Tuesday, January 19, 2010

142. கொடைமடமும் படைமடமும்!

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம், பேகனின் கொடை வண்மையைப்பற்றி சான்றோரிடையே ஒரு உரையாடல் நிகழ்ந்தது. சிலர், பேகன் மயிலுக்குப் போர்வை அளித்தது குறித்து அவன் கொடைமடம் மிகுந்தவன் என்று கூறினர். அதைக் கேட்ட பரணர், “ பேகன் கொடைமடம் உள்ளாவனாக இருந்தாலும் படைமடம் இல்லாதவன்” என்று பேகனைச் சிறப்பித்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
5 கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.

அருஞ்சொற்பொருள்:
1.அறுதல் = இல்லாமற் போதல், அற்றுப் போதல்; உகுத்தல் = சொரிதல். 3. வரை = அளவு. 4.கடாம் = மத நீர். 5. கொடை மடம் = காரணமின்றி (ஆராயாது)கொடுத்தல். 6. படைமடம் = அறப்போர் நெறியிலிருந்து மாறுபடுதல்; மயங்குதல் = கலத்தல், தாக்கப்படுதல்.

உரை: நீரற்ற குளத்தில் நீர் சொரிந்தும், அகண்ட வயல்வெளிகளில் பொழிந்தும், தேவையான இடத்தில் பெய்யாது களர் நிலத்தும் அளவின்றி நீரை அளிக்கும் மழையினது இயல்பைப் போன்றது பேகனின் கொடைத்தன்மை. அவன் காரணமின்றி, ஆராயாது யாவர்க்கும் பொருள் கொடுத்தலால் கொடைமடம் கொண்டவன் என்று கருதப்படலாம். ஆனால், மதங்கொண்ட யானைகளும் வீரக் கழலணிந்த கால்களும் உடைய பேகன் பிறர் படை வந்து தாக்கிய பொழுதும் அறநெறியினின்று தவற மாட்டான். ஆகவே, அவன் கொடைமடம் கொண்டவனாக இருந்தாலும் படைமடம் கொண்டவன் அல்லன்.

1 comment:

del said...

My name is பேகன். i like to know more about பேகன் .if possible please send it to peagan@live.com