பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்(38, 40, 166, 177, 178, 261, 301). இவர் ஆவூர் மூலம் என்னும் ஊரைச் சார்ந்தவர். இவர் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனையும், மல்லி கிழான் காரியாதியையும், பாண்டியன் கீரஞ்சாத்தனையும், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாடியவர்.
பாடப்பட்டோன்: சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன். இவன் சோழநாட்டில் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பூஞ்சாற்றுர் என்ற ஊரில் வசித்தவன். இவன் கௌண்டின்னிய கோத்திரத்தைச் சார்ந்தவனாதலால் கௌணியன் என்று அழைக்கப் பட்டான். விண்ணன் என்பது இவன் தந்தையின் பெயர். இவன் இயற் பெயர் தாயன்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் ஒரு வேள்வி நடத்தினான். அவ்வேள்விக்கு ஆவூர் மூலங் கிழார் சென்றிருந்தார். அவ்வேள்வியின் சிறப்பையும் விண்ணந்தாயனின் வள்ளல் தன்மையையும் இப்பாடலில் ஆவூர் மூலங் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: பார்ப்பன வாகை. கல்வி கேள்விகளால் சிறந்த பார்ப்பானின் வேள்விச் சிறப்பையும் வெற்றியையும் புகழ்ந்து பாடுவது.
நன்றாய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல்
5 இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்அன்ன பொய்உணர்ந்து
பொய்ஓராது மெய்கொளீஇ
மூவேழ் துறையும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
10 வினைக்குவேண்டி நீபூண்ட
புலப்புல்வாய்க் கலைப்பச்சை
சுவல்பூண்ஞாண் மிசைப்பொலிய;
மறம்கடிந்த அருங்கற்பின்
அறம்புகழ்ந்த வலைசூடிச்
15 சிறுநுதல்பேர் அகல்அல்குல்
சில சொல்லின் பலகூந்தல் நின்
நிலைக்குஒத்தநின் துணைத்துணைவியர்
தமக்குஅமைந்த தொழில்கேட்பக்;
காடுஎன்றா நாடுஎன்றுஆங்கு
20 ஈரேழின் இடம்முட்டாது
நீர்நாண நெய்வழங்கியும்
எண்நாணப் பலவேட்டும்
மண்நாணப் புகழ்பரப்பியும்
அருங்கடிப் பெருங்காலை
25 விருந்துற்றநின் திருந்துஏந்துநிலை
என்றும் காண்கதில் அம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்
30 உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்
செல்வல் அத்தை யானே; செல்லாது
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம் போல
நிலீஇயர் அத்தைநீ நிலமிசை யானே.
அருஞ்சொற்பொருள்:
1.ஆய்தல் = நுணுகி அறிதல். 2.முது முதல்வன் = இறைவன் (சிவன்); நிமிர் = மேன்மை. 3. புரிதல் = செய்தல். 5. இகல் = மாறுபாடு; மிகல் = வெற்றி, செருக்கு; சாய்தல் = அழிதல்; ஆர்வு = விருப்பம். 7. ஓராது = ஆராயாது; கொளீஇ = கொண்டு. 8. துறை = காரியம் ( வேள்வி); முட்டு = குறைவு. 9. உரவோர் = அறிஞர், முனிவர்; மருகன் = வழித்தோன்றல். 11. புலம் = வயல், இடம்; புல்வாய் = கலைமான். 12. சுவல் = தோள்மேல்; ஞாண் = கயிறு; மிசை = மேல். 13. மறம் = மிகுதி; கடிந்த = நீக்கிய. 14. வலை = ஒரு வகை ஆடை. 20. முட்டாது = குறையாது. 24. கடி = வேள்வி; பெருகுதல் = நிறைதல். 26. தில், அம்ம - அசைச் சொல். 27. வரை = மலை; சிலைத்தல் = முழங்குதல்; புயல் = மேகம்; ஏறு = இடி. 28. புரக்கும் = க்காக்கும். 29. படப்பை = தோட்டம், புழைக்கடை. 31. அத்தை - அசைச் சொல். 32. அண்ணாத்தல் = தலை நிமிர்தல், தலையெடுத்தல். 33. கழை = மூங்கில்.
கொண்டு கூட்டு: உரவோர் மருக, உன் ஏந்து நிலை என்றும் காண்போமாக; யாமும் பரிசில் கொண்டு கொண்டாடுவோமாகச் செல்வேன்; நீ இமயம் போல நிலைபெறுக.
உரை: மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி, அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல், மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து முடித்த, சொல்லுதற்கரிய சிறப்புடைய முனிவர்களின் (அறிஞர்களின்) வழித்தோன்றலே!
வேள்விக்காக, நீ காட்டு மானின் தோலை உன் பூணுலுக்கு மேல் அணிந்திருக்கிறாய். குற்றமற்ற, அரிய கற்பும், அற நூல்களில் புகழப்பட்ட வலை என்னும் ஆடையையும், சிறிய நெற்றியையும், அகன்ற இடையையும், அதிகமாகப் பேசாத இயல்பையும், மிகுதியான கூந்தலையும் உடைய, உன் தகுதிக்கேற்ற துணைவியராகிய உன் மனைவியர் அவர்களுக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கின்றனர். காட்டிலும் நாட்டிலும் வாழ்ந்த பதினான்கு பசுக்களின் நெய்யை, நீரைவிட அதிகமாக வழங்கி, எண்ணற்ற பல வேள்விகளைச் செய்து உலகெங்கும் புகழ் பரப்பிய, அரிய வேள்வி நிறைவு பெறும் வேளையில் விருந்தினரோடு கூடியிருக்கும் உன் மேன்மையான நிலையை இன்றுபோல் நாங்கள் என்றும் காண்போமாக; மேற்கில், பொன் மிகுதியாக உள்ள உயர்ந்த மலையில் மேகம் இடியோடு முழங்கியதால் மலர்ந்த பூக்களைச் சுமந்து வரும் காவிரியில் புது வெள்ளம் பெருகி வருவதால் குளிர்ந்த நீருடைய தோட்டங்களுடைய எங்கள் ஊரில், நாங்கள் உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடியும் மகிழ்வோம்; யான் செல்கிறேன். மேகங்கள் அகலாது மழை பொழியும் உயர்ந்த மலைகளையுடைய, மூங்கில் வளரும் இமயம் போல் நீ இவ்வுலகில் வாழ்வாயாக.
சிறப்புக் குறிப்பு: இரிக்கு, யஜுர், சாம, அதர்வணம் என்பவை வேதத்தின் நான்கு பிரிவுகளாகும். சிட்சை, நிருத்தம், சந்தசு, சோதிடம், கற்பம், வியாகர்ணம் என்ற ஆறு நூல்களும் வேதத்தின் ஆறு அங்கங்களாகும்.
Monday, May 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment