Thursday, August 16, 2012


337. இவர் மறனும் இற்று!

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 8-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், கபிலர் சோழநாட்டில் உள்ள ஓரூருக்குச் சென்றார். அவ்வூர்த் தலைவனின் மகள் அழகிலும் அறிவிலும் சிறந்தவளாகவும் திருமணம் செய்விப்பதற்கேற்ற வயதுடைவளாகவும் இருந்தாள்.  அவள் தந்தையோ மிகுந்த ஆரவாரமானவன். தமையனார்களோ வீரம் மிகுந்தவர்கள். அவளை மணம் செய்துகொள்வதற்காக வேந்தர் பலரும்  வந்த வண்ணம் இருந்தனர். கபிலர், ’இவளை மணம் செய்துகொள்ளும் பேறுடையவர் யாரோ’ என்று வியக்கிறார். அவர் வியப்பு இப்பாடலாக வெளிப்பட்டுள்ளது.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்;
மண்ணாள் செல்வர் ஆயினும் எண்ணார்
கவிகை வாள்வலத்து ஒழியப் பாணரிற்
பாடிச் சென்றார் வரல்தோறு அகமலர்பு
ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப்                                    5

பாரி பறம்பின் பனிச்சுனை போலக்
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய                      10

கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச்செறிந் தனளே வாணுதல்; இனியே,
அற்றன் றாகலில் தெற்றெனப் போற்றிக்
காய்நெல் கவளம் தீற்றிக் காவுதொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி                                15

வருதல்  ஆனார் வேந்தர்; தன்ஐயர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்
மற்றிவர் மறனும் இற்றால்; தெற்றென
யாரா குவர்கொல் தாமே , நேரிழை                                20

உருத்த பல்சுணங்கு அணிந்த
மருப்பின் வனமுலை ஞெமுக்கு வோரே?

அருஞ்சொற்பொருள்: 1. ஆர்கலி = ஆரவாரம்; சோணாடு = சோழநாடு; அண்ணல் = தலைவன்; மண்ணிய = நனைத்த. 3. கவிகை = கவிந்த கை; வலம் = வலிமை. 5. இலங்குதல் = விளங்குதல். 6. சுனை = நீர்நிலை. 8. பொலிவு = அழகு; மண்ணிய = நனைத்த. 9. கடுப்ப = ஒப்ப; நுடங்குதல் = துவளுதல். 10. ஐது = அழகு. 11. கபில நிறம் = கருமை கலந்த பொன்மை; நெடுமை = பெருமை; நெடுநகர் = அரண்மனை. 12. செறிதல் = அடங்குதல். 13. தெற்றென = தெளிவாக. 14. தீற்றுதல் = தின்னப் பண்னுதல் (ஊட்டுதல்); காவு = கா = சோலை. 16. ஐயர் = பெரியோர்; தனையர் = தமையனார். 17. உரு = வடிவு. 18. வெரு = அச்சம். 19. இற்று = இத்தன்மைத்து; ஆல் = அசைச் சொல்; தெற்று = தெளிவு. 20. நேரிழை = தகுதியான அணிகலன்களை அணிந்தவள். 21. உருத்தல் = தோன்றுதல்; சுணங்கு = தேமல். ஞெமுக்குதல் = அமுக்குதல், அழுந்தத் தழுவுதல். 22. வனம் = அழகு.

கொண்டு கூட்டு: அண்ணல் ஆர்கலியினன்; வாணுதல் சுனைபோலக் காண்டற்கரியளாகிய மனைச் செறிந்தனள்; இனி அற்றன்றாகலின், வேந்தர் வருதலானார்; தண்னையர் வெருவரு தலையர்; மறனும் இற்று; ஞெமுக்குவோர் யாராகுவர்கொல் எனக் கூட்டுக.

உரை: சோழநாட்டுத் தலைவன் மிகுந்த ஆரவாரமுடையவன். உலகத்தை ஆளும் அரசர்களும், தங்கள் பெருமையை எண்ணிப் பார்க்காமல், பிறருக்குப் பரிசளிப்பதற்காகக் கவிந்த தங்கள் கைகளில், வெற்றியைத் தரும் வாளை ஏந்தாமல், பாணர்களைப் போலப் பாடிப் பாரியிடம் பரிசுபெறச் சென்றனர். அவர்கள் வந்தபொழுது மனம் மலர்ந்து, குறையாது கொடுத்த, விளங்கும் தொடியணிந்த கையையுடையவன் பாரி. அவன் நாட்டிலிலுள்ள பறம்பு மலையிலுள்ள குளிர்ந்த நீர்நிலை, யாரும் காண்பதற்கு அரியது. அதுபோல் யாராலும் காண்பதற்கரியவளாய், பெண்மை நிறைந்த அழகுடன் அத்தலைவனின் மகள் விளங்கினாள்.  நீரில் நனைத்துக் காயவிடப்பட்ட மெல்லிய துணி காற்றில் அசைவதுபோல் அசைந்து, குளுமையான அகில் தந்த நறும்புகை மெதுவாகச் சென்று படிந்த கபில நிறமுடைய பெரிய அரண்மனையில் சோழநாட்டுத் தலைவனின் பெண் அடைத்துவைக்கப்பட்டிருந்தாள்.  ஒளிபொருந்திய நெற்றியையுடைய அவளை அடைய முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்த அரசர்கள், சினங் கொண்ட கண்களையுடைய தங்கள் யானைகளைச் சோலையில் கட்டிப்போட்டு, விளைந்த நெல்லின் அரிசியில் உண்டாகிய கவளத்தை உண்பித்துத் அந்த யானைகளைப் பாதுகாத்து வந்தனரே தவிரப் போரிடத் துணியவில்லை. அப்பெண்ணின் தமையன்மார், பகைவர்களை வெற்றிகொண்ட நெடிய வேலையும், குருதி தோய்ந்த, அச்சம் தரும் தலையையும் உடையவர்களாக இருந்தனர். அவர்களின் வீரம் அத்தன்மையது.  சிறந்த அணிகலன்களை அணிந்த, தேமல் படர்ந்த, அப்பெண்ணின் கொம்பு போன்ற அழகிய இளமுலைகளை இறுகத் தழுவுவோர் யாரோ? தெளிவாகத் தெரியவில்லை.

No comments: