Monday, May 17, 2010

167. நீயும் ஒன்று இனியை;அவரும் ஒன்று இனியர்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஏனாதி திருக்கிள்ளி. ஏனாதி என்பது முடிவேந்தர்களால் படைத்தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சிற்ப்புப் பெயர். இவன் சோழநாட்டுக் குறுநில மன்னர்களுள் ஒருவன். பல போர்களில் சோழ வேந்தர்களுக்குத் துணையாகப் போரிட்டவன்.
பாடலின் பின்னணி: ஏனாதியின் வீரத்தையும் வண்மையையும் கேள்விப்பட்டு, அவனைக் காணக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் சென்றவர். அவர் திருக்கிள்ளியின் உடலில் இருந்த வடுக்களைக் கண்டு வியந்து, இகழ்வதுபோல் புகழ்ந்து அவனை இப்பாடலில் சிறப்பிக்கிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நீயே, அமர்காணின் அமர்கடந்துஅவர்
படைவிலக்கி எதிர்நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை கட்குஇன் னாயே;
5 அவரே, நிற்காணின் புறங்கொடுத்தலின்
ஊறுஅறியா மெய்யாக்கையொடு
கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே!
அதனால், நீயும்ஒன்று இனியை;அவரும்ஒன்று இனியர்;
ஒவ்வா யாவுள மற்றே? வெல்போர்க்
10 கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!
நின்னை வியக்குமிவ் உலகம் அஃது
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே.

அருஞ்சொற்பொருள்:
1. அமர் = போர்; கடந்து = வென்று. 3. வாய்த்தல் = கிடைத்தல், சேர்தல். கட்கு = கண்ணுக்கு. 6. ஊறு = காயம், தழும்பு. 9. ஒவ்வுதல் = பொருந்துதல் (ஒத்திருத்தல்); ஒவ்வா = பொருந்தாத (ஒப்பில்லாத). 10. கடு = விரைவு. 12. உரைத்திசின் = உரைப்பாயாக.

உரை: நீ, போரைக் கண்டால், அப்போரில் வென்று, அப்பகைவர்களின் படையை எதிர்த்து நிற்கிறாய். அதனால், வாளால் உண்டாகிய தழும்புகளுடைய உடலோடு உள்ள உன் வீரச் செயல்களைக் கேட்பதற்கு இனியவனாய் உள்ளாய். ஆனால், நீ கண்ணுக்கு இனியவனாயக (அழகானவனாக) இல்லை.

உன் பகைவர், உன்னைக் கண்டால் புறங்காட்டி ஓடுவதால் தழும்பில்லாத உடலோடு பார்ப்பதற்கு இனிமையானவர்களாக (அழகானவர்களாக) இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் செயல்கள் கேட்பதற்கு இனிமையானவையாக இல்லை.

அதனால், நீ ஒருவகையில் இனியவன்; அவர்களும் ஒரு வகையில் இனியவர்களாக உள்ளனர். உங்களுக்குள் வேறுபாடுகள் எவை? போரில் வெற்றியும், வீரக்கழல் அணிந்த திருவடிகளும், விரைவாகச் செல்லும் குதிரைகளும் உடைய உன்னைக் கண்டு இவ்வுலகம் வியக்கிறது. அதற்குக் காரணம் என்னவோ? தலைவா! அதை எனக்கு உரைப்பாயாக.

No comments: