Wednesday, August 15, 2012


333. தங்கினிர் சென்மோ புலவீர்!

பாடியவர்: பெயர் தெரிந்திலது.
பாடலின் பின்னணி: ஒரு புலவர் மற்ற புலவர்களை வேளாண்குடியைச் சார்ந்த ஒருவனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலில் சில வரிகள் சிதைந்துள்ளன.

திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.

நீருள் பட்ட மாரிப் பேருறை
மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண
கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்                                      5

உண்கென உணரா உயவிற்று ஆயினும்
தங்கினிர் சென்மோ புலவீர்! நன்றும்
சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்                             10

குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்
குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ விலள்; தன்னூர்
வேட்டக் குடிதொறுங் கூட்டு .. .. ..
.. .. .. .. உடும்பு செய்                                                       15

பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா
வம்பணி யானை வேந்துதலை வரினும்
உண்பது மன்னும் அதுவே
பரிசில் மன்னும் குருசில்கொண் டதுவே.


அருஞ்சொற்பொருள்: 1. மாரி = மழை; உறை = மழைத்துளி. 2. மொக்குள் = நீர்க் குமிழி; பொகுட்டு = கொட்டை. 3. கரு = கரிய; பிடர் = பிடரி (கழுத்து). 4. புதல் = புதர்; உகளுதல் = தாவுதல், பாய்தல். 5. தொள்ளை = துளை; படர்தல் = செல்லுதல். 6. உயவு = வருத்தம். 7. சென்மோ = செல்க. 8. சென்றதற் கொண்டு =  சென்றதனால். 10. இரவல் மாக்கள் = இரவலர்கள். 11. குறித்துமாறு எதிர்ப்பு = குறியெதிர்ப்பு (அளவு குறித்துப் பெற்று, அவ்வளவு திருப்பித் தருவது). 12. குரல் = கதிர்; உணங்கல் = காய்தல். 13. புறப்படன்றோ இலள் = போகுமாறு விடமாட்டாள். 16. பாணி = கை(ஆகுபெயராக கைச்சரட்டைக் குறிக்கிறது); ஊரா = ஊர்ந்து. 17. வம்பு = கச்சு. 19. குரிசில் = தலைவன், அரசன்; தலைவருதல் = தோன்றுதல். 19. மன், உம் – அசைச் சொற்கள்.

கொண்டு கூட்டு: புலவீர், மன்றத்துத் தங்கினிர் சென்மோ; சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி, தீர்ந்தென, பெறாமையின், புறப்பட்டன்றோவிலள்; வேந்து தலைவரினும் உண்பது அது; பரிசில் குரிசில் கொண்டது எனக் கூட்டுக. 

உரை: நீரில் விழுந்த மழைத்துளியாலுண்டாகிய பெரிய குமிழி போலிருக்கும் கொட்டை போன்ற விழிகள் பொருந்திய கண்களையும், கரிய பிடரியையுமுடைய தலையையும், பெரிய காதுகளையுமுடைய சிறுமுயல் உள்ளூரில் உள்ள சிறிய புதர்களில் துள்ளித் திரியும் வளைகளுடைய மன்றத்திற்குச் சென்றால், அங்குள்ளவர்கள் உண்ணுக என்று விருந்தோம்பல் செய்ய இயலாது வருந்துவார்கள். அவ்வாறு இருப்பினும், புலவர்களே, நீங்கள் அங்கே தங்கிச் செல்க. அவ்வீட்டில் இருந்த வரகு, தினை எல்லாம் பரிசிலர்கள் உண்டதால் தீர்ந்து போயின. அம்மனைக்குரியவள்,  கைம்மாறாக உணவுப்பொருட்களைப் பெற இயலாமையால், கதிரிடத்தே முற்றி உலரி விதைக்காக விடப்பட்டிருக்கும் தினையை விருப்பத்துடன் உரலிலிட்டு இடித்துச் சமைத்து உணவு அளிப்பாளே அல்லாமல், உணவின்றி உங்களை வறிதே போகவிடமாட்டாள்…. உடும்பின் தோலால் செய்யப்பட்ட கைச்சரடு அணிந்து நெடிய தேரைச் செலுத்தும் வீரர்களோடு ஊர்ந்து, கச்சணிந்த யானைகளையுடைய வேந்தர்கள் அவ்வீட்டிற்கு வந்தாலும் அவர்கள் உண்பதும் அவ்வுணவேயாகும்.  அவ்வீட்டுத் தலைவன் தன்னிடம் வரும் பரிசிலர்களுக்கு வழங்கும் பரிசில் அவன் பகைவரை வென்று பெற்ற பொருளேயாகும்.

No comments: