Tuesday, January 19, 2010

143. யார்கொல் அளியள்!

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: பேகன் தன் மனைவியிடமிருந்து பிரிந்து பரத்தை ஒருத்தியோடு வாழ்வதைக் கேள்வியுற்ற கபிலர், இப்பாடலில், பேகன் மனைவியின் துயரத்தையும் அவளுக்குப் பேகன் அருள் செய்ய வேண்டுமென்று ஒரு பாணன் கூறுவது போல் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: பெருந்திணை. பொருந்தாத காமநிலையை பற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.
துறை: குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.

மலைவான் கொள்கஎன உயர்பலி தூஉய்
மாரி ஆன்று மழைமேக்கு உயர்கஎனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய உவகையர் சாரல்
5 புனத்தினை அயிலும் நாட! சினப்போர்க்
கைவள் ஈகைக் கலிமான் பேக,
யார்கொல் அளியள் தானே; நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
10 நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும்நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மிக்
15 குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே.

அருஞ்சொற்பொருள்:
1. வான் = மழை; பலி = அருச்சனைப் பூ. 2. ஆன்று = அடங்கி, நீங்கி; மேக்கு = மேல். 3. பேணுதல் = போற்றுதல். 5. புனம் = வயல், கொல்லை; அயில்தல் = உண்ணுதல். 6. கைவள் = கைவண்மை. 7. அளியள் = இரங்கத் தக்கவள்; நெருநல் = நேற்று. 8. சுரன் = சுரம் = காடு; உழந்து = வருந்தல், புரளல் (நடத்தல்). 9. குணில் = ஒருவகைப் பறை, பறையடிக்குந் தடி. பாய்தல் = தாக்குதல். 10. நளி = அகலம், பெருமை; இரு = பெரிய; சிலம்பு = மலை.இன்னா = துன்பம். 13 = இகுத்தல் = சொரிதல். 15. குழல் = புல்லாங்குழல்; இனைதல் = வருந்துதல்.

கொண்டு கூட்டு: மாக்கள் புனத்தினை அயிலும் நாட, பேக, என் ஒக்கல் பசித்தென வாயிற் தோன்றி வாழ்த்தி நின்று நின்னும் நின் மலையும் பாடக் குழல் இனைந்தது போல் அழுதாள். அவ்வளித்தக்காள் யார் கொல்?

உரை: மலைகளை மேகங்கள் சூழ்ந்து மழை பெய்க எனவும், மழை அதிகமாகப் பெய்தால் மேகங்கள் மேலே செல்லட்டும் என்றும் கடவுளை வாழ்த்தி உயர்ந்த பூக்களைத் தூவி வழிபட்டு, மழை நின்றதால் மகிழ்ச்சி அடைந்து மலைச் சாரலில் விளையும் தினையை உண்ணும் குறவர்கள் வாழும் நாட்டை உடையவனே!

சினத்தோடு செய்யும் போரையும், கைவண்மையால் கொடுக்கும் கொடையையும், செருக்குடைய குதிரைகளையும் உடைய பேகனே! நேற்று காட்டில் நடந்து வருந்திய என் சுற்றத்தினர் பசியுற்றனர். தடியால் அடிக்கப்பட்ட முரசின் ஒலி போல் முழங்கும் அருவியையுடைய பெரிய உயர்ந்த மலைஇடத்து உள்ள சிறிய ஊரின் வாயிற்புறத்து வந்து உன்னையும் உன் மலையையும் வாழ்த்திப் பாடினோம். அப்பொழுது, தான் துன்பத்தோடு வடிக்கும் கண்ணீரை நிறுத்த முடியாமல், தன் மார்பகங்கள் விம்மிக் கண்ணீரால் நனையுமாறு புல்லாங்குழல் வருந்துவது போல் ஒரு பெண்மணி மிகவும் அழுதாள். அவள் இரங்கத் தக்கவள். அவள் யார்?

No comments: