Saturday, December 15, 2012

371. பொருநனின் வறுமை!


371. பொருநனின் வறுமை!

பாடியவர்: கல்லாடனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 23-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனை பற்றிய செய்திகளைப் பாடல் 72-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், பண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போரில் வெற்றி பெற்றான். போர்க்களத்தில் பிணங்கள் சிதைந்து கிடந்தன. பேய்மகளிர் அப்பிணங்களைத் தின்று, மகிழ்ந்து நெடுஞ்செழியனை வாழ்த்தினர். பசியால் வாடிய பொருநன் ஒருவன் நெடுஞ்செழியனைக் கண்டு, அவன் புகழைப் பாடி, களிறுகளைப் பரிசாகப் பெறலாம் என்று பாடுவதாக புலவர் கல்லாடனார் இப்பாடலை இயற்றியுள்ளார். 

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மறக்கள வழி. அரசனை உழவுத் தொழில் புரியும் வேளாளனோடு ஒப்பிட்டுக் கூறுதல்.

அகன்றலை வையத்துப் புரவலர்க் காணாது
மரந்தலை சேர்ந்து பட்டினி வைகிப்
போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்
தயங்குஇரும் பித்தை பொலியச் சூடிப்
பறையொடு தகைத்த கலப்பையென் முரவுவாய்      5

ஆடுறு குழிசி பாடின்று தூக்கி
மன்ற வேம்பின் ஒண்பூ உறைப்பக்                       
குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக்
கூர்வாய் இரும்படை நீரின் மிளிர்ப்ப                    10

வருகணை வாளி . . . . .
.. .. .. .. .. .. .. .. .. .. அன்பின்று தலைஇ
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை                                  
வில்லேர் உழவின்நின் நல்லிசை யுள்ளிக்
குறைத்தலைப் படுபிணன் எதிரப் போர்புஅழித்து  15

யானை எருத்தின் வாள்மட லோச்சி
அதரி திரித்த ஆள்உகு கடாவின்
மதியத் தன்னஎன் விசியுறு தடாரி                                  
அகன்கண் அதிர ஆகுளி தொடாலின்
பணைமருள் நெடுந்தாள் பல்பிணர்த் தடக்கைப்      20

புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும!
களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி
விழுக்கொடு விரைஇய வெள்நிணச் சுவையினள்           
குடர்த்தலை மாலை சூடி உணத்தின
ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து                25

வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன
உருகெழு பேய்மகள் அயரக்
குருதித்துக ளாடிய களம்கிழ வோயே!                                     

அருஞ்சொற்பொருள்: 1. அகன்றலை = அகன்+தலை = அகன்ற இடம்; வையம் = உலகம்.  2. தலை = இடம்; வைகி = தங்கி, இருந்து.  3. போது = மலரும் பருவத்தரும்பு; அவிழ் = சோறு; அலரி = பூ. 4. தயங்கல் = ஒளி செய்தல்; பித்தை = ஆணின் தலைமயிர். 5. தகைதல் = அடக்குதல் (கட்டுதல்); கலப்பை = இசைக் கருவிகள் (பொருள்கள்) அடங்கிய பை; முரவு = சிதைவு, முரிவு. 6. ஆடு = சமைக்கை; குழிசி = பானை; பாடு = கேடு.  7. உறைதல் = ஒழுகுதல் (உதிர்தல்). 8. நசைதல் = விரும்புதல்; இருக்கை = இருப்பிடம். 9. ஆரிடை = அரிய வழி. 8. குறை = இன்றியமையாத செயல். 10. இரு = பெரிய; மிளிர்தல் = புரளுதல். 11. கணை = அம்பு.12. தலைஇ = பெய்து. 13. இரைதல் = ஒலித்தல்; முரைசு = முரசு; ஆர்க்கும் = ஒலிக்கும் (முழங்கும்); உரைசால் = புகழ் நிறைந்த. 14. இசை = புகழ். 17. அதரி திரித்தல் = நெற்பயிரைக் கடாவிட்டு உழக்குதல்; உகுத்தல் = நிலை குலைதல், சிதறுதல். 18. விசித்தல் = இறுகக் கட்டுதல்; தடாரி = ஒரு வகைப் பறை. 19. ஆகுளி = ஒரு வகைப் பறை. 20. பணை = மருத நிலப்பறை, பறைக்குப் பொதுவான பெயர்; பிணர் = சொர சொரப்பு; தடம் = பெருமை; தடக்கை = தடம் + கை = பெரிய கை (துதிக்கை). 21. புகர் = புள்ளி; முகவை = பெறும் பொருள் (பரிசு). 22. களிறு = பன்றி; கோடு = கொம்பு; வால் = வெண்மை; எயிறு = பல். 23. விழுக்கு = கொழுப்பு; விரைஇ = கலந்து. 26. வியங்குதல் = விளங்குதல். 27. உரு =அச்சம்; அயர்தல் = விளையாடுதல் (கூத்தாடுதல்). 28. துகள் = புழுதி (தூள்); கிழவோன் = உரிமையுடையவன்.

கொண்டு கூட்டு: பேய்மகள் வாழியர் பலவென அயர; துகளாடிய களங்கிழவோய், பெரும, காணாது, வைகி, தகைத்த கலப் பையேனாய், நீந்தி, உள்ளி, வந்திசின் என மாறிக் கூட்டுக.

உரை: அகன்ற இடங்களையுடைய இவ்வுலகில் எங்களைப் பாதுகாக்கும் வேந்தரைக் காணாததால், மரத்தின் அடியில் பட்டினியோடு இருந்து, அரும்புகளாக இருந்து மலர்ந்த பூக்களை மாலையாகத் தொடுத்து, ஒளிறும் தலைமுடிமேல் அழகுடன் சூடிக்கொண்டு பறையொடு கூடிய இசைக் கருவிகள் அடங்கிய பையோடு, சிதைந்த வாயையுடைய சமையல் செய்யும் பானையைக் கேடின்றி தூக்கிகொண்டு, மன்றத்திலிருந்த வேப்பமரத்திலிருந்த ஒளிபொருந்திய பூக்கள் உதிர, சோற்றுக்குரிய அரிசி இல்லாததால், மிக இன்றியமையாத வேறு எச்செயலையும் செய்ய விரும்பாமல், பொருள் தேடுவதிலேயே விருப்பமுடையவனானேன். அரிய வழிகள் பல கடந்து, கூர்மையான படைக்கருவிகள் அவைகளின் இயல்பிற்கேற்பச் சுழலவும், அம்புகள் அன்பில்லாமல் பகைவர் மேற்சென்று … ஒலிக்கும் முரசு முழங்கும் புகழ் நிறைந்த பாசறையில் உள்ள, வில்லால் போர் செய்யும் உன்னுடைய நல்ல புகழை நினைத்து, தலைகள் வெட்டப்பட்ட உடல்கள் குவிய, பிணக்குவியலை அழித்து, யானைகளாகிய எருதுகளைப் பனைமடலால் ஓச்சி (செலுத்தி) ஆளாகிய வைக்கோலை அடித்து உதறிய களத்தில், முழுமதி போன்றதும், வாரால் இறுகக் கட்டப்பட்டதுமாகிய தடாரிப் பறையை அதன் அகன்ற கண் அதிரும்படி அடித்து, ஆகுளிப் பறையைக் கொட்டிக்கொண்டு, பறை போன்ற நெடிய கால்களையும், சொர சொரப்புடைய பெரிய கையையும், புள்ளிகள் நிறைந்த முகத்தையுமுடைய யானைகளைப் பரிசாகப் பெறலாம் என்று வந்தேன். பெரும! பன்றியின் கொம்பு போன்ற வெண்ணிறமான பற்களால் கடித்து இழுத்து, கொழுப்புக் கலந்த வெண்மையான தசையைத் தின்று சுவைப்பவளாய்க், குடல்களைத் தலையில் மாலையாக அணிந்துகொண்டு, உண்ணுதற்குக் குறையாதவாறு பெரிய வளமாகிய பிணங்களைத் தந்த இவ்வேந்தன், வானத்தில் விளங்கும் பல விண்மீன்களைவிடப் பல்லாண்டுகள் வாழ்வானாக என்று, அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் கூத்தாடும் குருதி கலந்த செந்தூள் பறக்கும் போர்க்களத்திற்கு உரிமையுடையவனே!

370. பழுமரம் உள்ளிய பறவை!


370. பழுமரம் உள்ளிய பறவை!

பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 10-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி ( 370, 378). இவன் பாழி என்னும் ஊரில் நடைபெற்ற போரில் வடுகரை வென்றான். இடையன் சேந்தன் கொற்றனார் என்னும் புலவர் பாழியில் வடுகரை வென்ற சோழனை இளம்பெருஞ்சென்னி என்று அகநானூற்றுப் பாடல் 375-இல் குறிப்பிடுகிறார். இந்த இருமன்னர்களும் ஒருவரே என்று கருதப்படுகிறது. மற்றும், சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, சோழன் பாமுளூர் எறிந்த இளஞ்சேட்சென்னி என்று அழைக்கப்பட்ட மன்னர்களும் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியும் ஒருவனே என்றும் கருதப்படுகிறது.   
பாடலின் பின்னணி: ’எனக்கு ஆதரவு அளிப்போர் இல்லாததால், என் சுற்றம் பசியால் வாடியது. நீ போரில் வெற்றி பெற்றதால், உன்னிடம் வந்தால் யானைகளைப் பரிசாகப் பெறலாம் என்று எண்ணி என் சுற்றத்தாருடன், காட்டு வழியைக் கடந்து உன்னைக் காண வந்தேன்.’ என்று பொருநன் ( அல்லது பாணன்) ஒருவன் கூறுவதுபோல் ஊன்பொதி பசுங்குடையார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மறக்கள வழி. அரசனை உழவுத் தொழில் புரியும் வேளாளனோடு ஒப்பிட்டுக் கூறுதல்.

வள்ளியோர்க் காணாது உய்திறன் உள்ளி,
நாரும் போழும் செய்தூண் பெறாஅது
பசிதினத் திரங்கிய இரும்பேர் ஒக்கற்கு
ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ
வேருழந்து உலறி மருங்குசெத்து ஒழியவந்து 5

அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்
உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்
பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீளிடை
வரிமரல் திரங்கிய கானம் பிற்படப்              10

பழுமரம் உள்ளிய பறவை போல
ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்
துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப
விளைந்த செழுங்குரல் அரிந்துகால் குவித்துப்
படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி            15

எருதுகளி றாக வாள்மடல் ஓச்சி
அதரி திரித்த ஆளுகு கடாவின்
அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
வெந்திறல் வியன்களம் பொலிகஎன்று ஏத்தி
இருப்புமுகம் செறித்த ஏந்தெழில் மருப்பின்  20

வரைமருள் முகவைக்கு வந்தனென் பெரும,
வடிநவில் எஃகம் பாய்ந்தெனக் கிடந்த
தொடியுடைத் தடக்கை ஓச்சி வெருவார்
இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி
அழுகுரற் பேய்மகள் அயரக் கழுகொடு                  25

செஞ்செவி எருவை திரிதரும்
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!


அருஞ்சொற்பொருள்: 1. வள்ளியோர் = கொடையாளர்; உய்தல் = பிழைத்தல்; திறன் = வழி; உள்ளி = நினைத்து. 2. போழ் = குருத்து. 3. திரங்குதல் = தளர்தல், உலர்தல்; இரு = பெரிய; பேர் = பெரிய; ஒக்கல் = சுற்றம். 4. ஆர் = நிறைவு; பதம் = உணவு; கண் = நோக்கம்; மாதிரம் = திசை; துழைஇ = துழாவி (தேடி). 5. வேர் = வியர்வை; உழந்து = வருந்தி; மருங்கு = வயிறு. 6. அத்தம் = பாலை நிலம்; குடிஞை = கோட்டான்; துடி = உடுக்கை; மருள் = போன்ற; தீ = கொடுமை. 7.  உழுஞ்சில் = உழிஞ்சில் = ஒரு வகை மரம்; கவடு = மரக்கொம்பு; அம் – சாரியை (சார்ந்து வரும் இடைச் சொல்). 8. பெடை = பெண் பறவை; பயிர்தல் = அழைத்தல். 9. கழை = மூங்கில். 10. மரல் = அரலை, கற்றாழை; திரங்குதல் = வாடுதல்; கானம் = காடு. 12. மாரி = மழை. 13. துவைத்தல் = பேரொலி. 14. குரல் = கதிர்; அரிந்து = அறுத்து.15. வாங்கி = வளைத்து. 17. அதரி திரித்தல் = நெற்பயிரைக் கடாவிட்டு உழக்குதல்; உகுத்தல் = நிலை குலைதல், சிதறுதல். 18. தடாரி = ஒரு வகைப் பறை; தெளிர்ப்ப = ஒலிக்க; ஒற்றி = இசைத்து. 19.  வெந்திறல் = வெம் + திறல் = மிகுந்த வலிமை. 20. மருப்பு = கொம்பு. 21. வரை = மலை; மருள் = போன்ற; முகவை = பெறும் பொருள் (பரிசு). 22. நவில் = கோடரி. 23. தடக்கை = பெரிய கை; வெருவார் = அஞ்சாதவர்கள்; ஒச்சுதல் = உயர்த்துதல். 24. இனம் = கூட்டம்; விராய = கலந்த (சுற்றிக்கொள்ள); அடைசுதல் = உடுத்தல். 25. அயர்தல் = விளையாடுதல். 26.  எருவை = பருந்து. 27. கிழவோன் = உரிமையுடையவன்.

கொண்டு கூட்டு: கிழவ, பெரும, பறவைபோல, ஏத்தி, முகவைக்கு வந்தனன் எனக் கூட்டுக.

உரை: வள்ளன்மை உடையவரைக் காணாததால், பிழைக்கும் வழியை எண்ணி, பனை நாரையும் குருத்தையும் கையில் வைத்துக் கொண்டு, உணவு பெறாது, பசியால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார்க்கு நிறைய உணவு பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு, நாற்றிசையும் தேடி, உடலில் வியர்வை ஒழுக வருந்தி, வயிறு வாடுமாறு வறண்ட நிலங்களைக் கடந்து வந்த வழியில், கோட்டானின் துடியொலி போன்ற கடிய குரலோசை, உழுஞ்சில் மரத்தின் கிளைகளிலிருந்த பெண்பருந்தை அழைக்கும் ஆண்பருந்தின் குரலோடு கலந்து ஒலித்தது. அங்கே, மூங்கில் மரங்கள் காய்ந்து கிடந்தன. வரிகளையுடைய மரல் பழங்கள் வற்றி வாடிக் கிடந்தன.  அந்த வறண்ட காட்டு வழியில் பழமரத்தைத் தேடிச் செல்லும் பறவைகளைப் போல நான் வந்தேன்.

ஓளி பொருந்திய படைக் கருவிகள், பெருமழையில் விழும் கனிகள் போல், பகைவரின் தலைகளை வெட்டி வீழ்த்தியதால், வெள்ளம்போல் ஒலியுடன் குருதி ஒடியது. விளைந்த செழுமையான கதிர்களைப் போன்ற பகைவரின் கழுத்தை அறுத்து, காலோடு சேர்த்துக் குவித்து, இறந்த பிணங்களாகிய பல குவியல்கள் அழியும்படி வளைத்து, யானையை எருதாகவும், வாளைத் தார்க்கோலாகவும், கொண்டு செலுத்தி, போரடிக்கும் நெற்களத்தைப் போலப் பகைவர் வீழந்து கிடக்கும் பெரிய போர்க்களத்திலே, அகன்ற கண்ணையுடைய தடாரிப் பறையை ஒலித்து, உன்னுடைய வலிமை மிகுந்த, அகன்ற போர்க்களம் விளங்குவதாக எனப் பாராட்டி, இரும்பினால் செய்யப்பட்ட பூண் அணிந்த, உயர்ந்த, அழகிய கொம்புகளையுடைய, மலை போன்ற யானைகளைப் பரிசாகப் பெறலாம் என்று நான் வந்தேன்.  கூர்மையான கோடரியால் வெட்டப்பட்டுத் துண்டாகிய தொடியணிந்த பெரிய கையைத் தூக்கி, அஞ்சாத வீரர்களின் குடல்கள் தன் காலைச் சுற்றிக்கொள்ள, அவற்றை எடுத்துப் பேய்ப்பெண் தன் அழுகுரலால் பாடிக் கூத்தாட, கழுகோடு, சிவந்த காதுகளையுடைய பருந்துகளும் வட்டமிட்டுத் திரியும் அஞ்சத்தக்கப் இடங்களையுடைய போர்க்களத்திற்கு உரிமையுடையவனே!

369. போர்க்களமும் ஏர்க்களமும்!


369. போர்க்களமும் ஏர்க்களமும்!

பாடியவர்: பரணர். இவரை பற்றிய குறிப்புக்களைப் பாடல் 4-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன். சேர நாட்டைச் சிறப்பாக ஆட்சி புரிந்த சேர மன்னர்களுள் சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவனும் ஒருவன். இவனுடைய கடற்படை  பல வெற்றிகளைப் பெற்றதால் இவன் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் என்று அழைக்கப்பட்டான். இவன் சேரமான் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்றும் அழைக்கப்பட்டான். இவனும் பதிற்றுப் பத்தின் ஐந்தாம் பத்தில் பரணரால் பாடப்பட்ட, இமயவரம்பன் மகனாகிய, சேரன் செங்குட்டுவனும் ஒருவனே என்பது அறிஞர்களின் கருத்து.

பாடலின் பின்னணி: அரசனின் போர்ச்செயலை உழவனின் செயலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல்கள் ‘மறக்கள வழி’ என்னும் துறையைச் சார்ந்தவை.  புறநானூற்றுப் பாடல்கள் 368, 369, 370, 371, 373 ஆகியவை மறக்கள வழித்துறையைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இப்பாடல்களில், புலவர்கள், போரில் பயன்படுத்தப்படும் விலங்குகள் (யானை, குதிரை), பொருள்கள் (தேர், வில், அம்பு, வேல்) மற்றும் போரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் (யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றை  அழித்தல், போர்க்களம் குருதி தோய்ந்து காட்சி அளித்தல்) ஆகியவற்றை முறையே உழவுத் தொழிலில் பயன்படுத்தப்படும் எருது, ஏர் ஆகியவற்றோடும், உழவுத் தொழிலில் நடைபெறும்  நிகழ்ச்சிகளோடும் ஒப்பிடுகிறார்கள். இப்பாடல்கள் உவமையணிக்கு எடுத்துக்காட்டாக விளங்கின்றன.

புலவர் பரணர், ஏர்க்களத்தை உவமையாகக் காட்டும் போர்க்களத்தில், பூதம், பேய், நரி
முதலியன பிணங்களை உண்ணுகின்றன. அங்கே, பாடி வருவோர்க்குப் பரிசில்
வழங்குவதற்காக சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் வீற்றிருக்கிறான். அங்கு வந்த பொருநன் ஒருவன் ’அரசே, நான் என் தடாரியை அறைந்து, நின் புகழ் பாடிவந்தேன். என் வறுமையைக் களைவதற்குக் கன்றுகளோடும், பெண்யானைகளோடும் கூடிய களிறுகளைப் பரிசாகத் தருவாயாக.’ என்று கேட்பதாகப் புலவர் பரணர் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மறக்கள வழி. அரசனை உழவுத் தொழில் புரியும் வேளாளனோடு ஒப்பிட்டுக் கூறுதல்.

இருப்புமுகம் செறித்த ஏந்தெழில் மருப்பின்
கருங்கை யானை கொண்மூ ஆக,
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் ஆக வயங்குகடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக்கு ஆக,                            5

அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
வெவ்விசைப் புரவி வீசுவளி யாக,
விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
ஈரச் செறுவயின் தேர்ஏர் ஆக,                      10

விடியல் புக்கு நெடிய நீட்டிநின்
செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி,
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு         15

கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
பூதங் காப்பப் பொலிகளம் தழீஇப்,
பாடுநர்க்கு இருந்த பீடுடை  யாள!
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை                   20

அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்
பாடி வந்திசின் பெரும பாடுஆன்று
எழிலி தோயும் இமிழிசை அருவிப்
பொன்னுடை நெடுங்கோட்டு இமயத் தன்ன
ஓடை  நுதல ஒல்குதல் அறியாத்                             25

துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா ஈகைத் தகைவெய் யோயே!

அருஞ்சொற்பொருள்: 1. இருப்பு = இரும்பு; முகம் = கொம்பின் நுனி; செறித்தல் = திணித்த; ஏந்தல் = உயர்ச்சி; எழில் = அழகு; ஏந்தெழில் = மிகுந்த அழகு; மருப்பு = கொம்பு (தந்தம்). 2. கருமை = பெருமை, வலிமை; கொண்மூ = மேகம். 3. நீள்மொழி = வஞ்சினம். 4. வயங்குதல் = விளங்குதல்; கடிப்பு = குறுந்தடி. 6. அரா = பாம்பு; பனிக்கும் = நடுங்கும்; அணங்கு = வருத்தம். 7. வெவ்விது = வெய்து = விரைவு, கொடியது; விசை = விரைவு (செலவு); புரவி = குதிரை; வளி = காற்று. 8. விசை = விரைவு; வீங்குதல் = பருத்தல்; உகைத்தல் = செலுத்துதல். 9. கணை = அம்பு; கிடக்கை = இடம் (போர்க்களம்); கண்ணகன் கிடக்கை = பெரிய போர்க்களம். 10. செறு = வயல். 12. செரு = போர்; மிளிர்தல் = புரளுதல்; திருத்துதல் = மேல்கீழாக்க்குதல். பை = பசுமை; சால் = படைச்சால்; உழவு சால்.13. கணையம் = தடி (தண்டாயுதம்); வித்தி = விதையாகத் தெளித்து.14. விழு = பெரிய; வெரு = அச்சம்; பைங்கூழ் = இளம்பயிர். 15. பிறங்குதல் = உயர்தல்; போர்பு = நெற்போர். 16. கணம் = கூட்டம்; கழுது = பேய்; படுதல் = தங்குதல். 17. தழீஇ = தழுவி. 19. தேய்வை = சந்தனம்; காழ் = குத்துக்கல். 20. வேய்வை = குற்றம்; விருந்து = புதுமை. 21. அரிக்குரல் தடாரி = நுண்ணிய ஓசையையுடைய தடாரிப்பறை; உருப்பம் = வெப்பம்; ஒற்றி = இசைத்து (அறைந்து). 22. பாடு = ஓசை; ஆன்று = நிறைந்து. 23. எழிலி = மேகம்; இமிழ்தல் = ஒலித்தல். 25. ஓடை = நெற்றிப் பட்டம்; ஒல்குதல் = சுருங்குதல். 26. துடி = குறிஞ்சிப் பறை; குழவி = கன்று; பிடி = பெண் யானை. 27. மிடைதல் = நிறைதல்; இடைமிடைந்த = இடைஇடையே நிறைந்த. 28. வேழம் = யானை; முகவை = கொடுக்கும் பொருள் (பரிசு); மதி = மின்ஞிலை அசைச்சொல். 29. தாழா = குறையாத; வெய்யோய் = விரும்புபவன்.

கொண்டு கூட்டு: பீடுடையாள, பெரும, தடாரி ஒற்றிப் பாடி வந்திசின், வெய்யோய், குழவிய பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி எனக் கூட்டுக.

உரை: இரும்பால் செய்யப்பட்ட பூண் அணிவிக்கப்பட்ட, உயர்ந்த, அழகிய கொம்புகளையும், பெரிய துதிக்கையையும் உடைய யானைகள் மேகங்கள் போல் உள்ளன.வஞ்சினம் கூறும் மறவர்கள் பகைவரைத் தாக்குவதற்காக உயர்த்திய வாள்கள் மின்னலைப் போல் உள்ளன. விளங்குகின்ற குறுந்தடியால் அடிக்கப்பட்டு, பலியூட்டப்பட்ட முரசின் முழக்கம் மழையின் இடி முழக்கம் போல் உள்ளது. அந்த இடி முழக்கத்தால் பகையரசராகிய பாம்புகள் நடுங்கி வருந்தும் பொழுதில், மிகுந்த வேகத்துடன் செல்லும் குதிரைகள் காற்றுப் போலவும், விரைவாக அம்புகளைச் செலுத்தும் வலிய வில்லின் பெரிய நாண் செலுத்திய அம்புகளாகிய மழை பொழிந்து, குருதி தோய்ந்து ஈரமாகிய பெரிய போர்க்களத்தில் உள்ள தேர்கள் ஏர்களைப் போல் உள்ளன. விடியற்காலைப் பொழுதில் புகுந்து, நீண்ட படைக்கலங்களைப் பயன்படுத்திப் பகைவர்களின் படைக்கருவிகள் கீழ்மேலாகப் புரட்டப்பட்ட, குருதியில் உண்டாகிய படைச்சாலில், கையில் பிடித்துப் பகைவர் எறியும் ஒளிமிகுந்த வேலும், கணையமரங்களும் விதைகள்போல் நிலத்தில் விதைக்கப்பட்டன. அங்கே, வெட்டி வீழ்த்தப்பட்ட பெரிய தலைகளும், பிணங்களும் காண்போர்க்கு அச்சததை விளைவிக்கின்றன. பிணங்களாகிய இளம்பயிரைப் பேய்மகளிர் பற்றி இழுக்கின்றனர். பிணங்கள் நிரம்பிய பல பிணக்குவில்களில், நரிகளின் கூட்டத்தோடு பேய்களும் மொய்க்கப், பூதம் காவல் புரியும் களத்தைப் பாடுவோரின் பாடல்களைக் கேட்டற் பொருட்டு வீற்றிருந்த பெருமைக்குரியவனே!  கல்லில் தேய்த்து அரைக்கப்படும் வெண்மையான சந்தனக் கட்டை போன்ற, இழுத்துக் கட்டப்பட்ட, குற்றமில்லாத, புதிதாகப் போர்க்கப்பட்ட, நுண்ணிய ஓசையையுடைய பெரிய தடாரிப் பறையைச் சூடுபடுத்தி அடித்துப் பாடிவந்தேன். பெருமானே! மேகங்கள் தவழும், ஒலிமிகுந்த அருவிகள் நிறைந்த, பொன்னிறமான நெடிய உச்சியையுடைய இமயம் போன்ற, பட்டமணிந்த நெற்றியையும், துடி போன்ற அடிகளையுமுடைய, கன்றுகளைக்கொண்ட பெண்யானைகளின் இடையிடையே நிறைந்துள்ள ஆண்யானைகளைப் பரிசாக அளிப்பாயாக.  குறையாத ஈகைத் தன்மையை விரும்புபவனே! 

368. பாடி வந்தது இதற்கோ?


368. பாடி வந்தது இதற்கோ?

பாடியவர்: கழாத்தலையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 62-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்.
பாடலின் பின்னணி: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்றும் அழைக்கப்பட்டான். அவன் கரிகால் வளவனின் மகன் மணக்கிள்ளி என்பவனின் மகள் நற்சோனை என்பளை மணம் புரிந்து கொண்டதாகச் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். வேற்பஃறடக்கை என்பவன் கரிகால் வளவனின் மற்றொரு மகன் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். என்ன காரணத்தினாலோ, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் உறவினனாகிய வேற்பஃறடக்கைக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரில் இருமன்னர்களும் இறந்ததாகக் கூறப்படுகிறது.

போரில் வெற்றிபெற்ற மன்னன், போர்க்களத்திற்கு வந்து தன்னைப் புகழந்து பாடிய பாணர்களுக்கும் பொருநர்களுக்கும், தோல்வி அடைந்த மன்னனுடைய யானை, தேர், குதிரை முதலியவற்றைப் பரிசாக அளிப்பது சங்க காலத்தில் மரபாக இருந்தது. அம்மமரபிற்கேற்பப், பொருநன் ஒருவன், ’இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் போரில் வெற்றி பெறுவான்; அவனிடம் பரிசாக யானை, தேர், குதிரை முதலியவற்றைப் பெறலாம்.’ என்று எண்ணிப் போர்க்களத்திற்கு வந்தான். ஆனால், போர்க்களத்தில் இரு மன்னர்களும் புண்பட்டு இறக்கும் தருவாயில் இருந்ததால், வெற்றி பெற்றவரும் இல்லை; தோல்வி அடைந்தவரும் இல்லை. அதுமட்டுமல்லாமல், போரில் யனைகள், தேர்கள், குதிரைகள் எல்லாம் அழிந்தன.  ஆகவே, பரிசு பெறலாம் என்று எதிர்பார்த்து வந்த பொருநன் ஏமாற்றம் அடைந்தான். அவனுடைய, ஏமாற்றத்தைக் கண்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தன் கழுத்தில் இருந்த மணிமாலையைப் பரிசாகப் பெற்றுக் கொள்ளுமாறு பொருநனுக்குக் குறிப்பால் உணர்த்தினான். அந்தக் காட்சியைக் கண்ட புலவர் கழாத்தலையார், இமயவரம்பனின் செயலை இப்பாடலில் புகழ்ந்து பாடியுள்ளார்.


திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மறக்கள வழி. அரசனை உழவுத் தொழில் புரியும் வேளாளனோடு ஒப்பிட்டுக் கூறுதல்.

களிறு முகந்து பெயர்குவம் எனினே,
ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்
கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன;
கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே,
கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி                      5

நெடும்பீடு அழிந்து நிலம்சேர்ந் தனவே;
கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே,
மெய்ந்நிறை வடுவொடு பெரும்பிறி தாகி
வளிவழக் கறுத்த வங்கம் போலக்
குருதியம் பெரும்புனல் கூர்ந்தொழிந் தனவே, யாங்க   10

முகவை இன்மையின் உகவை இன்றி
இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து
ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ!
கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப்                  15

பாடி வந்த தெல்லாம் கோடியர்
முழவுமருள் திருமணி மிடைந்ததோள்
அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே.


அருஞ்சொற்பொருள்: 1. முகந்து = நிரம்பப் பெற்று; பெயர்தல் = போதல். 2. ஒளிறுதல் = விளங்குதல்; மழை = நீருள்ள மேகம். 3. கைம்மா = யானை; கணை = அம்பு. 4. கொடுஞ்சி = கொடிஞ்சி = தேரின் முன்பாகத்தில் உள்ள அலங்கார உறுப்பு (தாமரை மொட்டுப் போல் உள்ள தட்டு). 5. கடு= விரைவு; பரிதல் = ஓடுதல்; மான் = குதிரை; வாங்கு = வளைவு; வயின் = இடம்; ஒல்குதல் = தளர்தல், கெடுதல். 6. பீடு = வலிமை. 7. கொய்தல் = அறுத்தல்; சுவல் = குதிரையின் கழுத்திலுள்ள மயிர்; புரவி = குதிரை. 8. பெரும் பிறிது = இறப்பு. 9. அறுத்தல் = இல்லாமற் செய்தல்; வங்கம் = மரக்கலம் (படகு). 10. கூர்தல் = மிகுதல் (நிறைதல்); யாங்க = அவ்வாறாக. 11. முகவை = கொடுக்கும் பொருள் (பரிசு); உகவை = மகிழ்ச்சி. 13. அழி = வைக்கோல்; ஆள் அழி = ஆளாகிய வைக்கோல்; படுத்தல் = சேர்ப்பித்தல். 14. கடா = யானை மதம். 15. தெடாரி = தடாரிப் பறை; தெண்கண் = தெளிந்த இடம்; தெளிர்ப்ப = ஒலிக்க; ஒற்றி = அடித்து (இசைத்து). 16. கோடியர் = கூத்தர். 17. முழவு = முரசு, பறைப்பொது; மருள் = போன்ற; மிடைதல் = செறிதல், கலத்தல். 18. அரவு = பாம்பு; உறழ = போன்ற; ஆரம் = மாலை; முகக்குவம் = பெறுவோம் (பெறலாம்).

கொண்டு கூட்டு: உழவ, களிறு தொலைந்தன; தேர் நிலம் சேர்ந்தன; புரவி கூர்ந்தொழிந்தன; பாடி வந்ததெல்லாம் ஆரம் முகக்குவம் என்று போலும் எனக் கூட்டுக.

உரை: வாளாகிய ஏரையுடைய உழவனே (வாளால் வெற்றிபெறும் வேந்தே)! யானைகளைப் பெறலாம் என்று நினைத்து வந்தால், ஒளியுடன் கூடிய மேகங்களைத் தடுக்கும் மலைபோன்ற யானைகளெல்லாம் அம்புபட்டு இறந்து கிடக்கின்றன. கொடிஞியையுடைய தேர்களைப் பெறலாம் என்று நினைத்து வந்தால், விரைந்து செல்லும் குதிரைகள் வளைவான பாதைகளில் சென்றதால் நெடிய தேர்கள் வலிமை இழந்து, அழிந்து நிலத்தில் கிடக்கின்றன.  அழகாக நறுக்கபட்ட பிடரி மயிருள்ள குதிரைகளைப் பெறலாம் என்று நினைத்து வந்தால், உடலெல்லாம் புண்களோடு இறந்து, அவை காற்றில்லாத கடலில் உள்ள மரக்கலங்கள் போல் குருதி வெள்ளத்தில் கிடக்கின்றன. அவ்வாறு, பெறுவதற்கு எதுவும் இல்லாததால், உள்ளத்தில் மகிழ்ச்சியின்றி, இரப்போர் வருந்தும் போர்க்களத்தில், காலாட்படையைச் சேர்ந்த வீரர்களின் உடல்கள், யானைகளால் ஒதுக்கப்பட்டு, வைக்கோற் போர்போல் குவிந்து கிடக்கின்றன. மதமுள்ள யானையின் கால்தடம் போன்ற தடாரிப் பறையை ஒலித்து இசைத்துப் பாடி வந்ததெல்லாம், கூத்தர்களின் முழவு போன்ற, அழகிய மணிகளால் செய்யப்பட்ட   மணிமாலைகள் செறிந்த உன்னுடைய தோளில் கிடக்கும் பாம்பு போன்ற மாலையைப் பெறுவதற்குத்தான் போலும். 

367. வாழச் செய்த நல்வினை!


367. வாழச் செய்த நல்வினை!

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.
பாடப்பட்டோர்: சேரமான் மாவண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவேந்தர்கள்.
பாடலின் பின்னணி: ஒருகால், சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தனர்.  அதைக் கண்ட ஒளவையார் பெருமகிழ்ச்சியோடு இப்பாடலை இயற்றியுள்ளார். ’வேந்தர்களே! இவ்வுலகம் வேந்தர்களுக்கு உரியதாயினும், அவர்கள் இறந்தால், இவ்வுலகம் அவர்களோடு செல்வதில்லை. ஆகவே, அறநெறிகளில் பொருளீட்டி, இரவலர்க்கு வழங்கி, இன்பமாக வாழுங்கள்.  உங்கள் வாழ்நாட்களில் நீங்கள் செய்த நல்வினையைத் தவிர நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை.  எனக்குத் தெரிந்தது இதுதான். ‘  என்று இப்பாடலில் ஒளவையார் மூவேந்தர்களுக்கும் அறிவுரை கூறுகிறார். 
திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும், தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து                  5

பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது                           10

ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,
யான்அறி அளவையோ இதுவே; வானத்து             15

வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநும் நாளே!

அருஞ்சொற்பொருள்: 1. நாகம் = நாகலோகம் = தேவலோகம்; பாகார் = பாகு+ஆர்; பாகு = பங்கு; ஆர்தல் = பொருந்துதல்; மண்டிலம் = வட்டம், நாடு. 3. நோன்மை = வலி; நோற்றார் = வலிமையுடையோர். 4. ஏற்றல் = இரத்தல். 6. பாசிழை = பாசு + இழை; பாசு = பசுமை; பொலம் = பொன். 7. நாரரி = நாரால் வடிக்கப்பட்ட; தேறல் = கள்ளின் தெளிவு; மாந்துதல் = குடித்தல், உண்ணுதல். 8. அருகாது = குறையாது; வீசுதல் = குறையாது கொடுத்தல். 9. வைகல் = நாள். 11. ஆழ்தல் = மூழ்குதல் (இறத்தல்); புணை = தெப்பம். 12. ஒன்று – இங்கு வீடுபேற்றைக் குறிக்கிறது; புரிதல் = விரும்பல்; இருபிறப்பாளர் = பார்ப்பனர். 13. முத்தீ = வேள்வி செய்யும் பொழுது அந்தணர்கள் வளர்க்கும் மூன்று வகையான தீ (ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம்); புரைய = போல; காண் = அழகு; தக= பொருந்த. 16. வயங்குதல் = விளங்குதல்; இம் – ஒலிக் குறிப்பு. 17. உறை = மழைத்துளி. 18. பொலிதல் = சிறத்தல், செழித்தல்

கொண்டு கூட்டு: வேந்திர், மண்டிலம் செல்லா ஒழியும்; சொரிந்து, சிறந்து வீசி, வாழ்தல் வேண்டும்;  புணைபிறிது இல்லை, மீனினும் உறையினும் தோன்றிப் பொலிக எனக் கூட்டுக.

உரை: தேவலோகத்தைப் போன்ற பகுதிகளையுடைய நாடு, அந்த நாட்டு வேந்தனுடையதாக இருந்தாலும், அவ்வேந்தன் இறக்கும்பொழுது அது அவனுடன் செல்வதில்லை.  அது அவனுக்குப் பின்னர் வரும் தொடர்பில்லாத வலியோர்க்குப் போய்ச் சேரும். பொருளை வேண்டி இரந்த பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஈரக்கை நிறைய பூவும் பொன்னும் நீர்வார்த்துக் கொடுத்தும், நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும், நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை அருந்தியும், மகிழ்ச்சியோடும், சிறப்பாகவும், இரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறையாது கொடுத்தும், இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும் வாழ்க. நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும். வானத்தில் விளங்கும் விண்மீன்களையும் இம்மென்ற ஒலியுடன் பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட நும்முடைய வாழ்நாட்கள் மேம்பட்டு விளங்குவன ஆகுக.

சிறப்புக் குறிப்பு: புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களில், இந்த ஒரு பாடல் மட்டுமே மூவேந்தர்களும் ஒருங்கிருந்தபொழுது பாடப்பட்ட பாடல்.

ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்பவை, அந்தணர்கள் வேள்வி செய்யும் பொழுது வளர்க்கும் மூன்று தீ வகைகளாகும்.  அவற்றுள் ஆகவனீயம் என்னும் தீ, தேவர்களுக்காக யாகசாலையின் வடகிழக்கில் நாற்கோணக் குண்டத்தில் வளர்க்கப்படுவது. தட்சிணாக்கினி என்னும் தீ, தெற்கில் எட்டாம் பிறைத் திங்கள் போன்ற வடிவமான குண்டமிட்டு அதில் வளர்க்கப்படும் தீ.  காருகபத்தியம் என்னும் தீ ஆகவனீயத்தை அடுத்து, வட்ட வடிவமைந்த குண்டமிட்டு அதில் வளர்க்கப்படும் தீ. இப்பாடலில், தமிழ் மூவேந்தர்களுக்கு முத்தீ உவமம் ஆகக் கூறப்பட்டுள்ளது.

மூவேந்தர்களும் அவரவர் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து, அறம் சார்ந்த செயல்களைச் செய்து தம்முடைய நாட்டு மக்களைப் பாதுகக்க வேண்டும் என்பது இப்பாடலில் ஒளவையார் கூறும் கருத்து. ஆனால், தமிழ் வேந்தர்கள் ஒற்றுமையின்றித் தமக்குள் போர் புரிந்து கொண்டிருந்ததால், களப்பிரரும், வடுகரும், மோரியரும், பல்லவரும், துருக்கரும், தெலுங்கரும், வெள்ளையரும் தமிழ் நாட்டை பலகாலம் ஆட்சி செய்தனர் என்பது வரலாறு கூறும் செய்தி.

Sunday, December 2, 2012

366. மாயமோ அன்றே!


366. மாயமோ அன்றே!


பாடியவர்: கோதமனார். பல்யானை செல்குழு குட்டுவனைப் பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தில் பாடிய புலவரின் பெயரும் கோதமனார் என்பதுதான். ஆனால் இப்பாடலை இயற்றியவர் அவர் அல்லர் என்பது அறிஞர் கருத்து. இப்பாடலைப் பாடிய கோதமனாரைப் பற்றிய செய்திகள் ஒன்றும் தெரியவில்லை.  இவர் கெளதமனார் என்றும் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாடப்பட்டோன்: தருமபுத்திரன். இப்பாடலில், ‘அறவோன் மகனே’ என்ற சொற்றொடர் காணப்படுவதால், மகாபாரதத்தில் காணப்படும் பாண்டவர்களின் தலைவனான தருமன் இப்பாட்டுக்குரிய தலைவன் என்று கூறுவாரும் உளர். ஆனால், அதற்கேற்ற சான்றுகள் இல்லை.  
பாடலின் பின்னணி: ’உலகம் முழுதும் தம் ஆணைக்குக்கீழ் ஆட்சி செய்த பெருவேந்தர்களும் இவ்வுலகில் நிலையாக வாழவில்லை. அவர்கள் தம் புகழை நிறுவித் தாம் இறந்தனர். ஆகவே, உன் வலிமையைப் பாதுகாத்து, பிறர் கூறுவதின் உண்மையை அறிந்து, பகற்பொழுதில் பணியாளர்க்கு உதவி, மறுநாள் செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி இரவில் ஆராய்ந்து உன் செயல்களைச் செய்க. ஆட்டிறைச்சியையும் சோற்றையும் வேண்டுவோர்க்கு அளித்து உண்பாயாக. மகளிர் தரும் மதுவை உண்டு மகிழ்க. அவர்களோடு ஊடியும் கூடியும் இனிதே வாழ்க. ஆற்றங்கரையில் உள்ள சோலைகளில், வெறியாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது பலி கொடுப்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் ஆடுகளைப் போல் நாம் அனைவரும் இறப்பது உண்மை. அது பொய்யன்று’ என்று கோதமனார் இப்பாட்டுடைத் தலைவனுக்கு அறிவுரை கூறுகிறார்.


திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.




விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக
அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப
ஒருதா மாகிய பெருமை யோரும்
தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே                  5


அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்!
நின்னொன்று உரைப்பக் கேண்மதி
நின்ஊற்றம் பிறர்அறியாது
பிறர்கூறிய மொழிதெரியா
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி                10


இரவின் எல்லை வருவது நாடி
உரைத்திசின் பெருமநன்றும்;
உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்
செங்கண் மகளிரொடு சிறுதுனி அளைஇ
அங்கள் தேறல் ஆய்கலத்து உகுப்ப              15


கெடலருந் திருவ உண்மோ. . . . . . .
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப

 மடைவேண்டுநர்க்கு அடைஅருகாது
அவிழ்வேண்டுநர்க்கு  இடைஅருளி
நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக்  20


காவு தோறிழைத்த வெறியயர் களத்தின்

இடங்கெடத் தொகுத்த விடையின்
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.

 

அருஞ்சொற்பொருள்: 1. விழு = சிறந்த; கடிப்பு = குறுந்தடி; முழுமை = பருமை. 2. ஒழுக்கு = ஒழுக்கம்; மருங்கு = இடம்; ஒருமொழி = அரசனின் ஆணை, வஞ்சினம். 3. அரவு = பாம்பு; உருமுதல் = இடிபோல் முழக்கம் செய்தல்; உரறுதல் =இடித்தல்; சிலைப்ப = ஒலிக்க. நிறீஇ = நிறுவி. 8. ஊற்றம் = வலிமை. 10. எல்லை = பொழுது. 13. பகடு = காளை மாடு; அழி = வைக்கோல். 14. துனி = ஊடல்; அளைஇ = கலந்து. 15. உகுத்தல் = சொரிதல். 17. விடை = ஆட்டுக்கடா.18. மடை = உணவு; அடை = இலை; அருகாது = குறையாது. 19. அவிழ் = சோறு; இடை = இடம். 20. வார்மை = ஒழுக்கம்; அடைகரை = கரைப்பக்கம். 21. கா = காடு; இழைத்த = அமைக்கப்பட்ட; அயர்தல் = செய்தல், விளையாடுதல். 22. விடை = ஆட்டுக்கடா. 23. மடங்கல் = சாதல்.

 

கொண்டு கூட்டு: அறவோன் மகனே, செம்மல், பெரும, திருவ, பெருமையோரும் மாய்ந்தனர்; கேண்மதி; உரைத்திசின்; கிழிப்ப, அருகாது, அருளி, உண்மோ, மடங்கல் உண்மை மாயமோ அன்று எனக் கூட்டுக.

 

உரை: சிறந்த குறுந்தடியால் அடிக்கப்பட்டுப் பெரும் ஒலியெழுப்பும் முரசின் முழக்கம், பாம்பை நடுங்கச் செய்யும் இடிமுழக்கம்போல், போர் ஒழுக்கங்களில் (முறைகளில்) சிறந்த வீரரிடத்தே சென்று, தம் ஆணையைக் குறிப்பிடும் பெருமையுடைய வேந்தரும் தங்கள் புகழை நிறுவித் தாம் இறந்தனர்.  அதனால், அறவோன் மகனே! நான் உனக்கு ஒன்று சொல்கிறேன். நீ அதைக் கேட்பாயாக. ’உன்னுடைய வலிமையை பிறர் அறியாமல் இருப்பார்களாக;  பிறர் சொல்லும் சொல்லின் உட்கருத்தை நீ அறிந்து கொள்க; ஞாயிற்றின் ஒளிபொருந்திய பகற்பொழுதில் பணிபுரிவோர்க்கு உதவி செய்வாயாக;  மறுநாள் செய்ய வேண்டிய  பணிகளை இரவுப் பொழுதில் ஆராய்ந்து பணியாளர்களுக்கு உரைப்பாயாக. குறைவில்லாத செல்வத்தை உடையவனே! நாட்பொழுதில் உழவுத் தொழிலைs செய்து முடித்த எருது மாலையில் வைக்கோலைத் தின்பதுபோலச், சிவந்த கண்களையுடைய மகளிரோடு சிறிது ஊடிக் கலந்து, அழகிய கள்ளின் தெளிவை அவர்கள் தேர்ந்தெடுத்து நல்ல பாத்திரங்களில்  தர, நீ அருந்துவாயாக.  ஆட்டுக் கடாவை அறுத்துச் சூட்டுக் கோலில் கோத்துச் சுட்ட இறைச்சியைச் சமைத்து, அதனை வேண்டுவோர்க்கு இலையில் வைத்துக் குறையாது கொடுத்து, சோறு வேண்டுவோர்க்கு  இடமளித்து உண்பித்து, நீயும் உண்பாயாக.  நீர்நிலைகள் மிக்க மணல் பரந்த கரையில் இருக்கும் காடுகளில் அமைக்கப்பட்ட வெறியாடல் களங்களில் இனி இடமில்லை என்னுமாறு  நிறுத்தப்பட்ட ஆடுகளைப் போல், சாதல் உண்டு என்பது உண்மை; அது பொய்யன்று.’

 

சிறப்புக் குறிப்பு: வெறியாடல் களங்களில் நிறுத்தப்பட்ட ஆடுகள் கொலை செய்யப்படுவது உறுதி. அதுபோல் மக்கள் இறப்பதும் உறுதி என்ற கருத்தைப் புலவர் கோதமனார் வலியுறுத்துகிறார்.

365. நிலமகள் அழுத காஞ்சி!


365. நிலமகள் அழுத காஞ்சி!


பாடியவர்: மார்க்கண்டேயனார். இவரை பற்றிய செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. என்றும் பதினாறு வயதினராக இருந்த சிவபக்தர் மார்க்கண்டேயரும் இப்புலவரும் ஒருவரே என்று சிலர் கூறுவர். ஆனால், அதற்கு ஏற்ற சான்றுகள் எதுவும் காணப்படவில்லை. இப்பாடலை இயற்றியவர் மாக்கடையனார் என்றும் கருதப்படுகிறது.

பாடலின் பின்னணி: ’இவ்வுலகில் பெருமையுடன் வாழ்ந்த வேந்தர் பலரும் இறந்தும், நான் மட்டும் இறவாமல் இருக்கின்றேனே என்று நிலமகள் வருந்துவதுபோல்  இப்பாடல் அமைந்துள்ளது.


திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.


மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய இருசுடர் கண்எனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து
பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப்                  5


பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
உள்ளேன் வாழியர் யான்எனப் பன்மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்                                    10


உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே.




அருஞ்சொற்பொருள்: 1. மயங்கல் = கலங்குதல்; இரு = கரிய; கருவி = மேகம்; விசும்பு = ஆகாயம்; முகன் = முகம். 3. வளி = காற்று; நீத்தம் = பரப்பு, மிகுதி. 4. குறடு = அச்சுக்கோக்கும் இடம்; வயங்குதல் = விளங்குதல்; ஆரம் = ஆரக்கால். 5. திகிரி = ஆழிப்படை; சமத்து = ஆற்றல். 6. முன்பு = வலிமை. 8. விலைநலப் பெண்டிர் = விலை மகளிர்; மீக்கூறல் = புகழ்தல், வியத்தல். 10. காஞ்சி = நிலையாமை.

 

கொண்டு கூட்டு: விசும்பு முகனாக, சுடர் கண்ணாகக் கொண்ட  நிலமகள் முன்னோர் செல்லவும் செல்லாது, விலைநலப் பெண்டிரின் பலர் மீக்கூற யான் உள்ளேன் வாழியர் என அழுத காஞ்சியும் உண்டென உணர்ந்திசினோர் உரைப்பர் எனக் கூட்டுக.

உரை: ’இடம் விட்டு இடம் பெயரும் இயல்புடைய காற்றும் செல்லாத இடமாகிய, எவ்வுயிரும் செல்லுதற்கரிய ஆகாயத்தைக் கடந்து, வயிரம் வைத்து இழைத்த சக்கரத்தின் குடத்தில் விளங்கும் மணிகள் பொருந்திய ஆரக்கால்களையுடைய பொன்னாலான ஆழிப்படையை போரின் முன்னே ஆற்றலுடன் செலுத்திப் பகைவரை அழித்து, மேலே பகைவர் வாராததால், போரில் மிகுந்த வலிமையையுடைய முன்னோர்களாகிய வேந்தர்கள் விண்ணுலகுக்குச் செல்லக் கண்டும், உடன் செல்லாது, தன் நலத்தைப் பிறர்க்கு விற்கும் விலைமகளிரைப் போல, பலர் என் நலத்தைப் பாராட்டிப் புகழ, நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே’ என்று கரிய மேகங்கள் கலந்த ஆகாயத்தை முகமாகவும், ஞாயிறும் திங்களும் இரு கண்களாகவும் கொண்டு, பலவகையிலும் மாட்சிமை அடைந்த நிலமகள் தன் நிலைமையை நினைத்து வருந்திக் காஞ்சிப் பண் பாடி அழுததாக அறிவுடையோர் கூறுவர்.

 

சிறப்புக் குறிப்பு: விலைமகளிர் செல்வந்தருடன் சேர்வதைப்போல் நிலமகள் வலிமை மிக்க வேந்தர்களுக்கு உரியவளாக இருப்பதால் நிலமகள் விலைமகளிருக்கு ஒப்பிடப்பட்டாள்.

 
விழுப்புண் உற்றவர்களின் துயரத்தைப் போக்குவதற்குக் காஞ்சிப்பண் பயன்படுத்தப்பட்டதாக புறநானூற்றுப் பாடல் 296 –இல் கூறப்பட்டிருப்பதைக் காண்க.

364. மகிழகம் வம்மோ!


364. மகிழகம் வம்மோ!


பாடியவர்: கூகைக்கோழியார்.  பேராந்தையைக் கூகைக்கோழி என்று இவர் இப்பாடலில் குறிப்பிட்டதால் இவர் கூகைக்கோழியார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

பாடலின் பின்னணி: ’பாடினிகளுக்கும், பாணர்களுக்கும் பொன்னும் பொருளும் அளிப்பதும், இரவலர்க்கு உனவு அளிப்பதும், மகிழ்ச்சியோடு இருப்பதும் உயிரோடு இருக்கும் பொழுதுதான் செய்யக்கூடிய செயல்கள். அத்தகைய செயல்களைச் செய்து மகிழ்ச்சியாக இருப்பாயாக. இறந்தபின் இதுபோன்ற செயல்களைச் செய்ய இயலாது.‘ என்று  புலவர் கூகைக்கோழியார் இப்பாடலில் அறிவுரை கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.

துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.


வாடா மாலை பாடினி அணியப்
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க
மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்
காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை              5


நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும்
மகிழ்கம் வம்மோ மறப்போ ரோயே!
அரிய வாகலும் உரிய பெரும!
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர்              10


முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே.


அருஞ்சொற்பொருள்: 2. சென்னி = தலை; கேணி = நீர்நிலை (சிறுகுளம்). 3. எரிமருள் = தீப் போன்ற; தயங்கல் = ஒளிசெய்தல். 4. மை = கருமை; விடை = ஆட்டுக்கடா; இரு = பெரிய; போத்து = விலங்குகளின் ஆண். 5. காயம் = உறைப்பு; கனித்தல் = இளகச் செய்தல்; குறை = தசை. 6. நறவு = கள்; திறம் = பக்கம். 10. பக = பிளக்க; வீழ்தல் = விழுதல்; அலங்கல் = அசைதல். 11. பொத்து = பொந்து; கதும் = விரைவுக் குறிப்பு; 12. ஆனா = நீங்காத. 13. ஞான்று = பொழுது.

 

கொண்டு கூட்டு:  மறப்போராய், பெரும மகிழ்கம் வம்மோ; பெருங் காடெய்திய ஞான்று, அரிய ஆகலும் உரிய எனக் கூட்டுக.

 

உரை: பாடினிக்கு  பொன்னாலான மாலை அணிவிப்போம்; நீர்நிலையில் பூவாத பொற்றாமரையைப் பாணன் தலையில் சூட்டுவோம்; கரிய, பெரிய ஆட்டுக் கடாவின் ஊனைத் தீயிலிட்டுக் காரம் சேர்த்துச் சமைத்த பெரிய தசையை, மது உண்ணும் சிவந்த வாயிலிட்டு நாவால் அசைத்து உண்டும் தின்றும், இரப்போர்க்குக் கொடுத்தும் மகிழ்வோம். வீரத்தோடு போர் புரிபவனே! வருக! நிலைத்தைப் பிளந்து ஊடுருவிச் செல்லும் வேர்களையுடைய முதிய மரத்தின் பொந்துகளிலிருந்து ஓயாது கூவும் பேராந்தைகள் நீங்காத, தாழிகளையுடைய சுடுகாட்டை அடையும்பொழுது இவையெல்லாம் செய்தற்கரிய செயல்களாகும்.

363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!


பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார்(363). ஐயாதி என்பது இவருடைய ஊராக இருந்திருக்கலாம். முந்தைய பாடல் இயற்றிய புலவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக, இவர் ஐயாதிச் சிறுவெண்டேரையார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.  இவர் இயற்றியதாக புறநானூற்றில் உள்ள ஒருபாடல் (363) மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

பாடப்பட்டோன்: தெரியவில்லை.

பாடலின் பின்னணி: ’உலகைத் தமதாக்கிக்கொண்டு ஆட்சி செய்த வேந்தர்களும் முடிவில் இறந்தார்கள்.  அவர்களுடைய நாட்டைப் பிறர் பெற்றுக்கொண்டனர். சாதல் என்பது உண்மை; அது பொய்யன்று.  ஆகவே, இறப்பதற்குமுன் நீ செய்ய விரும்பியதைச் செய்க.’ என்று புலவர் ஐயாதிச் சிறுவெண்டேரையார் ஒரு மன்னனுக்கு அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.

துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.


இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்                   5


நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை; வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு  10


வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும் 15


இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.

 

அருஞ்சொற்பொருள்: 1. இரு = கரிய; உடுத்த = சூழ்ந்த. 2. உடை = ஒருவகை மரம்; இடை = இடம். 3. ஏமம் = பாதுகாப்பு. 5. பதி = இடம். 7. அத்தை – அசைச் சொல்; வீதல் = கெடுதல், சாதல். 9. மடங்கல் = முடிவு (சாவு); மாயம் = பொய் 10. ஏய்ந்த = பொருந்திய; புறங்காடு = சுடுகாடு, இடுகாடு. 11. வெள்ளில் =வெளியிடம்; வியல் = அகலம். 15. விலங்கு பலி = வேண்டாத உணவு; மிசைதல் = உண்ணுதல். 16. வைகல் = நாள். 17. முன்னுதல் = கருதுதல்.

 

கொண்டு கூட்டு: காவலர் பலர் மாய்ந்தனர்; அதனால் கேண்மதி; உயிரும் இல்லை; உண்மை, மாயமன்று; வாராமுன்னே துறந்து நீ முன்னிய வினையைச் செய்க எனக் கூட்டுக.

 

உரை: கரிய கடல் சூழ்ந்த பெரிய இடத்தையுடைய உலகின் நடுவே, உடைமரத்தின் இலை அளவுகூட இடத்தையும் பிறர்க்கு இல்லாமல் தாமே ஆண்டு பாதுகாத்தவர்களின் எண்ணிக்கை, கடலின் அலைகள் கொழித்தொதுக்கும் மணலின் எண்ணிக்கையைவிட  அதிகம். அத்தகைய அரசர்கள் அனைவரும் தம் நாட்டைப் பிறர் கொள்ள, சுடுகாட்டைத் தங்கள் இடமாகக் கொண்டு இறந்தனர். அதனால், நான் சொல்வதை நீ கேட்பாயாக. அழியாத உடம்போடு என்றும் உயிரோடு இருந்தவர் யாரும் இல்லை. சாதல் என்பது உண்மை; அது பொய்யன்று.  கள்ளி பரவிய முட்செடிகள் உள்ள சுடுகாட்டின் அகன்ற வெளியிடத்தில், உப்பில்லாமல் வேகவைத்த சோற்றை, பிணம் சுடும் புலையன் பிணத்தைத் திரும்பிப் பார்க்காமல், நிலத்தில் வைத்துப் படைத்த வேண்டாத உணவைப் பெற்றுக் கொண்டு, உண்ணும் கொடிய நாள் (இறக்கும் நாள்) வருவதற்கு முன்பே, கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைத் துறந்து நீ கருதியதைச் செய்க.

 
சிறப்புக் குறிப்பு: உடைமரத்தின் இலை மிகவும் சிறியதாகையால் அது கடல் சூழ்ந்த பெரிய உலகத்திற்கு எதிர்மறையாகக் கூறப்பட்டது. ’சுடுகாட்டில் ஈமத்தில் இடுமுன், புலையன் உப்பில்லாச் சோறட்டு  நிலத்தில் வைத்துப் படைத்தலும்  அதனை அவன் கையிலேந்திப் படைக்குங்கால் பின்புறம் பாராமல் படைக்கும் முறைமையும் ஈமத்திற் பண்டையோர் செய்த சடங்குகள்.’ என்று ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.


362. உடம்பொடுஞ் சென்மார்!


பாடியவர்: சிறுவெண்டேரையார். இவரைப் பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

பாடலின் பின்னணி: இப்பாட்டுடைத் தலைவன் அந்தணர்களுக்கும், இரவலர்களுக்கும் வரையாது கொடுத்துப் பெரும்புகழ் பெற்றவன். அவன் சுற்றத்தாருடன் கூடித் தன் இல்லத்தில் வாழ்ந்தாலும், அவன் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. இவ்வாறு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலும், அவன் நிலையாமையை உணர்ந்தவன். அதனால், இவ்வுலக வாழ்க்கையைவிட மேலுலக வாழ்வில் அவன் பற்றுடையவனாக உள்ளான்.  இவ்வுலகில் செய்யும் ஈகை மேலுலகில் பயனளிக்கும் என்பதை அவன் உணர்ந்தவன். இவ்வுலகில்  ஈகை செய்வதற்குத் தேவையான பொருளைப் பெறுவதற்காக அவன் போர் செய்கிறான். போர் முழக்கம் ஊரெங்கும் கேட்கிறது. அதைக் கேட்ட அந்தணர்கள் வியப்படைகிறார்கள். அந்தணர்களுடைய வியப்பைக் கண்ட புலவர் சிறுவெண்டேரையார், ’தலைவன் போரில் பெறும் பொருளைப் பிறர்க்கு அளித்துப் புகழுடம்புடன் மேலுலகிற்குச் செல்வதற்காகப் போர் புரிகிறான். இந்தப் போரைப் பற்றிய குறிப்புக்கள்  உங்கள் வேதத்திலும் அறநூல்களிலும் இல்லை’ என்று இப்பாடலில் கூறுகிறார்.


திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.

துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.


ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த
மதியுறழ் ஆரம் மார்பில் புரளப்
பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி           5


அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை
கூற்றத் தன்ன மாற்றரு முன்பின்
தாக்குரல் கேண்மின் அந்த ணாளிர்
நான்மறை குறித்தன்று அருள்ஆ காமையின்;
அறம்குறித் தன்று பொருளா குதலின்;                    10


மருள்தீர்ந்து மயக்குஒரீஇக்
கைபெய்தநீர் கடற்பரப்ப
ஆம்இருந்த அடைநல்கிச்
சோறு கொடுத்து மிகப்பெரிதும்
வீறுசால் நன்கலம் வீசிநன்றும்                               15


சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்
வாய்வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல்என்று இல்வயின் பெயர  மெல்ல                    20

இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே.

 

அருஞ்சொற்பொருள்: 1. ஆய் = நுணுகியறிதல்; மிடைதல் = நிறைதல், கலத்தல். 2. உறழ்தல் = ஒத்தல்; ஆரம் = மாலை. 3. சிலைப்ப = ஒலிக்க. 4. பொழில் = சோலை, நாடு. 5. செரு = போர்; புகலுதல் = விரும்புதல்; விசயம் = வெற்றி. 6. அணங்கு = வருத்தும் பெண் தெய்வம்; உருத்தல் = கடுஞ்சினம் கொள்ளுதல்; கணம் = கூட்டம். 7. முன்பு = வலிமை. 8. தாக்குரல் = தாக்கும் குரல். 11. மயக்கொரீஇ = மயக்கு+ஒரீஇ = மயக்கத்தினின்று நீக்கி. 13. ஆம் = நீர்; அடை = வயல்; ஆம் இருந்த அடை = மருத நிலம்; நல்குதல் = ஈதல். 15. வீறு = பெருமை; சால் = நிறைவு; வீசுதல் = வரையாது கொடுத்தல்.16. களர் = களர் நிலம். 17. கூகை = கோட்டான். 18. அகலுள் = அகலம். 19. கல் – ஒலிக் குறிப்பு. 20. வயின் = இடம். 21. ஒதுங்கல் = விலகுதல்.

 

கொண்டு கூட்டு: அந்தணாளிர், தானை தாக்குரல் கேண்மின்; நான்மறைக் குறித்தன்று; தீர்ந்து, ஒரீஇ, நல்கி, கொடுத்து, வீசி, அஞ்சி, உயர்ந்தோர் நாட்டு உடம்பொடும் சென்மார் என்பதோடு, பொருகின்றனர் என சேர்த்துக் கூட்டுக.

 

உரை: கதிரவனைப்போல் ஒளியுடன் திகழும் ஆராய்ந்தெடுத்த மணிகள் பதித்த, பிறைமதி போன்ற வளைந்த மாலை எம் தலைவனின் மார்பில் தவழ்கிறது.  பலியூட்டப்பட்ட முரசு பாசறையில் ஒலிக்கின்றது, நாடு முழுதும் பரந்து நின்று, பெரிய வீரச் செயல்களைச் செய்யும் ஆடவர், போரை விரும்பி, வெற்றியையுடைய வெண்மையான கொடியை ஏந்தி வருவது, வருத்தும் தெய்வம் வருவதைப் போல் காட்சி அளிக்கிறது. அவ்வீரர்களின் கூட்டத்திலிருந்து, கூற்றுவனைப்போல் எவராலும் எதிர்த்தற்கு அரிய வலிமையுடன், பகைவரைத் தாக்குதற்கு அவர்கள் எழுப்பும்  ஒலியைக் கேட்பீராக. அந்தணர்களே! இப்போர் அருளின் அடிப்படையில் செய்யப்படாததால், நான்கு வேதங்களில் இதைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.  இது பொருள்பற்றிய செயலாகையால், இது அறநூல்களிலும் கூறப்படவில்லை. நிலையாமையைப் பற்றிய தெளிவின்மை நீங்கி, தெளிவு பிறந்த பிறகு, நீர்வளம் அமைந்த ஊர்களை எம் தலைவன் அந்தணர்களுக்குக் கொடையளிக்கும் பொழுது அவர்கள் கையில் வார்த்த நீர், கடல்வரை ஓடியது. அவன்  இரவலர்களுக்குச் சோறு வழங்கினான்; பரிசிலர்களுக்குப் பெருமைக்குரிய நல்ல அணிகலன்களைப் பெருமளவில் கொடுத்தான்.  சிறிய வெண்ணிற எலும்புகள் கிடக்கும் நெடிய வெண்மையான களர் நிலத்தில் வலிய வாயையுடைய காக்கையும் கூகையும் கூடிப் பகற்பொழுதில் கூவும் அகன்ற இடத்தில் உள்ள சுடுகாடுதான்  அனைவரும் முடிவில் அடையும் இடம். இந்த உண்மை  புலப்படாதவாறு, தன் இல்லத்தில் சுற்றத்தார் நிறைதலால்,  இனி அங்குத் தனக்கு இடமில்லை என்று அங்கிருந்து மெல்ல நீங்கக் கருதியும், உலகம் சிறிதாதலால் இங்கு இனி இயங்குவதற்கு அஞ்சியும், விண்ணுலகுக்குத் தன் புகழுடம்புடன் செல்வதற்காக அவன் போரிடுகின்றான்.