Monday, January 4, 2010

139. சாதல் அஞ்சாய் நீயே!

பாடியவர்: மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 138 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் வள்ளுவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 137-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெறச் செல்கிறார். தனக்குப் பரிசில் வேண்டும் என்று நேரிடையாகக் கூறாமல், பல இன்னல்களைக் கடந்து தன் குடும்பத்தோடு நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெற வந்த ஒரு பாணன் தனக்குப் பரிசில் வேண்டும் என்று கேட்பது போல் இப்பாடலில் தன் விருப்பத்தை மறைமுகமாக மருதன் இளநாகனார் வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.

சுவல்அழுந்தப் பலகாய
சில்லோதிப் பல்இளைஞருமே
அடிவருந்த நெடிதுஏறிய
கொடிமருங்குல் விறலியருமே
5 வாழ்தல் வேண்டிப்
பொய்கூறேன்; மெய்கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர்சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் உன்னிக்
10 கனிபதம் பார்க்கும் காலை யன்றே;
ஈதல் ஆனான் வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே; ஆயிடை
இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒருநாள்
அருஞ்சமம் வருகுவ தாயின்
15 வருந்தலும் உண்டுஎன் பைதலம் கடும்பே.

அருஞ்சொற்பொருள்:
1.சுவல் = தோள்; காயம் = காழ்ப்பு, தழும்பு. 2. ஓதி = கூந்தல். 4. மருங்குல் = இடை. 7. ஓடா = புறமுதுகு காட்டி ஓடாத; பூட்கை = கொள்கை; உரவோர் = வலியோர்; மருகன் = வழித்தோன்றல். 8. சிமை = மலை உச்சி. 9. மாயா = மறையாத (மறவாத); உன்னல் = நினைக்கை. 12. ஆயிடை = அவ்விடத்து. 13. இரு = பெரிய; மிளிர்தல் = பிறழ்தல். 14. சமம் = போர். 15. பைதல் = துன்பம்; கடும்பு = சுற்றம்.

உரை: மூட்டைகளைத் தூக்கியதால் தோள்களில் பல தழும்புகளுடைய நானும், (குறைந்த அளவில் தலை முடியுடைய) இளஞர்களும், நீண்ட மலைவழியில் தங்கள் கால்கள் வருந்துமாறு ஏறி வந்த கொடி போன்ற இடையையுடைய விறலியரும் வாழ வேண்டும். ஆகவே, பொய் கூற மாட்டேன்; நான் கூறுவது மெய்யே.

புறமுதுகு காட்டி ஒடாத கொள்கையையுடைய வலியோரின் வழித்தோன்றலே! உயர்ந்த மலைச் சிகரஙளுடைய நாஞ்சில் நாட்டுக்கு அரசே! பரிசில் பெறும் எண்ணத்தை மறவாமல் நாங்கள் வந்துள்ளோம். உன்னைப் பார்ப்பதற்கேற்ற சரியான சமயத்தை எண்ணிப் பார்க்க இது ஏற்ற காலம் இல்லை. உன் வேந்தன் (சேரன்) உனக்கு வேண்டியதெல்லாம் வழங்குகிறான். அவனுக்காக உயிர் விடுவதற்குக் கூட நீ அஞ்சுவது இல்லை. இந்நிலையில் பெரிய நிலம் இரண்டு படுவது போன்ற போர் வந்தாலும் வரலாம். போர் வந்தால் நீ போருக்குப் போய் விடுவாய். அவ்வாறு, நீ போருக்குச் சென்று விட்டால், என் குடும்பமும் நானும் வறுமையால் வருந்துவோம். ஆகவே, இப்பொழுதே எங்களுக்குப் பரிசளிப்பாயாக.

சிறப்புக் குறிப்பு: நாஞ்சில் என்ற சொல்லுக்குக் கலப்பை என்று பொருள். அச்சொல் நாஞ்சில் நாட்டையும் குறிக்கும். இப்பாடலில், உழா நாஞ்சில் என்பது நாஞ்சில் நாட்டைக் குறிக்கிறது.

5 comments:

Naanjil Peter said...

குறைந்த அளவில் தலை முடியுடையர்களுக்கும் இளஞர்களுக்கும் என்ன தொட்ர்பு?
வேறு ஏதாவது பொருள் இருக்குமா?

முனைவர். பிரபாகரன் said...

அன்புள்ள நாஞ்சில் அவர்களே,

வேறு பொருத்தமான பொருள் ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

அன்புடன்,
பிரபாகரன்

முனைவர் நா.சுலோசனா said...

அன்புடையீர் வணக்கம்.தற்பொழுது நிறைய உங்கள் எழுத்துக்களை வாசிக்கிறேன்.மகிழ்ச்சி

முனைவர் நா.சுலோசனா said...

அன்புடையீர் வணக்கம்.தற்பொழுது நிறைய உங்கள் எழுத்துக்களை வாசிக்கிறேன்.மகிழ்ச்சி

தீசன் said...

இப்பாடல் இளநாகர், பாணன் ஒருவன் தன் பிள்ளைகளுடனும் விறலியுடனும் (தன் மனையாள்) பரிசில் கேட்டு வந்ததாக அமைக்கப்பெற்றது.

ஓதி என்பது வளரும் மயிர் அல்லது குறைந்த மயிர் வேறு சில இலக்கிய இடங்களில் பெண் மயிரை குறிக்கும்.

இதன் மூல அர்த்தம் குறைவான மயிரை கொண்டோர் என்பது தான்.

இளைஞர் என்பது இங்கே பதின்ம வயதினரை குறிக்கிறது.

ஒப்புநோக்கோடு பாணனது பிள்ளைகள் என கொள்ளலாம்