Wednesday, August 15, 2012


332. மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே !

பாடியவர்: விரியூர் நக்கனார்(332). விரியூர் என்பது சேர நாட்டில் இருந்த ஓரூர். தற்போது, இவ்வூர் கேரள மாநிலத்தில் உள்ளது. சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக புறநானூற்றில் உள்ள ஒருபாடல் மட்டுமே உள்ளது.
பாடலின் பின்னணி: இப்பாடலில், வீரன் ஒருவனின் வேலை, புலவர் விரியூர் நக்கனார் வியந்து பாடுகிறார்.
திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.

பிறர்வேல் போலாது ஆகி இவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே;
இரும்புற நீறும் ஆடிக் கலந்துஇடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
மங்கல மகளிரொடு மாலை சூட்டி                                             5

இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்
தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து
மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு
இருங்கடல் தானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.                           10

அருஞ்சொற்பொருள்: 3. இரு = பெரிய; புறம் = பக்கம்; இரும்புறம்  - வேலின் இலைப் பகுதியைக் குறிக்கிறது; நீறு = புழுதி. 4. குரம்பை = குடிசை. 6. இரும்பை = இரும் + பை = பெரிய பை; ததும்புதல் = நிரம்பி வழிதல். 7. படு = குளம். 8. மண் = பூமி (உலகம்); அழுங்கல் = மிக வருந்துதல். 10. ஆனாமை = குறையாமை.

கொண்டு கூட்டு: வேல் பெருந்தகையுடைத்து; கிடக்கும், செல்லும், செலவு ஆனாதாகலின் எனக் கூட்டுக .
உரை: பிறருடைய வேலைப்போல் அல்லாமல், இந்த ஊரைச் சார்ந்த வீரனின் (தலைவனின்) வேல் மிகுந்த பெருமை உடையதாகும்.  அந்த வேலின் பெரிய இலைப்பகுதியில் புழுதிபடிந்து குடிசையின் கூரையில் இருந்தாலும் இருக்கும்.  அந்த வேல், மாலை சூட்டப்பட்டு, மங்கல மகளிரின் இனிய குரலோடு, பெரிய பையில் அமைந்த யாழின் இசையும் கலந்து இசைக்க, தெளிந்த நீருள்ள குளங்களையும் தெருக்களையும் ஊர்வலமாக வந்து, உலகம் முழுதும் உள்ள பகைவர்களின் நாடுகளில் உள்ளவர்கள் அனைவரையும் வருந்தச் செய்யும். அவ்வேல், பெரியகடல் போன்ற படையையுடைய வேந்தரின் யானைகளின் முகத்திலும் தவறாமல் செல்லும்.

சிறப்புக் குறிப்பு: வேலின் பெருமையைக் கூறியதால் வீரனின் பெருமையும் கூறப்பட்டது.

No comments: