பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.
பாடலின் பின்னணி: பேகன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து, பரத்தை ஒருத்தியோடு வாழ்வதைக் கேள்வியுற்ற பரணர், இப்பாடலில் பேகனுக்கு அறிவுரை கூறுகிறார். பாணன் ஒருவன் பாட்டிசைக்கக் கேட்ட கண்ணகி கண் கலங்குகிறாள். அதைக் கண்ட பாணன், “ அம்மையே, தாங்கள் என் தலைவன் பேகனுக்கு உறவினரோ?” என்று கேட்கிறான். அதற்குக் கண்ணகி, தான் பேகனுக்கு உறவினள் அல்லள் என்றும் தன்னைப் போல் ஒருத்தியின் அழகை விரும்பிப் பேகன் தினமும் அவள் இருக்கும் ஊராகிய நல்லூருக்குத் வருவதாகப் பலரும் கூறுகிறார்கள் என்றாள். பாணன் கண்ணகியோடு நடத்திய உரையாடலைப் பேகனுக்கு எடுத்துரைத்து அவளுக்கு பேகன் அருள் செய்யாதிருப்பது மிகவும் கொடிய செயல் என்று பரணர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
திணை: பெருந்திணை. பொருந்தாத காமநிலையை பற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.
துறை: குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.
அருளா யாகலோ கொடிதே; இருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
கார்எதிர் கானம் பாடினே மாக
நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்
5 கலுழ்ந்துவார் அரிப்பனி பூண்அகம் நனைப்ப
இனைதல் ஆனா ளாக, ’இளையோய்
கிளையை மன்எம் கேள்வெய் யோற்கு’என
யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள்
முகைபுரை விரலில் கண்ணீர் துடையா
10 யாம்அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள்இனி;
எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்
வரூஉம் என்ப வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே.
அருஞ்சொற்பொருள்:
2. சீறியாழ் = சிறிய யாழ்; செவ்வழி = மாலைப் பொழுதிற்குரிய பண்; யாழ - அசைச்சொல். 3. கார் = மழை; எதிர் = இலக்கு; கானம் = காடு. 4. நெய்தல் = ஆம்பல் மலர்; உண்கண் = மை தீட்டிய கண். 5. கலுழ்தல் = அழுதல், கலங்கல்; அரி = இடைவிடுகை; பனி = துளி; பூண் = அணிகலன். 6. இனைதல் = வருந்துதல். 7. கிளை = உறவு, நட்பு; கேள் = நட்பு. வெய்யோன் = விரும்பத்தக்கவன். 9. முகை = மொட்டு; புரை = ஒத்த. 10. கிளைஞர் = உறவோர். 11. நலன் = அழகு; நயந்து = விரும்பி. வயங்குதல் = ஒளி செய்தல், விளங்குதல்; 13. ஒல் - ஒலிக் குறிப்பு
கொண்டு கூட்டு: நின் கானம் பாடினேமாக. இனைதலானாளாக, யாம் தற்றொழுதனம் வினவ, தன் கண்ணீர் துடைத்து, பேகன் ஒருத்தி நலன் நயந்து நல்லூரின்கண் என்றும் வரூஉம் என்ப என்றாள்; அவளை அருளாயாதல் கொடிதெனக் கூட்டுக.
உரை: மாலைநேரத்தில் இருள் வந்ததால் சிறிய யாழை இசைத்து உன் மழைவளம் மிகுந்த காட்டை செவ்வழிப் பண்ணில் பாடினோம். அப்பாட்டைக் கேட்டவுடன், நீல நிறமும் மணமும் உடைய ஆம்பல் மலர் போன்ற மை தீட்டிய கண்களுடைய பெண் ஒருத்தி கலங்கி விட்டுவிட்டு உகுத்த கண்ணீர்த்துளிகள் அவள் அணிகலன்களை நனைத்தன. அவள் வருந்தி அழுதாள். ஆகவே, நாங்கள் “இளம்பெண்ணே! நீ எங்கள் நட்பை விரும்புபவனுக்கு (பேகனுக்கு) உறவினளோ?” என்று வணங்கிக் கேட்டோம். அவள் காந்தள் மொட்டுப் போன்ற தன் கை விரல்களால் கண்ணீரைத் துடைத்து, “ நான் அவனுடைய உறவினள் அல்ல; கேள்! இப்போழுது, என் போன்ற ஒருத்தியின் அழகை விரும்பி, புகழ் மிக்க பேகன் ஒலிக்கும் தேரில் முல்லையை வேலியாக உடைய நல்லூருக்கு எந்நாளும் வருவதாகக் கூறுகிறார்கள்” என்று கூறினாள். அவளுக்கு நீ அருள் செய்யாதிருப்பது கொடிது.
Tuesday, January 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment