Thursday, August 16, 2012


340. அணித்தழை நுடங்க!

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 306-இல் காண்க.
பாடலின் பின்னணி: அழகும் இளமையும் மிகுந்து விளங்கிய பெண் ஒருத்தியைக் கண்ட தலைவன் ஒருவன் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தோடு ‘அவள் யார்?’ என்று அருகிலிருந்த ஒருவரைக் கேட்டான். அதற்கு அவர், அந்த இளம் பெண்ணின் தந்தை அவளை, யானையை எதிர்த்துப் போரிட்டு வெல்லும் வலிமையுடைய மன்னனுக்குத்தான்  மணம் செய்விப்பதாக முடிவு செய்துள்ளான் என்று விடை அளித்தார். இந்தக் காட்சியைப் புலவர் அள்ளூர் நன்முல்லையார் இப்பாடலில் சித்திரிக்கிறார்.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்
குரலம் குன்றி கொள்ளும் இளையோள்,
மாமகள் .. .. .. .. .. ..
யார்மகள் கொல்லென வினவுதி கேள்நீ
எடுப்ப எடா அ.. .. .. .. .. .. ..                                                     5

.. .. .. .. .. மைந்தர் தந்தை
இரும்பனை அன்ன பெருங்கை யானை
கரந்தையஞ் செறுவில் பெயர்க்கும்
பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே.

அருஞ்சொற்பொருள்: 1. நுடங்கல் = அசைதல்; மணி = அழகு. 2. குரல் = கொத்து. 3. மா = அழகு, மாமகள் = மா+மகள்= அழகிய மகள். 7. இரு = பெரிய. 8. கரந்தை = ஒரு கொடி; செறு = வயல். 9. வரைதல் = உறுதி செய்தல்.

உரை: ’இடையில் அணிந்த தழை உடை அசையுமாறு ஓடிச் சென்று, அழகிய புள்ளிகளையுடைய குன்றிமணிக் கொத்துக்களைச் சேகரிக்கும், இளமையும் அழகும்  பொருந்திய இவள் யாருடைய மகள்?’ என்று கேட்கிறாயா? நான் கூறுகிறேன். நீ கேட்பாயாக. இவளுக்கும் இவளுடன் பிறந்தோர்க்கும் தந்தையானவன், கரிய பனைபோன்ற பெரிய துதிக்கைகளையுடைய யானைகளைக் கரந்தைக் கொடி நிரம்பிய வயலில் தாக்கிக் கொல்லும் வலிமை மிக்க மன்னருக்கு இவளைத் திருமணம் செய்விப்பது என்று முடிவு செய்துள்ளான்.

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில் பூக்களையும் இலைகளையும் சேர்த்துச் செய்த உடைகளை இளம்பெண்கள் அணிவது மரபு.  ’பெருங்கை யானை  பெயர்க்கும் பெருந்தகை மன்னர்’ என்றது, பெருவேந்தருள்ளும் யானையைக் கொல்லும் பேராண்மை உடையவர் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

No comments: