Monday, July 26, 2010

171. அவன் தாள் வாழியவே!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 169-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 168-இல் காணாலாம்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பாடலின் பின்னணி: பிட்டங்கொற்றனைக் காண்பது அரிதாக இருப்பதாகக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியதை 169- ஆம் பாடலில் கண்டோம். அப்பாடலை இயற்றிய பிறகு, பிட்டங்கொற்றனை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாருக்குக் கிடைத்தது. அவனும் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாருக்குப் பெருமளவில் பரிசுகள் அளித்து அவரை மகிழ்வித்தான். பிட்டங்கொற்றனின் அன்பாலும் வண்மையாலும் பெருமகிழ்ச்சி அடைந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், அவன் தனக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் வேண்டியது அளிக்கும் தன்மையவன் என்றும் அவன் எவ்வித துன்பமும் இல்லாமல் வாழ வேண்டுமென்றும் இப்பாடலில் வாழ்த்துகிறார்.

இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே; பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
5 யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்
தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
அருந்தொழில் முடியரோ திருந்துவேல் கொற்றன்
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
10 அருங்கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே;
அன்னன் ஆகலின் எந்தை உள்ளடி
முள்ளும் நோவ உற்றாக தில்ல!
ஈவோர் அரியஇவ் உலகத்து
15 வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே!

அருஞ்சொற்பொருள்:
1.வரை = காலம்; 3. துன்னி = நெருங்கி (தொடர்ந்து); 4. வைகல் = நாள். 6. உவப்ப = மகிழ. 8. மலிதல் = மிகுதல், நிறைதல்; கதம் = சினம்; சே = காளை; களன் = தொழுவம்; 9. குப்பை = குவியல்; 12. எந்தை = எம் தந்தை ( எம் தலைவன்)

உரை: இன்று சென்றாலும் (பரிசுகள்) தருவான்; சில நாட்கள் கழித்துச் சென்றாலும் (பரிசுகள்) தருவான். அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து நாள்தோறும் சென்றாலும், “முன்பே தந்தேன்” என்று கூறாமல், யாம் வேண்டியவாறு தவறாமல் எங்கள் வறுங்கலங்களை நிரப்புவான். தன் அரசன் விரும்பியவாறு, அவன் மகிழ , திருந்திய வேலையுடைய பிட்டங்கொற்றன் தன்னுடைய அரிய போர்த்தொழிலை முடிப்பானாக. பெரிய கூட்டமாக உள்ள, சினமுடைய காளைகளைத் தொழுவத்தோடு கேட்டாலும், களத்தில் மிகுதியாக இருக்கும் நெற்குவியலைக் கேட்டாலும், அரிய அணிகளை அணிந்த யானைகளைக் கேட்டாலும், பெருந்தன்மையுடைய பிட்டங்கொற்றன் எமக்கு மட்டுமல்லாமல் பிறர்க்கும் கொடுக்கும் தன்மை உடையவன். ஆகவே, எம் தந்தை போன்ற பிட்டங்கொற்றனின் காகல்களில் முள்கூடக் குத்தி வலி உண்டாக்காது இருக்க வேண்டும். ஈவோர் அரிதாக உள்ள இவ்வுலகில், வழ்வோரை வாழவைக்கும் பிட்டங்கொற்றனின் முயற்சி வாழ்கவே.

சிறப்புக் குறிப்பு: அதியமானிடம் எத்தனை நாள் சென்றாலும் அவன் முதல் நாள் பரிசளித்ததைப் போலவே தினமும் பரிசளித்து இரவலரை மகிழ்விப்பான் என்று 101 - ஆம் பாடலில் அவ்வையார் கூறுகிறார்.

ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ. (புறம். 101; 1-3; அவ்வையார்)

வையாவிக் கோப்பெரும் பேகனிடம் சென்று பரிசு பெறுவதற்கு, நல்ல நாள் பார்த்துச் செல்லவேண்டியதில்லை; நிமித்தம் நல்லாதாக இல்லவிட்டாலும் பரவாயில்லை; அவனைச் சந்திப்பதற்கு ஏற்ற சமயமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; திறமையாக செய்யுள் இயற்ற வேண்டிய அவசியமும் இல்லை; அவன் நிச்சயம் பரிசளிப்பான் என்று பேகனின் கொடைத் திறத்தைக் கபிலர் 124-ஆம் பாடலில் கபிலர் புகழ்ந்து கூறுகிறார்.

நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர்; (புறம். 124; 1-3; கபிலர்)

அவ்வையார் அதியமானைப் பற்றிக் கூறியிருப்பதும், கபிலர் பேகனைப் பற்றிக் கூறியிருப்பதும் இப்பாடலில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பிட்டங்கொற்றனின் கொடைத் தன்மையைப் புகழ்ந்து பாடுவதும் சங்காலத்து மன்னர்கள் புலவர்களையும் இரவலர்களையும் ஆதரிப்பதில் மிகுந்த ஆர்வமுடைவர்களாக இருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.

No comments: