Monday, May 3, 2010

165. எனக்குத் தலை ஈய வாள் தந்தனனே!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 151-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: குமணன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: கடையேழு வள்ளல்களின் காலத்திற்குப் பிறகு கொடையிற் சிறந்தவனாக விளங்கியவன் வள்ளல் குமணன். அவன் முதிர மலைப் பகுதியை ஆண்டு வந்தான். அவன் பெரும் புகழோடு நல்லாட்சி நடத்தியதைக் கண்டு பொறாமை அடைந்த அவன் இளவல் இளங்குமணன், குமணனோடு போரிட்டான். அப்போரில் தோற்ற குமணன், காட்டிற்குச் சென்று அங்கே வழ்ந்து வந்தான். அச்சமயம், பெருந்தலைச் சாத்தனார் குமணனைப் பாடிப் பரிசில் பெறச் சென்றார். அவன் அவருக்கு எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். அவ்வாறு இருப்பினும், அவன் பெருந்தலைச் சாத்தனார் பரிசு ஒன்றுமில்லாமல் திரும்பிச் செல்வதை விரும்பவில்லை. ஆகவே, அவன் தன் தலையை வெட்டி, அதைக் கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் அவன் பெருமளவில் பரிசு கொடுப்பான் என்று கூறித் தன் வாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்தான். அவ்வாளைப் பெற்றுக் கொண்டு, பெருந்தலைச் சாத்தனார் குமணன் சொல்லியவாறு செய்யாமல், இளங்குமணனிடம் சென்று தான் குமணனைச் சந்தித்ததையும் அவன் வாள் கொடுத்ததையும் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் விடை. பரிசில் பெற வந்த ஒருவன் அதனை பெற்றோ அல்லது பெறாமலோ, பரிசில் அளிப்பவனிடம் விடை பெறுதல்.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே;
துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையில்
5 தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;
தாள்தாழ் படுமணி இரட்டும் பூனுதல்
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றெனன் ஆகக் கொன்னே
10 பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்
நாடுஇழந் ததனினும் நனிஇன் னாதுஎன
வாள்தந் தனனே தலைஎனக்கு ஈயத்
தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்
ஆடுமலி உவகையோடு வருவல்
15 ஓடாப் பூட்கைநின் கிழமையோன் கண்டே.

அருஞ்சொற்பொருள்:
1.மன்னா = நிலை இல்லாத; மன்னுதல் = நிலை பெறுதல். 2. நிறீஇ = நிலை நிறுத்தி. 3. துன்னுதல் = அணுகுதல். 5. தொடர்பு = தொடர்ச்சி, ஒழுங்கு. 6. படு = பெரிய; இரட்டல் = ஒலித்தல்; பூ = புள்ளி; நுதல் = நெற்றி. 7. அருகா = குறையாத. 8. வய = வலிய; மான் = குதிரை; தோன்றல் = அரசன், தலைவன். 9. கொன்னே = வறிதே. 11. நனி = மிகவும். 14. ஆடு = வெற்றி; மலி = மிகுந்த. 15. பூட்கை = கொள்கை; கிழமையோன் = உரிமையோன்.

உரை: நிலையில்லாத இவ்வுலகில் நிலைபெற நினைத்தவர்கள் தம் புகழை நிறுவித் தாம் இறந்தனர். அணுகுதற்கரிய சிறப்புடைய செல்வந்தர்கள் வறுமையால் இரப்பவர்களுக்கு ஒன்றும் ஈயாததால், முற்காலத்தில் வாழ்ந்த வள்ளல்களின் வரிசையில் சேராதவர்களாக உள்ளனர். கால்வரைத் தாழ்ந்து ஒன்றோடு ஒன்று மாறி மாறி ஒலிக்கும் பெரிய மணிகளும், நெற்றியில் புள்ளிகளும், அசையும் இயல்பும் உடைய யனைகளை, பாடிவருபவர்க்குக் குறையாது கொடுக்கும் அழிவில்லாத நல்ல புகழையும், வலிய குதிரைகளையும் உடைய தலைவனாகிய குமணனைப் பாடி நின்றேன். பெருமை பெற்ற பரிசிலர் பரிசு பெறாமல் வறிதே செல்லுதல், தான் நாடு இழந்ததைவிட மிகவும் கொடுமையானது என்று கூறித் தன் தலையை எனக்குப் பரிசாக அளிப்பதற்காக என்னிடம் வாளைக் கொடுத்தான். தன்னிடம் தன்னைவிடச் சிறந்த பொருள் யாதும் இல்லாமையால் அவன் அவ்வாறு செய்தான். போரில் புறம் காட்டி ஓடாத கொள்கையுடைய உன் தமையனைக் கண்டு வெற்றி மிகுந்த மகிழ்ச்சியோடு நான் உன்னிடம் வந்தேன்.

சிறப்புக் குறிப்பு: உலகில் நிலைபெற்று இருப்பது புகழைத் தவிர வேறொன்றும் இல்லை என்று திருவள்ளுவர் கூறுவது இங்கு குறிப்பிடத் தக்கது.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல். (குறள் - 233)

பிறர் வறுமையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்பவன் (ஒப்புரவு செய்பவன்) வருந்துவது அவனால் பிறருக்கு உதவி செய்ய முடியாத நிலையில்தான் என்ற கருத்தைத் திருவள்ளுவர்,

நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும்நீர
செய்யாது அமைகலா வாறு. (குறள் - 219)

என்று ஒப்புரவு என்னும் அதிகாரத்தில் கூறுகிறார். திருவள்ளுவர் கருத்தும், இப்பாடலில் குமணன் தன்னால் பெருந்தலைச் சாத்தனாருக்குப் பரிசு கொடுக்க முடியவில்லையே என்று வருந்துவதும் ஒத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

No comments: