பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்(60, 170, 321). உறையூரில் மருத்துவராகவும் புலவராகவும் வாழ்ந்தவர் தாமோதரனார். இவர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும் பிட்டங்கொற்றனையும் பாடியவர்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 168-இல் காணாலாம்.
பாடலின் பின்னணி: ஒருகால், மருத்துவர் தாமோதரனார் பிட்டங்கொற்றனைக் காணச் சென்றார். அவ்வமயம், பிட்டங்கொற்றனின் பகைவர்கள் அவனோடு போர் புரிவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக, பகைவர்களின் ஒற்றர்கள் மூலம் அறிந்தார். அவ்வொற்றர்கள் அறியுமாறு, அவர் பிட்டங்கொற்றனின் வலிமையைப் புகழ்ந்து பாடுவதாக, இச்செய்யுள் அமைந்துள்ளது.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை; தானை மறமும் ஆம்.
வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவன் ஆண்மைத் தன்மையை நன்மை பெருகச் சொல்லுதல்.
தானை மறம்: இரு படைகளும் தங்களுள் போரிட்டுச் சாகாதவாறு வீரன் ஒருவன் பாதுகாத்ததைக் கூறுவது.
மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்
பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்
எல்அடிப் படுத்த கல்லாக் காட்சி
வில்லுழுது உண்மார் நாப்பண் ஒல்லென
5 இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப
வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்
குறுகல் ஓம்புமின் தெவ்விர்; அவனே
10 சிறுகண் யானை வெண்கோடு பயந்த
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து
நார்பிழிக் கொண்ட வெம்கள் தேறல்
பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
15 இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன வல்லா ளன்னே.
அருஞ்சொற்பொருள்:
1.மரை = காட்டுப்பசு. 2. பரல் = விதை; முன்றில் = முற்றம். 3. எல் = பகல்; அடிப்படுதல் = அடிச்சுவடு படுதல்; காட்சி = அறிவு. 4. நாப்பண் = நடுவே. கருமை = வலிமை. 6.துரந்து = முயன்று; சிலைத்தல் = ஒலித்த. துடி = குறிஞ்சிப் பறை. 7. குடிஞை = ஆந்தை; இரட்டல் = மாறி மாறி ஒலித்தல். 9. குறுகல் = அணுகல். 12. வெம்மை = விருப்பம்; தேறல் = கள்ளின் தெளிவு. 16. கூடம் = சம்மட்டி. 17. உலைக்கல் = பட்டடைக் கல் (பட்டறை).
கொண்டு கூட்டு: பிட்டன் நசைவர்க்கு மென்மையல்லது பகைவர்க்கு கல்லன்ன வல்லாளனாதலால், தெவ்வீர், அவனைக் குறுகல் ஓம்புமின் எனக் கூட்டுக.
உரை: காட்டுப் பசுக்கள் வீட்டு வேலியில் உள்ள நெல்லிமரத்தின் கனிகளின் விதைகளை நீக்கித் தின்றதால் அவ்விதைகள் வீடுகளின் முற்றங்களில் சிதறிக் கிடக்கும் அழகிய வீடுகளுடைய சிற்றூரில், பகற் பொழுதெல்லாம் வேட்டையாடித் திரிகின்ற, கல்வியில்லாத, வேற்பயிற்சியுள்ள வேட்டையாடி உண்ணும் வேடர்களின் நடுவே, “ஒல்” என்னும் ஓசையுடன் இழிந்த பிறப்பாளன் என்று கருதப்படும் பறை கொட்டுபவன் தன் வலிய கை சிவக்குமாறு விரைந்து அடிக்கும் வலிய கண்ணையுடைய, அச்சம் தரும் பறையின் ஒலி, புலி படுத்திருக்கும் மலையில் ஆந்தையின் அலரலோடு மாறி மாறி ஒலிக்கும். இத்தகைய மலையுள்ள நாட்டுக்குத் தலைவன் கூரிய வேலையுடைய பிட்டங்கொற்றன். பகைவர்களே! அவனை அணுகுவதைத் தவிர்க. அவன் சிறிய கண்களையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களில் விளையும் ஒளி பொருந்திய முத்துகளை விறலியர்க்குக் கொடுப்பவன். நாரைப் பிழிந்து எடுத்த விரும்பத்தக்க கள்ளின் தெளிவை, யாழோடும் பண்ணோடும் பாடும் பாணர்களுக்குக் கொடுத்து அவர்களையும் அவர்களின் சுற்றத்தாரையும் உண்ண வைப்பவன். ஆனால், பகைவர்க்கு அவன் இரும்பைப் பயன்படுத்தும் வலிய கொல்லனின் உலைக்களத்தில் விரைந்து சம்மட்டியால் அடிக்கப்படும் பட்டடைக்கல் போன்ற வலிமையுடையவன்.
Monday, May 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment