Monday, December 7, 2009

131. குன்றம் பாடின கொல்லோ?

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஆயின் நாட்டில், மலைப்பகுதியில் இருந்த காடுகளில் மிகுந்த அளவில் யானைகள் இருப்பதை முடமோசியார் கண்டார். அந்த யானைகளைக் கண்டவுடன், இரவலர்க்கு எண்ணற்ற யானைகளைப் பரிசாக ஆய் அண்டிரன் அளிப்பதை நினைவு கூர்ந்தார். அந்நிலையில், “இம்மலையும் ஆய் அண்டிரனைப் புகழ்ந்து பாடியதால் அதிலுள்ள காடுகள் இத்தனை யானைகளைப் பரிசாகப் பெற்றதோ” என்று முடமோசியார் தனக்குள் வியப்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


மழைக்கணம் சேக்கும் மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ;
களிறுமிக உடையஇக் கவின்பெறு காடே?

அருஞ்சொற்பொருள்:
1.மழை = மேகம்; கணம் = கூட்டம்; சேக்கும் = தங்கும். 2. வழை = சுரபுன்னை; வாய் = தவறாத. 4. கவின் = அழகு.

கொண்டு கூட்டு: களிறுமிக உடையஇக் கவின்பெறு காடே; குன்றம் பாடின கொல்லோ?

உரை: மிகுந்த யானைகள் உள்ள அழகான காடுகள் இம்மலையில் உள்ளனவே! மேகங்கள் கூட்டமாகத் தங்கும் பெரிய இம்மலைக்கு உரிமையுடையவனும் சுரபுன்னைப் பூவாலான மாலையைத் தலையில் அணிந்தவனும் குறி தவறாத வாளையுடையவனுமாகிய ஆய் அண்டிரனை இம்மலை பாடிற்றோ?

சிறப்புக் குறிப்பு: களிறு என்ற சொல் ஆண் யானையைக் குறிக்கும் சொல். ஆனால், இப்பாடலில் களிறு என்ற சொல் பொதுவாக யானையைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

No comments: