத்தியார் வடக்கிருக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். அவர், தன் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்க வந்தார். ஆனால், அதற்குள் கோப்பெருஞ்சோழன் இறந்துவிட்டான். அவர், அவன் வடக்கிருந்த இடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்ததாகக் கூறப்படுகிறது.
பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருப்பது என்று முடிவெடுத்ததையும், அவனுக்கும் பிசிராந்தையாருக்கும் இருந்த நட்பையும், பிசிராந்தையார் நிச்சயமாக வருவார் என்று சோழன் கூறியதையும், அவன் கூறியதுபோல் பிசிரந்தையார் வந்ததையும் நினைத்துப்பார்த்துப் பொத்தியார் மிகவும் வியப்படைகிறார். இப்பாடலில் தன் வியப்பை வெளிப்படுத்துகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே;
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன்நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
5 இசைமரபு ஆக நட்புக் கந்தாக
இனையதோர் காலை ஈங்கு வருதல்;
‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,
அதுபழுது இன்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;
10 அதனால், தன்கோல் இயங்காத் தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை இழந்தஇவ் வுலகம்
என்னா வதுகொல்? அளியது தானே!
அருஞ்சொற்பொருள்:
1. மருட்கை = திகைப்பு, மயக்கம், வியப்பு. 2. துணிதல் = முடிவெடுத்தல். 4. சான்ற = அமைந்த; போற்றி = பாதுகாத்து. 5. இசை = புகழ்; கந்து = பற்றுக்கோடு. 6. இனைய = இத்தகைய; ஈங்கு = இங்கு. 7. கோன் = கோப்பெருஞ்சோழன். 9. இறந்த = கடந்த; அன்னோன் = கோப்பெருஞ்சோழன். 13. அளியது = இரங்கத்தக்கது.
உரை: இத்துணைப் பெரிய சிறப்புடைய மன்னன் இவ்வாறு வடக்கிருப்பது என்று முடிவெடுத்ததை நினைத்தாலே வியப்பாக உள்ளது. வேறு நாட்டில் தோன்றிய சான்றோன் ஒருவன், புகழை மரபாகக்கொண்டு, நட்பைப் பற்றுக்கோடாகக் கொண்டு, இந்தகைய நேரத்தில் இங்கு வருவது அதைவிட வியப்பானது. அவன் வருவான் என்று கூறிய கோப்பெருஞ்சோழனின் பெருமையும், அவ்வாறு தவறாமல் வந்தவனின் அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும், வியப்பின் எல்லையைக் கடந்ததாக உள்ளது. தன் ஆட்சியில் இல்லாத நாட்டில் வாழும் சான்றோனின் நெஞ்சில் இடம் பெற்ற புகழ் மிக்க அரசனை இழந்த இந்நாடு என்னாகுமோ? இது இரங்கத்தக்கதுதான்.
Monday, January 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment