Thursday, August 16, 2012


339. வளரவேண்டும் அவளே!

பாடியவர்: பெயர் தெரியவில்லை.
பாடலின் பின்னணி: முல்லையும் நெய்தலும் கூடிய நிலத்திலுள்ள ஒரு தலைவனின் பெண், தனக்குக் கணவனாக வருபவன் ஒரு அரசனாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை தன் மனத்தில் மறைத்து வைத்திருப்பதாக அவ்வூர்ப் பெண்கள் எண்ணுகின்றனர். அவள் மிகவும் சிறு வயதினள்; அவள் இன்னும் வளர வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தக் காட்சி இப்பாடலில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இப்பாடல் சிதைந்துள்ளதால், இப்பாடலுக்குத் தெளிவான பொருள் விளங்கவில்லை.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிடக் கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;                           5

தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
கடலாடிக் கயம்பாய்ந்து
கழிநெய்தற் பூக்குறூஉந்து;
பைந்தழை துயல்வருஞ் செறுவில் ததைந்த
.. .. .. .. .. . . ..கலத்தின்                                                   10

வளர  வேண்டும் அவளே; என்றும்
ஆரமர் உழப்பதும் அமரியள் ஆகி,
முறஞ்செவி யானை வேந்தர்
மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே.

அருஞ்சொற்பொருள்: 1. வியன் = அகன்ற; புலம் = இடம் . 2. மடல் = பூ; மடலை = பூக்களையுடைய மரம்; கோவலர் = இடையர். 3. வீ = பூ; ததைதல் = நெருங்குதல். 5. வாளை = ஒரு வகை மீன்; உகளுதல் = தாவுதல். 6. தொடலை = மாலை (மேகலை). 7. கயம் = குளம்; குறூஉந்து = பறிக்கும். 9. துயல்வரும் = அசையும்; செறு = வயல்; ததைதல் =நெருங்குதல். 12. அமரிய = விரும்பிய.

கொண்டு கூட்டு: பறிக்குந்து; உகளுந்து; குறூஉந்து; வளரவேண்டும் அவளே; வேந்தர் நெஞ்சம் கொண்டு ஓளித்தோளே எனக் கூட்டுக.

உரை: அகன்ற, புல்வளர்ந்த நிலத்தில் மேய்ந்த பல பசுக்களுடன் கூடிய நெடிய காளைகள், பூக்களுடைய மரங்களின் நிழலில் தங்கி அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. இடையர்கள், பூக்கள் மிகுந்த முல்லைக் கொடிகளிலிருந்த பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றனர். சிறிய கோலால் எறியப்பட்ட குறுமுயல்கள்  நீர்நிலையிலுள்ள வாளைமீன்கள் போலத் தாவுகின்றன. மேகலை அணிந்த இடையையும் வளை அணிந்த தோள்களையுமுடைய பெண்கள் கடலில் நீராடிக், குளங்களில் மூழ்கிக் கடற்கரையில் உள்ள கழியில் நெய்தற் பூக்களைப் பறிக்கின்றனர்.   தன் பொருட்டு வேந்தர்கள் அரிய போர் செய்வதை விரும்பினவள்போல், முறம் போன்ற காதுகளையுடைய யானைகளைக் கொண்ட வேந்தர்களின்வீரம் பொருந்திய நெஞ்சைக் கவர்ந்து பிறர் அறியாதவாறு அவள் அதை மறைத்துக் கொள்கிறாள். அவ்வூர் மக்கள் அவ்விளம்பெண் இன்னும் வளர வேண்டும் என்று விரும்பினர்.

No comments: