Monday, May 21, 2012


331. இல்லது படைக்க வல்லன்!

பாடியவர்: உறையூர் முதுகூத்தனார். இவர் பெயர்  உறையூர் முதுகூற்றனார் என்றும் முதுகூத்தனார் என்றும் ஏடுகளில் காணப்படுகிறது. இவர் அகநானூற்றில் இரண்டு (137, 329) குறுந்தொகையில் நான்கு (221, 353, 37, 390) பாடல்களும், நற்றிணையில் இரண்டு (29, 58) பாடல்களும், புறநானூற்றில் ஒரு (331) பாடலும் இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: வறுமையில் இருந்தாலும் செல்வந்தனாக இருந்தாலும் குறையாது வழங்கும் சிற்றூர்த் தலைவன் ஒருவனின் கொடைத் தன்மையைப் இப்பாடலில் புலவர் உறையூர் முதுகூத்தனார் கூறுகிறார்.

திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.


கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்ஏர் வாழ்க்கைச் சீறூர் மதவலி
நனிநல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா இடையன் போலக் குறிப்பின்                              5

இல்லது படைக்கவும் வல்லன்; உள்ளது
தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில
வரிசையின் அளிக்கவும் வல்லன்; உரிதினின்                           10

காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகுபலி வெண்சோறு போலத்
தூவவும் வல்லனவன் தூவுங் காலே.

அருஞ்சொற்பொருள்: 1. கூவல் = கிணறு. 2. மதம் = வலிமை; மதவலி = பெருவலிமை. 3. நல்கூர்தல் = வறுமையுறுதல்,; நனி = மிக; பனி = குளிர். 4. புல்லென் = பொலிவிழந்த; ஞெலிதல் = தீக்கடைதல். 7. தவ = மிக. 9. மகடூ = பெண், மனைவி. 10. வரிசை = தகுதி. 11. கடை = வாயில்; உகுத்தல் = சொரிதல். போகுபலி = அள்ளிக் கொண்டு செல்லும் உணவு. 13. தூவுதல் = வழங்குதல்.

கொண்டு கூட்டு: மதவலி நல்கூர்ந்தானாயினும் படைக்கவும் வல்லன்; சிறிதாயினும் அளிக்கவும் வல்லன்; உரிதெனின் தூவவும் வல்லன் எனக் கூட்டுக.

உரை: இவன் கல்லையுடைத்துக் கட்டிய வலிய உவர்நீர் உள்ள கிணறும், வில்லால் வேட்டையாடி வாழ்க்கை நடத்தும் மக்களும் உள்ள சிற்றூருக்குத் தலைவன்; மிகுந்த வலிமையுடையவன். இவன் மிகவும் வறுமையுற்றால், குளிர் மிகுந்த, இருள் மயங்கும் மாலை நேரத்தில் சிறிய தீக்கடைக் கோலால் கடைந்து தீ உண்டாக்கும் இடையன் போலத், தன் இல்லத்தில் இல்லாததைக் குறிப்பால் அறிந்து அவற்றை உண்டாக்கிக் கொள்ளவும் வல்லவன்.  தன்னிடம் இருப்பது மிகவும் சிறிய அளவினதானால் அதைப் பரிசிலர் பலருக்கும் அளிக்க வேண்டுமே என்று மனம் கலங்காமல், நீண்ட நெடிய பந்தலின் கீழ் விருந்தினர்களை இருத்தி உணவை முறையாக அளித்து உண்பிக்கும் குடும்ப விளக்காகிய மகளிரைப்போல் பரிசிலர்களின் தகுதியை அறிந்து கொடுக்கவும் வல்லவன். செல்வம் மிகுதியாக இருந்தால் நாட்டைக் காக்கும் பெருவேந்தர்களின் வாயிலில் அளிக்கப்படும் உணவுபோல பலரும் கொள்ளுமாறு வாரி வழங்கக் கூடியவன்.

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், வேந்தர்களின் அரண்மனையில் வந்தோர்க்கெல்லாம் வரையாது சோறு வழங்கப்பட்டதாக இப்பாடலிலிருந்து தெரிகிறது.

No comments: