Monday, May 3, 2010

163. எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடப்பட்டோர்: பெருஞ்சித்திரனாரின் மனைவி.
பாடலின் பின்னணி: குமணனிடம் பரிசு பெற்ற பெருஞ்சித்திரனார், தன் இல்லத்திற்குச் சென்று, தான் குமணனிடமிருந்து பரிசாகப் பெற்ற செல்வத்தை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளுமாறு தன் மனைவியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
5 இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.

அருஞ்சொற்பொருள்:
1.நயந்து = விரும்பி; உறைதல் = வாழ்தல். 2. மாண் = மடங்கு; முதலோர் = மூத்தோர். 3. கடும்பு = சுற்றம்; யாழ - முன்னிலை அசைச் சொல். 4. குறி எதிர்ப்பு = எதிர் பார்ப்பு. 5. சூழ்தல் = ஆராய்தல், கலந்து ஆலோசித்தல். 6. வல்லாங்கு = நல்ல முறையில் (சிறப்பாக).

கொண்டு கூட்டு: மனை கிழவோய்! குமணன் நல்கிய வளன் நீயும் எல்லோர்க்கும் கொடுமதி எனக் கூட்டுக.

உரை: என் மனைவியே! பழங்கள் தொங்கும் மரங்கள் நிறைந்த முதிரமலைத் தலைவனும் செவ்விய வேலையுடையவனுமாகிய குமணன் கொடுத்த இந்தச் செல்வத்தை, உன்னை விரும்பி வாழ்பவர்க்கும், நீ விரும்பி வாழ்பவர்க்கும், பல வகைகளிலும் சிறந்த கற்புடைய உனது சுற்றத்தாருள் மூத்தோருக்கும், நமது சுற்றத்தாரின் கொடிய பசி நீங்குவதற்காக உனக்குக் கடன் கொடுத்தோர்க்கும், மற்றும் இன்னவர்களுக்கு என்னாமல், என்னையும் கலந்து ஆலாசிக்காமல், இப்பொருளை வைத்து நாம் நன்றாக வாழலாம் என்று எண்ணாது அதை எல்லோர்க்கும் கொடு.

No comments: