Monday, May 3, 2010

162. இரவலர்அளித்த பரிசில்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: இளவெளிமான். இளவெளிமான், வெளிமான் என்னும் குறுநில மன்னனின் இளவல்.
பாடலின் பின்னணி: இளவெளிமான் தன் தகுதி அறிந்து தனக்குப் பரிசளிக்கவில்லை என்று எண்ணி, அவன் அளித்த பரிசிலை ஏற்க மறுத்து,பெருஞ்சித்திரனார் குமணனிடம் பரிசு பெறச் சென்றார். குமணன், பெருஞ்சித்திரனாருக்குப் பெருமளவில் பரிசளித்தான். பரிசு பெற்ற பெருஞ்சித்திரனார், தன் ஊருக்குப் போகாமல், இளவெளிமான் ஊருக்குச் சென்று குமணன் அளித்த யானை ஒன்றை, இளவெளிமானின் காவல் மரத்தில் கட்டி, அதைத் தான் அவனுக்கு அளித்த பரிசு என்று கூறிச் சென்றார். மற்றும், இப்பாடலில் “இரப்போர்க்குப் பொருள் கொடுக்கும் புரவலன் நீ அல்லன்; ஆனால், பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் இல்லாமலும் இல்லை. உலகில் இரவலர்களும் புரவலர்களும் உள்ளனர் என்பதை நீ அறிவாயாக” என்று அவனுக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் விடை. பரிசில் பெற வந்த ஒருவன் அதனை பெற்றோ அல்லது பெறாமலோ, பரிசில் அளிப்பவனிடம் விடை பெறுதல்.

இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி; நின்ஊர்க்
5 கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த
நெடுநல் யானைஎம் பரிசில்;
கடுமான் தோன்றல் செல்வல் யானே.

அருஞ்சொற்பொருள்:
5.கடிமரம் = காவல் மரம். 7. கடுமான் = விரைவாகச் செல்லும் குதிரை; தோன்றல் = அரசன், தலைவன்

உரை: இரப்பவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலன் நீ அல்லன். இரப்பவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் இல்லாமலும் இல்லை. இரவலர்கள் உள்ளனர் என்பதையும் அவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்களும் உள்ளனர் என்பதையும் நீ அறிந்து கொள்வாயாக. உன் ஊரில் உள்ள காவல் மரம் வருந்துமாறு அதில் நான் கட்டிய பெரிய நல்ல யானை, நான் உனக்கு அளிக்கும் பரிசில். விரைவாகச் செல்லும் குதிரைகளையுடைய தலைவா! நான் செல்கிறேன்.

No comments: