Wednesday, August 15, 2012


334. மனையோள் கைதூவாளே; காளையும் கைதூவானே!

பாடியவர்: மதுரைத் தமிழ்க் கூத்தனார் (334). சங்க காலத்தில் வழக்கிலிருந்த கூத்து வகைகளில் தமிழ்க் கூத்து என்பது ஒருவகைக் கூத்து, இப்புலவருடைய இயற்பெயர் தெரியவில்லை. இவர் தமிழ்க் கூத்தில் வல்லவராக இருந்ததாலும், மதுரையைச் சார்ந்தவராக இருந்ததாலும் இவர் மதுரைத் தமிழ்க் கூத்தனார் என்று அழைக்கப்பட்டார். இவர் இயற்றியதாக வேறு பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை.

பாடலின் பின்னணி: வேந்தன் ஒருவனின் ஊரின் இயல்பையும், அவன் பரிசிலர்க்குப் பொற்பட்டம் அணிந்த யானைகளைத் தவறாமல் தருபவன் என்றும், அவன் மனைவி விருந்தோம்பலில் சிறந்து விளங்கினாள் என்றும் புலவர் மதுரைத் தமிழ்க் கூத்தனார் இப்பாடலில் குறிப்பிடுகிறார். இப்பாடலில் சில வரிகள் சிதைந்துள்ளன.

திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.

காமரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்
புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
படப்புஒடுங் கும்மே.. .. .. .. பின்பு .. .. ..
.. .. .. .. .. .. னூரே மனையோள்                                       5

பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
ஊணொலி அரவமொடு கைதூ வாளே;
உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
பொலம் புனையோடை. .. .. .. .. .. .. ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய                                                  10

உரவுவேற் காளையும் கைதூ வானே.


அருஞ்சொற்பொருள்: 1. காமர் = அழகு; பழனம் = நீர்நிலை (பொய்கை); கண்பு = சண்பங் கோரை. 2. தூ = தூய்மை. 3. புன்தலை = இளந்தலை; ஆர்த்தல் = ஆரவாரித்தல்.  4. படப்பு = வைக்கோற் போர். 6. ஆர்தல் = உண்ணுதல். 7. கைதூவாள் = கைவிட மாட்டாள். 8. மருப்பு = கொம்பு; புகர் = புள்ளி. 9. பொலம் = பொன்; ஓடை = நெற்றிப்பட்டம். 11. உரவு = வலிமை.

கொண்டு கூட்டு: முயல் படப்பு ஒடுங்கும்; மனையோள் கைதூவாள்; காளையும் கைதூவான் எனக் கூட்டுக.

உரை: அழகிய நீர்நிலைகளின் கரைகளில் வளர்ந்திருக்கும் சண்பங்கோரை போன்ற தூய்மையான மயிரையும், குட்டையான கால்களையும், நீண்ட காதுகளையுமுடைய சிறிய முயல், இளஞ்சிறுவர்கள் ஊர் மன்றத்தில்  ஆரவாரம் செய்வதால் வைக்கோற் போரில் பதுங்கும்.  .. . வேந்தனது ஊர் அத்தகையது.  அந்த இல்லத்தில், பாணரை உண்ணச் செய்வதும், பரிசிலரை வரவேற்று அவர்களுக்கு ஆதரவு அளிப்பதும் ஆரவாரத்தோடு நடைபெறுகின்றன. அவ்வில்லத்தின் மனைவி அச்செயல்களைச் செய்வதைக் கைவிடமாட்டாள்.  உயர்ந்த கொம்புகளையும், புள்ளிகளையுமுடைய முகத்தையும் கொண்ட யானையின் பொன்னாலான நெற்றிப்பட்டத்தை பரிசாகப் பரிசிலர்களுக்கு அளிப்பதை, வலிய வேலை உடைய தலைவனும் கைவிடமாட்டான்.

No comments: