பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 151-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: குமணன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: இப்பாடலில், தன் வறுமையையும் தன் மனைவி படும் துயரத்தையும் குமணனிடம் எடுத்துரைத்துத், தனக்குப் பரிசில் அளிக்குமாறு பெருந்தலைச் சாத்தனார் குமணனை வேண்டுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.
ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
5 சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண!
என்நிலை அறிந்தனை யாயின் இந்நிலைத்
10 தொடுத்தும் கொள்ளாது அமையலென்; அடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே.
அருஞ்சொற்பொருள்:
1.அடுதல் = சமைத்தல்; நனி = மிகவும்; கோடு = பக்கம். 2. ஆம்பி = காளான்; தேம்பல் = இளைத்தல், மெலிதல், வாடல்; உழத்தல் = வருந்துதல். 3. திரங்கி = தளர்ந்து. 4. இல்லி = துளை; தூர்த்தல் = நிரப்புதல். 7. எவ்வம் = துன்பம், வெறுப்பு. 8. படர்தல் = செல்லுதல். 10. தொடுத்தும் = வளைத்தும். 11 பச்சை = தோல். 12. மண் = மார்ச்சனை. 12. வயிரியர் = கூத்தர்.
உரை: சமைத்தலை முற்றிலும் மறந்த உயர்ந்த பக்கங்களையுடைய அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. உடல் மெலிந்து வருந்தி, பால் இல்லாததால் தோலோடு சுருங்கித் துளை மூடிய பயனில்லாத வற்றிய முலையச் சுவைத்து அழும் என் குழந்தையின் முகத்தை நோக்கி, நீர் மல்கிய ஈரம் படிந்த இமைகளைக்கொண்ட கண்களுடைய என் மனைவியின் துன்பத்தை நினைத்து உன்னை நாடி வந்தேன். நல்ல முறையில் போரிடும் குமணா! என் நிலையை நீ அறிந்தாயாயின், இந்த நிலையில் உன்னை வளைத்துப் பிடித்துப் பரிசில் பெறாமல் விடமாட்டேன். பலவாக அடுக்கிய, இசையமைந்த நரம்புகளையுடைய, தோலால் போர்த்தப் பட்ட நல்ல யாழையும், மார்ச்சனை பூசிய மத்தளத்தையும் உடைய கூத்தர்களின் வறுமையைத் தீர்க்கும் குடியில் பிறந்தவனே!
Monday, May 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment