Monday, November 23, 2009

129. வேங்கை முன்றில்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஆய் அண்டிரன் தன்னிடம் வரும் பரிசிலர்க்கு யானைகளை அளிப்பதைக் கண்ட முடமோசியார், வானம் முழுதும் விண்மீன்கள் பூத்து விளங்கினால் அவற்றின் தொகை ஆய் பரிசிலர்க்கு வழங்கும் யானைகளின் தொகைக்கு நிகராகலாம் என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்
தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்;
5 ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்;
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவின்று
வானம் மீன்பல பூப்பின் ஆனாது
ஒருவழிக் கருவழி யின்றிப்
பெருவெள் என்னில் பிழையாது மன்னே.


அருஞ்சொற்பொருள்:
1.குறி = குறுகிய; இறை = இறப்பு (சுவரைத் தாண்டி நிற்கும் கூரைப் பகுதி). 2. வாங்கு = வளைவு; அமை = மூங்கில்; பழுனுதல் = முதிர்தல்; தேறல் = மது. 3. முன்றில் = முற்றம்; அயர்தல் = விளையாடுதல். 6. கரவு = மறைவு. 7. ஆனாது = அளவிட முடியாது. 8. கருவழி இன்றி = கரிய இடம் இல்லாமல். 9. மன் - அசைச் சொல்.

உரை:குறுகிய இறப்பையுடைய சிறிய வீடுகளில் வாழும் குறவர்கள் வளைந்த மூங்கில் குழாயில் வார்த்திருந்து முதிர்ந்த மதுவை நுகர்ந்து மகிழ்ந்து, வேங்கை மரங்களுடைய முற்றத்தில் குரவைக் கூத்தாடும், இனிய சுளைகளையுடைய பலா மரங்கள் உள்ள பெரிய மலைக்கு உரிமையாளனாகிய ஆய் அண்டிரன் கொல்லும் போரைச் செய்யும் தலைவன். அவன் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகை எண்ணிலடங்காது. மேகம் மறைக்காமல், வானத்தில் சிறிதளவும் கரிய இடமின்றி எல்லா இடத்திலும் விண்மீன்கள் தோன்றி, வானமே வெண்மையாகக் காட்சி அளித்தால் அவ்விண்மீன்களின் தொகை ஆய் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகைக்கு நிகராகலாம்.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், ஆய் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகை வானத்தில் உள்ள விண்மீன்களைவிட அதிகம் என்று ஏணிச்சேரி முடமோசியார் கூறுவது போல், 123-ஆவது பாடலில் மலையமான் திருமுடிக்காரி இரவலர்க்கு அளித்த தேர்களின் எண்ணிக்கை முள்ளூர் மலைமீது பெய்த மழைத்துளிகளைவிட அதிகம் என்று கபிலர் கூறியிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.

No comments: