335. கடவுள் இலவே!
பாடியவர்: மாங்குடி கிழார்.
இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 24-இல் காண்க.
பாடலின் பின்னணி:
பூக்களில்
சிறந்தவை குரவம், தளவு, குருந்து, முல்லை ஆகியவைதான் என்றும், உணவுப் பொருட்களில் சிறந்தவை
வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கு மட்டுமே என்றும், குடிகளில் சிறந்த குடிகள் துடியன்,
பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளே என்றும், இறந்த வீரர்களின் நடுகல்லைத்
தவிர, வழிபடுவதற்கேற்ற கடவுள் வேறு எதுவும் இல்லை என்றும் தன் கருத்தை இப்பாடலில் புலவர்
மாங்குடி கிழார் கூறுகிறார். இப்பாடல் தொடக்கப் பகுதியில் சிதைந்துள்ளது.
திணை: வாகை. வாகைப்
பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை.
வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.
அடலருந் துப்பின் .. .. .. ..
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு 5
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக் 10
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
அருஞ்சொற்பொருள்: 1. அடல் = கொல்லுதல், அழித்தல்; துப்பு = வலிமை. 2. குரவு = ஒரு செடி; தளவு = செம்முல்லை; குருந்து = குருக்கத்தி. 5. பொறி = புள்ளி; கிளர்தல் = நிறைதல். 7. துடி = உடுக்கை; குறிஞ்சிப் பறை; துடியன் = துடியடிப்பவன்; கடம்பன் = ஒரு குடி; பறையன் = பறையடிப்பவன். 9. ஒன்னாமை = பொருந்தாமை; தெவ்வர் = பகைவர். 10. மருப்பு = கொம்பு (தந்தம்). 11. பரவுதல் = வழிபடுதல். 12. உகுத்தல் = சொரிதல், தூவல்.
உரை: அழித்தற்கரிய
வலிமையையுடைய … குரவமலர், தளவுமலர், குருந்த மலர், முல்லைமலர் ஆகிய இந்நான்கு மலர்களைத்
தவிர வேறு மலர்களும் இல்லை. கரிய அடியையுடைய வரகு, பெரிய கதிரையுடைய தினை, சிறிய கொடியில்
விளையும் கொள், புள்ளிகள் நிறைந்த அவரை இவை நான்கைத் தவிர வேறு உணவுப்பொருட்களும் இல்லை. துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய இந்நான்கு
குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை. மனம்
பொருந்தாத பகைவரின் முன்னே நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து, ஒளிறும் உயர்ந்த கொம்புகளையுடைய
யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண்பட்டு இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர, நெல்லைத் தூவி வழிபடுவதற்கேற்ற கடவுளும் வேறு இல்லை.
சிறப்புக் குறிப்பு:
புலவர்
மாங்குடி கிழார் என்ன காரணத்தினால் குரவு,
தளவு, குருந்து, முல்லை ஆகிய மலர்களைத் தவிர வேறுமலர்கள் இல்லையென்றும், உணவுப் பொருட்களில்
சிறந்தவை வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கு மட்டுமே என்றும், குடிகளில் சிறந்தவை
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளே என்றும், வழிபடுவதற்கேற்ற கடவுள்
இறந்த வீரர்களின் நடுகல்லைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறுகிறார் என்பது தெரியவில்லை.
ஒருசிற்றூரில் தான் கண்ட காட்சியைத் தன் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுகிறார் என்று
தோன்றுகிறது.
No comments:
Post a Comment