Monday, May 17, 2010

169. நின் வலன் வாழியவே!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்(57, 58, 169, 171, 353). இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் இயற்றியது மட்டுமல்லாமல், அக்நானூற்றில் மூன்று பாடல்களும் (107, 123, 285), குறுந்தொகையில் ஒரு பாடலும் (297) இயற்றியவர்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 168-இல் காணாலாம்.
பாடலின் பின்னணி: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பிட்டங்கொற்றனைக் காண விரும்பினார். ஆனால், அவர் பிட்டங்கொற்றனைக் காண முயன்ற பொழுதெல்லாம் அவன் போருக்குச் சென்றிருந்தான். ஒருமுறை, அவனை நேரில் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது, அவன் மீண்டும் போருக்குப் போவதற்குமுன் தனக்குப் பரிசு கொடுத்து அருள வேண்டுமென்று அவர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

நும்படை செல்லுங் காலை அவர்படை
எடுத்தெறி தானை முன்னரை எனாஅ
அவர்படை வருஉம் காலை நும்படைக்
கூழை தாங்கிய அகல்யாற்றுக்
5 குன்றுவிலங்கு சிறையின் நின்றனை எனாஅ,
அரிதால் பெருமநின் செவ்வி என்றும்
பெரிதால் அத்தைஎன் கடும்பினது இடும்பை
இன்னே விடுமதி பரிசில் வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
10 இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்
பெருமரக் கம்பம் போலப்
பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே.

அருஞ்சொற்பொருள்:
2.தானை = ஆயுதங்கள்; முன்னரை = முன்னர் நிற்பவன். 4. கூழை = படை வகுப்பு. 5. விலங்கு = குறுக்கானது; சிறை = தடை; எனாஅ = ஆகலானும் (இடைச்சொல்). 6. செவ்வி = காலம். 7. ஆல், அத்தை - அசைச் சொற்கள்; கடும்பு = சுற்றம்; இடும்பை = துன்பம். 8. இன்னே = இப்பொழுதே. 9. கோசர் = ஒரு வகை வீரர்கள்; கன்மார் = கற்பவர்கள். 10. இகல் = மாறுபாடு. 12. உலைதல் = மனங்கலங்கல்; வலன் = வெற்றி.

கொண்டு கூட்டு: அரிதால் பெரும நின் செவ்வி, பெரிதால் என் கடும்பினது இடும்பை; இன்னே விடுமதி; நின் வலன் வாழியவே.

உரை: உம் படை பகைவரோடு போரிடப் போகும் பொழுது, வேல் முதலியவற்றை எடுத்து எறியும் பகைவரின் படைக்கு முன் நிற்பாய். பகவரின் படை உம் படையோடு போரிட வரும் பொழுது, உம் படையின் அணியைத் தாங்குவதற்காக, அகன்ற ஆற்றைத் தடுத்து நிறுத்தும் மலைபோல் அதனைத் தடுத்து நிற்பாய். அதனால், பெரும, உன்னைக் காண்பதற்கு ஏற்ற காலம் கிடைப்பது எந்நாளும் அரிது. என் சுற்றத்தாரின் துன்பம் பெரிதாகையால், இப்பொழுதே பரிசு அளித்து என்னை அனுப்புவாயாக. வெல்லும் வேலையுடைய இளம் கோசர்கள் பலரும் படைப் பயிற்சி செய்யும் பொழுது வேலெறிந்து பழகும் அகன்ற இலையுடைய முருக்க மரத்தூணால் ஆகிய இலக்கு போல் பகைவர்களைக் கண்டு மனங்கலங்காத உன் வெற்றி வாழ்க.

No comments: