பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: ஆய் அண்டிரன் இரவலர்க்கு எண்ணற்ற யானைகளைப் பரிசாக வழங்குவதைக் கண்ட முடமோசியார், “ஆயே! நின்னையும் நின் மலையையும் பாடி வரும் பரிசிலர்க்கு நீ மிகுந்த யானைகளைப் பரிசாக அளிக்கிறாய். அவற்றின் தொகையை நோக்கின், நீ முன்பு கொங்கரொடு போரிட்ட காலத்தில் அவர்கள் உன்னிடம் தோற்று உயிர் தப்பி மேற்குக் கடற்கரைப் பக்கம் ஓடிய பொழுது அவர்கள் விட்டுச் சென்ற வேல்களினும் அதிகமாக உள்ளன. உன் நாட்டில் ஒவ்வொரு இளம்பெண் யானையும் கருவுற்றால் பத்து குட்டிகளை ஈனுமோ?” என்று தன் வியப்பை இப்பாடலில் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும்நின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்துநீ அளித்த
5 அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!
அருஞ்சொற்பொருள்:
1.கொடு = வளைவு; பூண் = அணிகலன். 2. பிடி = பெண் யானை; சூல் = கருப்பம். 4. கரவு = மறைவு. 6. ஞான்று = காலம். 7. தலை = இடம்; தலைப் பெயர்தல் = புறங்காட்டி ஓடுதல்.
உரை: விளங்கும் மணிகளால் செய்யப்பட்ட வளைந்த அணிகலன்களை அணிந்த ஆய்! உன் நாட்டில், ஒரு இளம்பெண் யானை கருவுற்றால் பத்து குட்டிகளைப் பெறுமோ? உன்னையும் உன் மலையையும் பாடி வருபவர்களுக்கு இன்முகம் மறைக்காமல், மகிழ்ச்சியொடு நீ அளித்த உயர்ந்த யானைகளின் தொகையைக் கணக்கிட்டால், நீ கொங்கரை மேற்குக் கடற்கரைப் பக்கம் ஓட்டிய பொழுது அவர்கள் புறங்காட்டி ஓடிய சமயத்தில் விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்குமே!
Monday, November 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment