Monday, November 23, 2009

126. கபிலனும் யாமும்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த கொற்கையின் அருகாமையில் உள்ள மாறோக்கம் என்ற ஊரைச் சார்ந்தவர். பெண்கள் அடையும் பசலை நோயைப்பற்றி நயமுறப் பாடியதால் இவர் நப்பசலையார் என்று அழைக்கப்பட்டார் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் தெரியவில்லை. புறநானூற்றில் இவர் இயற்றிய ஏழு பாடல்கள் (37, 39, 126, 174, 226, 230, 383) உள்ளன.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 121-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் மலையமான் திருமுடிக்காரியின் முன்னோர்களின் பெருமையையும் திருமுடிக்காரியின் பெருமையையும் புகழ்ந்து பாடுகிறார். சேர மன்னர்கள் மேற்குக் கடலில் கப்பலோட்டத் தொடங்கிய பிறகு மற்றவர்கள் அக்கடலில் தம் கப்பலை ஓட்டிச் செல்ல அஞ்சுவது போல், புலவர்களில் சிறந்தவரான கபிலர் மலையமானைப் புகழ்ந்து பாடிய பிறகு அது போல் யாராலும் இனி பாட முடியாது என்றாலும், தன் வறுமையின் காரணத்தால் தன்னால் முடிந்த அளவு மலையமானைப் புகழ்ந்து பாட வந்ததாக இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
5 வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே
நின்வயிற் கிளக்குவம் ஆயின் கங்குல்
துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்
பறைஇசை அருவி முள்ளூர்ப் பொருந!
தெறலரு மரபின்நின் கிளையொடும் பொலிய
10 நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
புலன்அழுக்கு அற்ற அந்த ணாளன்
இரந்துசென் மாக்கட்கு இனிஇடன் இன்றிப்
பரந்துஇசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடல்
15 பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப்
பிறகலம் செல்கலாது அனையேம்; அத்தை;
இன்மை துரப்ப இசைதர வந்துநின்
வண்மையின் தொடுத்தனம் யாமே; முள்எயிற்று
அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப
20 அண்ணல் யானையொடு வேந்துகளத்து ஒழிய
அருஞ்சமம் ததையத் தாக்கி நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
1.ஒன்னார் = பகைவர்; ஒடை = யானையின் நெற்றிப்பட்டம். 2. சென்னி = தலை; பொலிவு = அழகு; தைத்தல் = இடுதல், பொருத்துதல், அலங்கரித்தல். 3. விழு = சிறந்த; சீர் = தலைமை. 4. ஒடா = புறமுதுகு காட்டி ஒடாத; பூட்கை = கொள்கை; உரம் = வலிமை; மருகன் = வழித்தோன்றல். 5. வல்லேம் = வலிமை (திறமை) இல்லாதவர்கள்; வல் = விரைவு. 6. கிளத்தல் = கூறுதல்; கங்குல் = இரவு. 7. துயில் = உறக்கம்; மடி = அடங்குதல்; தூங்கிருள் = மிகுந்த இருள்; இறும்பு = சிறு காடு. 8. பொருநன் = அரசன். 9. தெறல் = சினத்தல், அழித்தல்; மரபு = பெருமை; பொலிதல் = சிறத்தல், விளங்குதல். 10. பரத்தல் = மிகுதல். 11. புலன் = அறிவு. 13. அதற்கொண்டு = அக்காலந் தொடங்கி. 14. வானவன் = சேரன்; குட = மேற்கு. 15. பொலம் = பொன்; நாவாய் = மரக்கலம் (கப்பல்). 16. அத்தை - அசைச் சொல்.17. துரப்புதல் = துரத்துதல். 18. தொடுத்தல் = தொடங்குதல்; எயிறு = பல். 19. அரவு = பாம்பு; எறிதல் = ஊறு படுத்தல்; உரும் = இடி; இயம்பல் = ஒலித்தல். 21. சமம் = போர்; ததைதல் = சிதறுதல்; நன்று = பெரிது. 22. நண்ணுதல் = நெருங்குதல் (பொருந்துதல்); தெவ்வர் = பகைவர்; தாங்குதல் = தடுத்தல். 23. படப்பை = பக்கத்துள்ள இடம்

கொண்டு கூட்டு: உரவோன் மருக, பொருந, நாடு கிழவோய்; நின்வயிற் கிளக்குவமாயின் அந்தணாளன் கிளையொடும் பொலிய இசை நிற்கப் பாடினன்; வானவன் குடகடல்
பொலந்தரு நாவாய் ஓட்டிய அதற்கொண்டு பிறர் கலம் செல்லாது அனையேம் யாம்; இன்மை துரப்ப இசைதர வந்து நின் வண்மையிற் சில தொடுத்தேம் யாம் எனக் கூட்டுக.

உரை: பகைவர்களுடைய யானைகளின் நெற்றிப் பட்டத்தில் இருந்த பொன்னால் செய்த தாமரைப் பூ போன்ற அணிகலன்களைப் பாணர்களின் தலையில் அணிவித்து அழகு செய்த பெருமையும், சிறந்த தலைமையும், புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையும் உடைய வலியவர்களின் வழித்தோன்றலே! யாம் எதையும் திறம்படக் கூறும் ஆற்றல் இல்லாதவராக இருப்பினும் விரைவாக உன்னிடத்து வந்து உன் புகழைச் சொல்லுவேம் என்று இங்கு வந்துள்ளோம். இரவு ஓரிடத்தே அடங்கி உறங்குவது போன்ற அடர்ந்த இருளுடைய சிறுகாடுகளும் பறையொலி போலும் ஒலி பொருந்திய அருவியையுமுடைய முள்ளூர் வேந்தே! அழித்தற்கு அரிய பெருமையுடைய உன் சுற்றத்துடன் நீ விளங்குவாயாக.

இவ்வுலக மக்கள் எல்லாரினும் தூய அறிவுடைய அந்தணனாகிய கபிலன், இரந்து செல்லும் பரிசிலர்கள் சொல்வதற்கு இனி இடம் இல்லை என்று கூறுமளவுக்கு உன் பெருகிய புகழ் நிலைத்து நிற்குமாறு பாடிவிட்டான். சினமிக்க படையுடைய சேரன் மேற்குக் கடலில் பொன் கொண்டு வரும் கலத்தைச் செலுத்திய காலந் தொடங்கி அவ்விடத்துப் பிறர் கலம் செல்வதில்லை. அதுபோல், கபிலன் உன்னை புகழ்ந்து பாடிய பிறகு யாம் பாட முடியாத நிலையில் உள்ளேம். ஆயினும், வறுமையால் துரத்தப்பட்டு உன் புகழால் இழுக்கப்பட்டு உன் வள்ளல் தன்மையைப்பற்றி சில சொல்லத் தொடங்கினோம். முள்போன்ற பல்லையுடைய பாம்பை நடுங்க வைக்கும் இடிபோல் முரசு ஒலிக்க, யானையொடு அரசும் களத்தில் அழியுமாறு பொறுத்தற்கரிய போரைச் சிதறடித்துப் பொருந்தாப் பகைவரைத் தடுக்க வல்ல, பெண்ணையாற்றின் அழகிய பக்கங்களையுடைய நாட்டுக்குத் தலைவனே!

No comments: