Monday, November 23, 2009

127. உரைசால் புகழ்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இவர் இயற்பெயர் மோசி. இவர் முடவராக இருந்ததால் முடமோசியார் என்று அழைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் உறையூரின் ஒரு பகுதியாக இருந்த ஏணிச்சேரி என்னும் ஊரைச் சார்ந்தவர் . புறநானூற்றில் இவர் பதின்மூன்று பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் பன்னிரண்டு பாடல்கள் ஆய் அண்டிரன் என்ற வள்ளலைப் புகழந்து பாடப்பட்டவையாகும்.
பாடப்பட்டோன்: வேள் ஆய் அண்டிரன். பாரியைப் போல் ஆய் அண்டிரனும் வேளிர் குலத்தைச் சார்ந்தவன். இவன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதிய மலை அடிவாரத்தில் இருந்த குடி என்னும் ஊரைத் தலநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த குறுநில மன்னன். இவனும் கடையேழு வள்ளல்கலில் (அதியமான், பாரி, காரி, ஓரி, ஆய், நள்ளி, பேகன்) ஒருவன். இவனை, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர் ஒடைக் கிழார், குட்டுவன் கீரனார், உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், பரணர், காரிக் கண்ணனார் முதலிய புலவர்கள் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

ஆய் அண்டிரன் கொங்கரைப் போரில் வென்று அவர்களை மேற்குக் கடற்கரையிடத்தே ஓடி ஒளியுமாறு செய்ததாக இலக்கியத்திலும் வரலாற்றிலும் குறிப்புகள் உள்ளன.

பாடலின் பின்னணி: இப்பாடலில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆயின் கொடைச் சிறப்பைப் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: கடைநிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல் கடைநிலை எனப்படும்.

களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடுஇன் பனுவல் பாணர் உய்த்தெனக்
களிறில ஆகிய புல்அரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
5 ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்;
சுவைக்குஇனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவுஇன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய
10 முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே.

அருஞ்சொற்பொருள்:
1.கோடு = தண்டு; சீறியாழ் = சிறிய யாழ். 2. பனுவல் = பாட்டு; உய்த்தல் = கொண்டு போதல். 3. அரை = அடியிடம். வெளில் = யானை கட்டும் தறி. 4. மஞ்ஞை = மயில்; கணம் = கூட்டம்; சேப்ப = தங்க. 6. சாயின்று = தளர்ந்தது, குன்றியது; கோயில் = அரண்மனை 7. குய் = தாளிப்பு; அடிசில் = உணவு. 8. ஈவு = கொடை; அருத்துதல் = புசிப்பு. 9. ஒரீஇய = நீங்கிய. 10. நகர் = அரண்மனை.

கொண்டு கூட்டு: ஆஅய் கோயில் சாயின்று என்ப; ஆயினும், முரைசுகெழு செல்வர் நகர் போலாதே எனக் கூட்டுக.

உரை: களாப்பழம் போன்ற கரிய நிறத் தண்டினையுடைய சிறிய யாழுடன் இனிய பாட்டைப் பாடும் பாணர்கள், ஆய் பரிசாக அளித்த யானைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு போனதால் யானை கட்டும் நெடிய கட்டுத்தறிகள் வெறுமையாகக் காட்சி அளிக்கின்றன. அவ்விடத்து இப்பொழுது காட்டு மயில்கள் தம் கூட்டத்தோடு தங்கி இருக்கின்றன. பிறருக்கு அளிக்க இயலாத மங்கல அணிகலன்கள் மட்டுமே அணிந்த மகளிர் ஆயின் அரண்மனையில் உள்ளனர். இவ்வாறு இருப்பதால், ஆயின் அரண்மனை தன் பெருமையில் குறைந்தது என்று கூறுவர். ஆனால், இனிய சுவையுடன் தாளித்த உணவை பிறர்க்கு அளிக்காமல் தாம் மட்டும் வயிறு நிரம்ப உண்டு, மிகுந்த புகழை இழந்த முரசுடைய செல்வர்களின் அரண்மனைகள் ஆயின் அரண்மனைக்கு ஒப்பாகாது.

சிறப்புக் குறிப்பு: பிறர்க்கு உதவி செய்வதால் தனக்கு ஒரு கேடு வருவதாக இருந்தாலும், தன்னை விற்றாவது உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை,

ஒப்புர வினால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. (குறள் 220)

என்ற குறளில் வள்ளுவர் கூறுவதைப் போலவே, ஆய் தன் யானைகளை எல்லாம் பரிசிலர்க்கு அளித்து, தன் செல்வத்தையும் இழந்ததாக இப்பாடலில் ஏணிச்சேரி முடமோசியார் கூறுகிறார். வள்ளுவர் குறளும் ஆயின் செயலும் ஒப்பு நோக்கத் தக்கவையாகும்.

மற்றொரு குறளில்,

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். (குறள் - 232)

என்று இரவலர்க்கு ஈகை செய்வதே ஒருவருடைய புகழுக்குக் காரணம் என்பதை வள்ளுவர் கூறுகிறார். ஆய் அண்டிரனின் புகழுக்கும் அவன் ஈகைதான் காரணம் என்று இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது.

No comments: