பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. திருக்கோவலூருக்கே மேற்கே பெண்ணையாற்றின் தென்கரைப் பகுதியும் தென்பகுதியும் சங்க காலத்தில் மலாடு என்ற பெயரால் அழைக்கப்பட்டது. மலாடு என்ற பகுதிக்குக் கோவலூர் தலைநகராக இருந்தது. கபிலர் காலத்தில் கோவலூரைத் தலைநகராகக்கொண்ட மலாடு என்ற பகுதியை ஆட்சி புரிந்த குறுநில மன்னனின் பெயர் மலையமான் திருமுடிக்காரி. அவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன். அவன் காரி என்றும் மலையமான் என்றும் கோவற்கோமான் என்றும் அழைக்கப்பட்டான்.
பெண்ணையாற்றுக்குத் தென்மேற்கே உள்ள முள்ளூர் என்ற ஊரும் காரிக்குச் சொந்தமானதாக இருந்தது. ஓரு சமயம் அதனைக் கைப்பற்ற ஆரிய மன்னர் பெரிய வேற்படையோடு வந்து முற்றுகையிட்டனர். காரி அவர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றான். இச்செய்தி, “ ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையன் ஒருவேற் கோடி ஆங்கு” என்ற நற்றிணைப் (பாடல் 170) பாடலிலிருந்து தெரிய வருகிறது.
மலையமான் திருமுடிக்காரி தமிழ் மூவேந்தருடன் நட்பு கொண்டிருந்தான். அவர்களுக்கு வேண்டும் பொழுது துணையாகப் போர்புரிந்தான். உதாரணமாக, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் போரிட்ட பொழுது, திருமுடிக்காரி சோழனுக்குத் துணையாக இருந்து சேரனை எதிர்த்துப் போர் செய்தான். திருமுடிக்காரி அதியமானால் கோவலூர் என்ற ஊரில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டதாக வரலாற்றில் காண்கிறோம் .
பாடலின் பின்னணி: ஒரு சமயம், கபிலர் மலையமான் திருமுடிக்காரியைக் காணச் சென்றார். எல்லாப் புலவர்களுக்கும் சிறப்புச் செய்வதைப் போலவே காரி கபிலருக்கும் சிறப்புச் செய்தான். அது கண்ட கபிலர், புலவரின் தகுதி அறிந்து சிறப்புச் செய்தல் வேண்டும் என்று காரிக்கு இப்படலில் அறிவுரை கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி . அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.
ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
5 அதுநற்கு அறிந்தனை ஆயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!
அருஞ்சொற்பொருள்:
1.உள்ளி = நினைத்து. 3. வரிசை = தகுதி. 4. தோன்றல் = அரசன், தலைவன். 6. மதி - அசைச்சொல்
உரை: ஒரு திசையில் உள்ள வள்ளல் ஒருவனை நினைத்து, பல (நான்கு) திசைகளிலிருந்தும் பரிசுபெற விரும்பும் மக்கள் பலரும் வருவர். பெரிய வண்மையுடைய அரசே! (தகுதியை ஆராயமல்) அவர்களுக்குப் பரிசுகள் அளிப்பது மிகவும் எளிது. அவர்களின் தகுதியை அறிந்து அவர்களுக்குப் பரிசுகள் அளிப்பது அரிய செயலாகும். அவர்களின் தகுதியை நீ நன்கு அறிந்தாயானால், புலவர்கள் அனைவரையும் ஒரே தரமாக (பொது நோக்காக) மதிப்பிடுவதைத் தவிர்ப்பாயாக.
சிறப்புக் குறிப்பு: பரிசளிப்பவர்கள் பரிசு பெறுபவர்களின் தகுதியைஆராய்ந்து பரிசளிக்க வேண்டும் என்ற கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். (குறள் - 528)
பொருள்: அரசன் எல்லாரையும் ஒரே தன்மையராகப் பார்க்காமல், அவரவர் தகுதிக்கேற்ப வரிசைப்படுத்திப் பார்ப்பானானால், அச்சிறப்பை நோக்கி அவனை விடாது நெருங்கி வாழும் சுற்றத்தார் பலராவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment