Monday, January 4, 2010

137. நீ வாழ்க! நின்பெற்றோரும் வாழ்க!

பாடியவர்: ஒருசிறைப் பெரியனார். இவர் ஒரு சிறைப் பெயரினார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் நாஞ்சில் நாட்டைச் சார்ந்தவர். நாஞ்சில் வள்ளுவனைப் பாடுவதில் மிகுந்த விருப்பமுடையவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான். குறுந்தொகையில் 272 - ஆம் பாடலையும் நற்றிணையில் 121 -ஆம் பாடலையும் இவர் இயற்றி உள்ளார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் நாடு என்பது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலை சூழ்ந்து உள்ள பகுதியைக் குறிக்கும். சங்ககாலத்தில், வள்ளுவன் என்ற ஒரு குறுநில மன்னன் இப்பகுதியை ஆண்டான். அப்பொழுது நாஞ்சில் நாடு சேர நாட்டைச் சார்ந்த பகுதியாக இருந்ததால், நாஞ்சில் வள்ளுவன் சேர மன்னர்களைப் பெரிதும் மதித்து அவர்களுக்கு உறுதுணையாக ஆட்சி புரிந்தான். இவன் கொடையிலும் வலிமையிலும் சிறந்தவன். ஒரு சிறைப் பெரியனார், மருதன் இளநாகனார், அவ்வையார் மற்றும் கருவூர் கதப் பிள்ளை ஆகியோர் நாஞ்சில் வள்ளுவனைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

பாடலின் பின்னணி: நாஞ்சில் வள்ளுவனைப் பாடுவதில் மட்டுமே ஒரு சிறைப் பெரியனார் ஆர்வம் உடையவராக இருந்தார். இப்பாடல் நாஞ்சில் நாட்டு வளத்தைப் பாராட்டுவதாகவும் நாஞ்சில் வள்ளுவனைப் புகழ்வதாகவும் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி; பரிசில் துறையும் ஆம். இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும். புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல் பரிசில் துறை எனப்படும்.

இரங்கு முரசின் இனம்சால் யானை
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர்யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அறியு மோனே; துவன்றிய
5 கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
கழைக்கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண்ணன்ன மலர்பூக்குந்து
கருங்கால் வேங்கை மலரின் நாளும்
10 பொன்னன்ன வீசுமந்து
மணியன்னநீர் கடற்படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் அருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர்நின் தந்தை
15 தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!

அருஞ்சொற்பொருள்:
1.இரங்கல் = ஒலித்தல்; இனம் = கூட்டம்; சால் = மிகுதி, நிறைவு. 2. முந்நீர் = கடல்; ஏணி = எல்லை; விறல் = வெற்றி. 4. துவன்றல் = நிறைதல். 5. கயம் = நீர் உள்ள பள்ளம்; வறம் = வறட்சி. 6. கழை = மூங்கில், கரும்பு, தண்டு;ஒலித்தல் = தழைத்தல்; ஒலிக்குந்து = தழைக்கும். 7. கொண்டல் = மேகம். 8. பூக்குந்து = பூக்கும். 10. வீ = மலர், மகரந்தம். 11.மணி = நீலமணி; படர்தல் = செல்லுதல். 12. அரை = அடியிடம்; படப்பை = கொல்லை, தோட்டம், பக்கத்துள்ள இடம், ஊர்ப்புறம், நாடு. 15. பயத்தல் = பெறுதல் (பிறப்பித்தல்).

உரை: ஒலிக்கும் முரசும், நிறைந்த யானைக் கூட்டமும், கடலை எல்லையாகவும் கொண்டு வெற்றியுடன் பொருந்திய மூவேந்தரைப் பாடுவதில் நான் ஒருவனே அவா இல்லாதவனாக இருக்கிறேன். முன்னரே இருந்து உன்னையே நான் அறிவேன். நீர் நிறைந்த பள்ளத்தில் விதைத்த வித்து வறட்சியால் சாவது இல்லை. அது கரும்பைப் போல் தழைக்கும். கோடைக் காலத்தில் வெயில் காய்ந்தாலும், மேகம் முகந்த நீர் மழையாகப் பெய்வதால் மகளிரின் கண்கள் போன்ற மலர்கள் பூக்கும். கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் பொன்போன்ற மலர்களின் மகரந்தத் தூள்களைச் சுமந்து நீலமணி போன்ற நீர் கடலுக்குச் செல்லும். செம்மையான மலைப் பக்கங்களையுடைய நாஞ்சில் நாட்டு அரசே! சிறிய வெண்ணிற அருவிகளும் பெரிய மலைகளும் உள்ள நாட்டை உடையவனே! நீ வாழ்க! உன்னைப் பெற்ற உன் தந்தையும் தாயும் வாழ்க!

No comments: