Monday, January 4, 2010

136. வாழ்த்தி உண்போம்!

பாடியவர்: துறையூர் ஓடை கிழார். துறையூர் என்பது காவிரிக்கரையில் உள்ள ஒரு ஊர். ஓடை கிழார் துறையூரைச் சார்ந்தவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: ஒடை கிழார் மிகுந்த வறுமையில் இருந்த பொழுது, தன் நிலையைக் கூறி ஆய் அண்டிரனிடம் பரிசில் கேட்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.

யாழ்ப்பத்தர்ப் புறம்கடுப்ப
இழைவலந்த பஃறுன்னத்து
இடைப்புரைபற்றிப் பிணிவிடாஅ
ஈர்க்குழாத்தொடு இறைகூர்ந்த
5 பேஎன்பகையென ஒன்றுஎன்கோ?
உண்ணாமையின் ஊன்வாடித்
தெண்ணீரின் கண்மல்கிக்
கசிவுற்றஎன் பல்கிளையொடு
பசிஅலைக்கும் பகைஒன்றுஎன்கோ?
10 அன்னதன்மையும் அறிந்துஈயார்
நின்னதுதாஎன நிலைதளர
மரம்பிறங்கிய நளிச்சிலம்பின்
குரங்குஅன்ன புன்குறுங்கூளியர்
பரந்தலைக்கும் பகைஒன்றுஎன்கோ?
15 ஆஅங்கு எனைப்பகையும் அறியுநன்ஆய்
எனக்கருதிப் பெயர்ஏத்தி
வாயாரநின் இசைநம்பிச்
சுடர்சுட்ட சுரத்துஏறி
இவண்வந்த பெருநசையேம்;
20 எமக்குஈவோர் பிறர்க்குஈவோர்
பிறர்க்குஈவோர் தமக்குஈபவென
அனைத்துஉரைத்தனன் யான்ஆக
நினக்குஒத்தது நீநாடி
நல்கினை விடுமதி பரிசில் அல்கலும்
25 தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை
நுண்பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே.

அருஞ்சொற்பொருள்:
1.பத்தர் = குடுக்கை; கடுப்ப = ஒப்ப. 2. இழை = நூற்கயிறு; வலந்த =சூழ்ந்த; துன்னம் = தையல். 3. புரை = இடுக்கு. 4. குழாம் = கூட்டம்; இறை கூர்ந்த = தங்கிய. 5. என - அசை. 8. கசிவு = வருத்தம். 9. அலைத்தல் = வருத்துதல். 12. பிறங்குதல் = நிறைதல்; நளி = குளிர்ச்சி; சிலம்பு = மலை. 13. புன்மை = இழிவு; கூளியர் = வழிப்பறி செய்வோர். 14. பரத்தல் = மிகுதல். 15. ஆஅங்கு - அசை. 16. ஏத்துதல் = புகழ்தல். 17. நம்பி = விரும்பி. 18. சுரம் = வழி; ஏறுதல் = கடத்தல். 19. நசை = விருப்பம். 23. நாடி = ஆராய்ந்து. 24. அல்கல் = நாள்; அல்கலும் = நாள்தோறும். 26. ஏத்துதல் = வாழ்த்தல். 27. நல்குதல் = ஈதல்.

கொண்டு கூட்டு: பெரும! நீ நல்கிய வளத்தை அல்கலும் ஏத்தி உண்போம்; நினக் கொத்தது நீ நாடிப் பரிசில் நல்கினை விடுமதி எனக் கூட்டுக.

உரை:யாழின் பத்தர் என்னும் உறுப்பின் பின் பக்கத்தில் உள்ள பல தையல்களைப் போல், என் துணியின் தையல்களின் இடைவெளியில் உள்ள இடுக்குகளில் பற்றிப் பிடித்துக்கொண்டு அங்கே தங்கியிருக்கும் ஈர்களின் கூட்டத்தோடு கூடிய பேன்களை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ? உண்ணாததால் உடல் வாடி, கண்களில் நீர் பெருகி இருக்கும் என்னையும் என் சுற்றத்தாரையும் வருத்தும் பசியை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ? எங்கள் நிலையை அறிந்தும் எங்களுக்கு ஒன்றும் அளிக்காமல், ”உன்னிடத்து உள்ளதைத் தா” என்று கூறி எங்களை நிலை தடுமாறுமாறு வருத்தும், மரங்கள் நிறைந்த குளிர்ந்த மலையில் வாழும் குரங்குகள் போல் பரவி வந்து வழிப்பறி செய்யும் இழிந்த குணமுள்ள குள்ளரை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ?

எனக்குரிய எல்லாப் பகைகளையும் அறிபவன் ஆய் அண்டிரன் என்று எண்ணி, உன் பெயரைப் புகழ்ந்து, உன் புகழை வாயார வாழ்த்துவதை விரும்பி, வெயில் சுட்டெரிக்கும் வெப்பமான வழிகளைக் கடந்து பெரும் ஆசையோடு இங்கே வந்துள்ளோம். எங்களுக்குப் பரிசு அளிப்பவர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாகவே பிறருக்கு ஈகை செய்பவர்கள். மற்றவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவி செய்பவர்கள் (அவர்களிடத்திருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொடுப்பதால்) தமக்கே ஈகை செய்பவர்கள் என்றுதான் நான் கூறுவேன். ஆராய்ந்து, உனக்குத் தகுந்த முறையில் நீ எங்களுக்குப் பரிசளித்து எங்களை அனுப்புவாயாக. குளிர்ந்த நீரோடுகின்ற வாய்த்தலைகளையுடைய துறையூரில் உள்ள ஆற்று மணலினும் அதிக நாட்கள் நீ வாழ்க என நாள் தோறும் வாழ்த்தி, நீ கொடுக்கும் செல்வத்தை வைத்து நாங்கள் உண்போம்.

சிறப்புக் குறிப்பு: ஈகை என்னும் அதிகாரத்தில் வறியவர்களுக்கு அளிப்பதுதான் ஈகை. மற்றவர்களுக்குக் கொடுப்பது கைமாறு கருதி (எதாவது ஒரு பயனை எதிர்பார்த்து) அளிப்பதாகும் என்று கூறுகிறார்.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. (குறள் - 221)

இதே கருத்தை துறையூர் ஓடை கிழார் இப்பாடலில் குறிப்பிடுவது ஒப்பு நோக்கத்தக்கதாகும்

No comments: