பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார். இவர் பெயர் கருவூர்க் கந்தப்பிள்ளை என்று சிலர் கூறுகின்றனர். இவர் கதப்பிள்ளை என்பவரின் புதல்வர் என்றும் இவர் இயற் பெயர் சாத்தனார் என்றும் கருதப்படுகிறது. இவர் புறநானூற்றில் இயற்றிய இச்செய்யுள் மட்டுமல்லாமல் அகநானூற்றில் 309 - ஆம் செய்யுளையும், நற்றிணையில் 343-ஆம் செய்யுளையும் இயற்றியவர். “தமிழகம்” என்ற சொல்லை முதல் முறையாக இலக்கியத்தில் பயன்படுத்தியது இவர்தான் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்(168, 169, 170, 171, 172). இவன் சேரமான் கோதைக்குப் படைத் துணைவன். இவன் ஆண்மையிலும் கொடையிலும் சிறந்து விளங்கியவன். இவன் குதிரை மலையைச் சார்ந்த நாட்டுக்குத் தலைவன். இவனைப் பாடியவர்கள் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாரும், உறையூர் மருத்துவன் தாமோதரனாரும், வடம வண்ணக்கன் தாமோதரனாரும் ஆவர்.
பாட்டின் பின்னணி: தமிழகம் முழுதும் பிட்டங்கொற்றனின் புகழ் பேசப்படுவதைக் கண்ட புலவர் கருவூர்க் கதப்பிள்ளை அவனைக் காண வந்தார். இப்பாடல், அவ்வமயம் அவரால் இயற்றப்பட்டது.
திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை; இயன்மொழியும் அரச வாகையும் ஆம்.
பரிசில் துறை: புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.
இயன்மொழி: இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
அரச வாகை: அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
5 நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரல் சிறுதினை;
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
10 வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்;
கூதளம் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ, கூர்வேல்
15 நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும,
கைவள் ஈகைக் கடுமான் கொற்ற,
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
20 பாடுப என்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே.
அருஞ்சொற்பொருள்:
1.ஆர்த்தல் = ஒலித்தல்; பயிறல் = கூடுதல்; நனம் = அகற்சி; நனந்தலை = அகன்ற இடம். 2. கறி = மிளகு; அடுக்கம் = மலைப்பக்கம், மலைச் சாரல். 3. மிளிர்தல் = புரளுதல், மேலாதல்; கிளை = இனம், கூட்டம். 4. கடுங்கண் = குரூரம், கொடுமை; கேழல் = பன்றி; பூழி = புழுதி. 5. பதம் = சமயம். 6.பரூஉ = பருமை; குரல் = கதிர், தினை. 7. முந்து = பழைமையான (முன்னர்); யாணர் = புது வருவாய். 8. மரையா = காட்டுப் பசு; தீ = இனிமை. 9. தடி = தசை; புழுக்கல் = அவித்தல்; குழிசி = பானை. 10. வான் = அழகு; கேழ் = நிறம்; புடை = பக்கம்.11. சாந்தம் = சந்தனம்; உவித்தல் = அவித்தல்; புன்கம் = சோறு, உணவு. 12. கூதளம் = வெள்ளரி, கூதாளிச் செடி; குளவி = காட்டு மல்லிகை; முன்றில் = முற்றம். 13. கோள் = குலை; பகுத்தல் = ஈதல், பங்கிடுதல். 15. நறை = பச்சிலைக் கொடி. 16. வடி = கூர்மை; நவிலல் = பழகுதல். 17. வள் = வளம்கடு = விரைவு; மான் = குதிரை. 19. நெளிதல் = வருந்துதல். 22. வீதல் = கெடுதல்.
கொண்டு கூட்டு: பெரும, கொற்ற, பரிசிலர் நின்புகழை ஏத்திப் பாடுப என்ப; அதனால் யானும் நின்பால் பரிசில் பெற்றுப் பாடுவேனாக.
உரை: அருவிகள் ஒலிக்கும், மூங்கில்கள் அடர்ந்த அகன்ற இடத்தில், மிளகுக் கொடி வளரும் மலைப்பக்கத்தில் காட்டுப் பன்றிகள் தன் இனத்தோடு, காந்தளின் வளமான கிழங்குகளைத் தோண்டியெடுப்பதற்காகக் கிளறிய நிலத்தில் தோன்றிய புழுதியில், நல்ல நாள் வந்த சமயம் பார்த்துக் குறவர் உழாமல் விதைத்து விளைந்த பெரிய கதிரையுடைய சிறுதினையப் புது வருவாயாகப் பெற்று அதைப் புது உணவாக உண்ணுவர்.
காட்டுப் பசுவிடம் கறந்த நுரையுடன் கூடிய இனிய பாலில் மான் தசையை வேகவைத்தப் புலால் மணமுள்ள அழகிய நிறமுள்ள பானையின் வெளிப்புறத்தைக் கழுவாமல் உலைவைத்து, சந்தன விறகால் சமைத்த சோற்றை வெள்ளரி சிறந்து விளங்கும், காட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்னும், குதிரை மலைத் தலைவனே! கூர்மையன வேலையும், பச்சிலைக் கொடியுடன் தொடுத்த வேங்கை மலர் மாலையையும் அணிந்து கூரிய அம்பைச் செலுத்துவதில் பயிற்சி பெற்ற வீரர்களுக்குத் தலைவா! கையால் வழங்கும் ஈகையும் விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய தலைவா! உலகத்து எல்லையுள், தமிழகம் முழுதும் கேட்க, இரவலர்க்குப் பரிசளிக்காத மன்னர்கள் நாள்தோறும் நாணுமாறு நன்கு பரவிய உன் பழியற்ற புகழைப் பொய் பேசாத, நடுவு நிலை தவறாத நாவுடையோர் தங்கள் நாவு வருந்துமாறு புகழ்ந்து உன்னை பாடுவர் என்று பரிசிலர் கூறுவர்.
Monday, May 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment