Tuesday, January 19, 2010

141. மறுமை நோக்கின்று!

பாடியவர்: பரணர்(4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 354, 369). சங்க காலப் புலவர்களில் மிகவும் புகழ் பெற்ற புலவர்களில் ஒருவர் பரணர். பரணரால் பாடப்பாடுவது பாராட்டுதற்குரியது என்ற கருத்தில் “பரணன் பாடினனோ” என்று அவ்வையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு - 99). பரணர், புறநானூற்றில் 13 செய்யுட்களும், அகநானூற்றில் 16 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும், பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார். இவரால் பாடப்பட்டோர் உருவப் ப்ஃறேர் இளஞ்சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஆகியோராவர். இவர் பாடல்கள் வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை. இவர் கபிலரின் நண்பர். மருத்தத் திணைக்குரிய பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்.

பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன் (141- 147, 158). சங்க காலத்துக் குறுநிலமன்னர்களில் இவனும் ஒருவன். இவன் ஆவியர் குடியைச் சார்ந்தவன். பேகன் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவன். ஒரு சமயம், இவன் காட்டு வழியே சென்று கொண்டிருந்த பொழுது, வானத்தில் கருமேகங்கள் தோன்றியதால், மயில் ஒன்று தன் தோகையை விரித்து ஆடிற்று. மயில் தோகையை விரித்து ஆடியதைக் கண்ட பேகன், அந்த மயில் குளிரில் நடுங்குவதாக நினைத்துத் தான் அணிந்திருந்த மேலாடையை மயிலுக்குப் போர்வையாக அளித்தான். இச் செயலால் இவன் மிகவும் புகழ் பெற்றான். பேகன் கடையேழு வள்ளல்களில் ( அதிகமான், பாரி, காரி, ஓரி, ஆய், பேகன், நள்ளி)ஒருவன்.

பேகனுக்குக் கண்ணகி என்று கற்பிற் சிறந்த மனைவி ஒருத்தி இருந்தாள். பேகன் ஒரு பரத்தையோடு தொடர்பு கொண்டு தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்தான். கண்ணகி கலக்கமுற்று வருந்துவதைக் கேள்வியுற்ற பல புலவர்கள், மனைவியோடு வாழுமாறு பேகனுக்கு அறிவுரை கூறினார்கள். அவர்களின் அறிவுரையை ஏற்றுத் தன் தவற்றை உணர்ந்து, மனம் திருந்தி பேகன் தன் மனைவியோடு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

கபிலர், பரணர், பெருங்குன்றூர்க் கிழார், வன்பரணர், அரிசில் கிழார் ஆகியோர் பேகனைப் புகழ்ந்து பாடி உள்ளனர்.

பாடலின் பின்னணி: பேகன் மயிலுக்குப் போர்வை அளித்ததைக் கேள்வியுற்ற பரணர் அவனைக் காணச் சென்றார். பரணரின் தகுதிக்கேற்ப அவருக்குப் பரிசளித்து அவரைப் பேகன் சிறப்பித்தான். அவர் பரிசுகளைப் பெற்றுச் செல்லும் வழியில், வறுமையில் வாடிய பாணன் ஒருவனைச் சந்தித்தார். அப்பாணன், “நீவிர் யார்” என்று பரணரைக் கேட்டான். தான் மிகவும் வறுமையில் இருந்ததாகவும் பேகனைப் பாடி பரிசில் பெற்றதாகவும் பேகன் இம்மையில் ஈகை செய்தால் மறுமையில் நலம் பெறலாம் என்று எண்ணாமல் இரப்போர்க்கு ஈதல் செய்பவன் என்று கூறிப் பாணனைப் பேகனிடம் பரணர் ஆற்றுப்படுத்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பாணாற்று படை. பரிசு பெற்ற பாணன், பரிசு பெற வரும் பாணனுக்குச் செல்லும் வழியும் புரவலன் புகழும் கூறி ஆற்றுப்படுத்துதல்.
புலவராற்றுப் படை என்றும் கூறுவர். பரிசு பெற்ற புலவர் பரிசு பற வரும் புலவர்க்குப் புரவலன் ஊரையும் பேரையும் சிறப்பையும் எடுத்துரைத்து ஆற்றுப்படுத்துதல்.


பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்
5 யாரீ ரோஎன வினவல் ஆனாக்
காரென் ஒக்கல் கடும் பசி இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
10 உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன
மறுமை நோக்கின்றோ அன்றே
15 பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே.

அருஞ்சொற்பொருள்:
2.மாண் = மாட்சிமை, அழகு, பெருமை. 3.கடு = விரைவு; பரி = குதிரை; அசைவு = இளைப்பு. 4. சுரம் = வழி. 6. கார் = கருமை; ஒக்கல் = சுற்றம். 7. ஊங்கு = முன்பு. 8. புல்லியேம் = வறியேம். 9. இன்னேம் = இத்தகையேம்.10. உடாஅ = உடுத்தாதது; போரா = போர்த்தாதது. 11. படாஅம் = படாம் = துணி (போர்வை); மஞ்ஞை = மயில். 12. கடாம் = மத நீர்; கலிமான் = செருக்குடைய குதிரை.

கொண்டு கூட்டு: எம் கோ, பேகன்; அவன் கைவண்மை மறுமை நோக்கிற்று அன்று; பிறர் வறுமை நோக்கிற்று.

உரை: வாடிய தோற்றத்தோடு காணப்படும் சுற்றத்தாரோடும் கடும் பசியோடும் உள்ள இரவலனே! (பாணனே!) “ உங்களைப் பார்த்தால் பாணன் போல் இருக்கிறதே! நீங்கள் உயர்ந்த பொன்னாலான தாமரை மலரை அணிந்திருக்கிறீர்கள்; உங்கள் விறலியர் சிறப்பாகச் செய்யப்பட்ட மாலையோடு விளங்குகிறார்கள். விரைவாகச் செல்லும் குதிரைகளை உங்கள் தேரிலிருந்து அவிழ்த்துவிட்விட்டு, நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருப்பதைப் போல் இந்த வழியில் இளைப்பாறுகிறீர்களே! நீங்கள் யார்?” என்று கேட்கிறாயோ?

வெற்றியைத் தரும் வேல்களையுடைய தலைவன் பேகனைக் காண்பதற்கு முன் நாங்களும் உன்னைவிட வறியர்களாகத்தான் இருந்தோம். இப்பொழுது, அவ்வறுமை நீங்கி இந்த நிலையில் உள்ளோம்.

எப்பொழுதும் உடுத்தவோ அல்லது போர்த்தவோ பயன்படுத்தாது என்று தெரிந்தும் தன் போர்வையை மயிலுக்கு அளித்த எங்கள் அரசன் பேகன் மதமிக்க யானைகளும் செருக்குடைய குதிரைகளும் உடையவன். மறுமையில் வரக்கூடிய நன்மைகளை எதிர்பார்க்காமல் எவ்வளவு ஆயினும் பிறர்க்கு அளிப்பது நன்று என்று எண்ணுபவன். அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது.