Tuesday, November 17, 2009

124. வறிது திரும்பார்!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 121-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: இப்பாடலிலும் கபிலர் திருமுடிக்காரியின் வள்ளல் தன்மையைப் புகழ்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர்; நெறிகொளப்
பாடுஆன்று இரங்கும் அருவிப்
5 பீடுகெழு மலையற் பாடி யோரே.

அருஞ்சொற்பொருள்:
1.நாள் = நல்ல நாள்; புள் = பறவை; தட்ப = தடுக்க. 2. பதன் = பக்குவம்; திறன் = தன்மை, வகை. 3. நெறிகொள் = ஒழுங்கு பட. 4. பாடு = ஒசை; ஆன்று = நிறைந்தது; இரங்கும் = ஒலிக்கும். 5. பீடு = பெருமை; கெழுதல் = பொருந்துதல்.

கொண்டு கூட்டு: மலையற் பாடியோர் வறிது பெயர்குவர் அல்லர் எனக் கூட்டுக.

உரை: நல்ல நாளன்று போகாவிட்டாலும், போகும் பொழுது கெட்ட சகுனங்களைக் குறிக்கும் பறவைகள் குறுக்கே வந்தாலும், மன்னனைச் சந்திக்கூடாத நேரத்தில் அவன் அவைக்குள் நுழைந்தாலும், தன்மையற்ற சொற்களைச் சொன்னாலும் இடைவிடாத ஓசை நிறைந்த அருவிகளுடைய பெருமை பொருந்திய மலையையுடைய திருமுடிக்காரியைப் பாடியோர் (பரிசு பெறாமல்) வெறுங்கையோடு திரும்ப மாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு: திறன் அறிந்து பேச வேண்டும் என்ற கருத்தைத் திருவள்ளுவர் சொல்வன்மை என்ற அதிகாரத்தில் வலியுறுத்தியிருப்பது இங்கு ஒப்பு நோக்குதற்குரியது.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூங்கு இல். (குறள் - 644)

பொருள்: சொல்லும் சொல்லைத் தன்மை அறிந்து சொல்லுக; அப்படிச் சொல்வதைவிட மேலான அறமும் பொருளும் இல்லை. கேட்பவர்களின் தன்மையறிந்து அவர்கள் விரும்புமாறு பேசுவது அறம்; திறமான பேச்சால் தான் நினைத்த காரியத்தைச் சாதிக்க முடிவதால் பொருள் அல்லது இலாபம் கிடைப்பதற்கு வழியுமுண்டு.

No comments: